வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த 500 ஆண்டு பழமையானதாகக் கூறப்படும் மரகத லிங்கத்துடன் கூடிய சிலையை காவல் துறையை மீட்டனர்.
சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சை கல் லிங்கம் ஒன்றை, பதுக்கி வைத்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட உள்ளதாக, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில், போலீசார் சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் கடத்தல்காரர்களை தொடர்பு கொண்டனர்.
சென்னை வெள்ளவேடு புது காலனியைச் சேர்ந்த பக்தவத்சலம், புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் ஆகியோர் இச்சிலையின் மதிப்பு 25 கோடி ரூபாய் என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தனிப்படை போலீசார் இச்சிலையை கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்டு, இருவரையும் கைது செய்தனர்.
மேற்படி, பச்சை லிங்கத்தை உலோகத்தால் ஆகிய நாகாபரணம் தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வாருடன் சுமார் 29 செ.மீ உயரம், 18 செ.மீ அகலம், பீடத்தின் அடியாக சுற்றளவு சுமார் 25 செ.மீ உள்ளது. சுமார் 9.800 கிராம் எடையுடன் லிங்கம் உள்ளது.
மேலும், இச்சிலையானது 500 ஆண்டுகால தொன்மையானது என்றும் கூறப்படுகிறது.