சதீஷ் கிருஷ்ணபிள்ளை
அதுவொரு ஆழ்கடல். அங்கு சுறாக்கள் மோதிக்கொள்ளும். இந்த மோதலில் சிறு மீன்களுக்கு தான் அதிக துயரம். மோதலில் அலையடிக்கும். சிறுமீன்கள் அடித்துச் செல்லப்படும். நினைத்தவாறு வாழமுடியாது.
உயிரோடு இருக்க வேண்டும். அதற்காக அலையடிக்கும் திசையில் நீந்தத் தெரிதல் அவசியம். நடுநிலையாக இருக்கும் சிறுமீன்களும் நிலைமாறலாம். ஏந்த சுறா பலவானாக இருக்கிறதோ, அதன் பக்கம் சேரலாம்.
சரியாக, கூறுவதனால் அமெரிக்கா, ரஷ்யா என்ற சுறாக்களின் சண்டையில் சிக்கயுள்ளன பின்லாந்து, சுவீடன் ஆகிய சிறுமீன்கள். நடுநிலையாக இல்லாமல், பக்கம் சேருதல் என்பது பிழைத்தலின் தந்திரம் எனலாம். வெளியில் இருந்து பார்த்தால் சிலருக்கு பிடிக்கும். பலருக்குப் பிடிக்காது.
பக்கம் சேரும் தரப்பின் கண்ணோட்டத்திலும் நோக்க வேண்டும். அப்போது தான், அரசியல் புரியும்.
பிழைத்தலுக்கான தந்திரத்தின் நியாயம் புரியும். நமது கதையில், பிரதான சுறா ரஷ்யா என்றால், மற்றைய சுறா நேட்டோ என்ற போர்வையைப் போத்திக் கொண்டு பூச்சாண்டி காட்டும் அமெரிக்கா.
ஆதிக்க எல்லையை விஸ்தரிக்க வேண்டும். அதுவே பலமென நினைக்கும் சுறாக்கள். இதற்காக சிறுமீன்களின் வாழ்விடங்களை விழுங்குவதில் அவற்றுக்கு தயக்கம் இல்லை.
இதனை இருநாடுகளும் செய்கின்றன. ரஷ்யா நேரடியாகவும், அமெரிக்கா மறைமுகமாகவும் செய்கின்றன என்பது மாத்திரமே வித்தியாசம். மற்றபடி இரண்டு சுறாக்களும் ஒரே மாதிரியானவை தான்.
கனடாவுடனும், பசுபிக் சமுத்திரத்திற்கு அப்பாலுள்ள ஐரோப்பிய நாடுகளுடனும் கூட்டு சேர்ந்து நேட்டோ அமைப்பின் ஊடாக, 1949முதல் அமெரிக்கா அதைச் செய்தது
சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளை ஆக்கிரமித்து, தமது அதிகாரத்திற்குள் கொண்டு வருவதன் மூலம், ரஷ்யாவும் அதைச் செய்கிறது.
அங்கத்துவ நாடுகளுக்கு அச்சுறுத்தல் என்றால், பரஸ்பரம் பாதுகாப்பு வழங்குதல் நேட்டோவின் நோக்கம்.
ஆனால், அத்துடன் நின்றதா? புதிது புதிதாக நாடுகளை சேர்த்தது. ஏனைய நாடுகளில் இராணுவத்தை விஸ்தரித்தது. சம்பந்தமே இல்லாமல், ஆப்கானுக்கும், லிபியாவிற்கும் படைகளை அனுப்பியது.
சோவியத் ஒன்றியம் தகர்ந்தபோது, அதில் இருந்து பிரிந்த நாடுகளை சேர்க்க முனைந்தது. கிழக்கு நோக்கி விஸ்தரிக்க முனைந்தது.
தற்போது ரஷ்யாவும் சும்மா இருக்கிறதா? 2008 இல் ஜோர்ஜியாவை விழுங்க முனைந்தது. அடுத்ததாக கிரிமியாவை இணைத்தது. பிறகு டொன்பாஸ்சை ஆக்கிரமித்தது. இக்காலதில் உக்ரேனை தமது ஆதிக்கத்திற்குள் கொண்டு வரும் யுத்தம். இந்த யுத்தம் ஐரோப்பாவின் பாதுகாப்பு ஒழுங்கையே புரட்டிப் போட்டிருக்கிறது.
ஐரோப்பாவைப் பொறுத்தவரையில், நடுநிலை என்ற கோட்பாடு உண்டு. அவுஸ்திரியா, சுவிஸ்சர்லாந்து, மோல்ட்டா போன்ற நாடுகள் அனுசரிக்கின்றன. இவற்றின் நடுநிலைக் கோட்பாடுகள், அரசியல் நடுநிலை என்பதில் இருந்து எந்தவொரு இராணுவ கூட்டணியிலும் இணையாதிருத்தல் என்பது வரை மாறுபடும்.
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நெப்போலியன் போர் செய்த காலந்தொடக்கம் சுவீடன் நடுநிலைக் கொள்கையைப் பேணி வந்திருக்கிறது.
1947இல் சோவியத் ஒன்றியத்துடன்; உடன்படிக்கை செய்து, நடுநிலையைப் பேணி வந்த நாடு பின்லாந்து. அதனை தொடர்ந்தும் பேணி வந்திருக்கிறது.
தற்போது, நடுநிலைக் கொள்கையைப் புறந்தள்ளி, பின்லாந்து நேட்டோவில் இணைய விண்ணப்பிக்கிறது என்றால், அதன் பின்னணியை அறிதல் அவசியம்.
நேட்டோவின் கிழக்கு நோக்கிய விஸ்தரிப்பில், உக்ரேனை விழுங்கி விடும் நேட்டோவின் நோக்கத்திற்கு எதிரான ரஷ்யாவின் ஆத்திரம்.
இந்த ஆத்திரமே இன்றைய ரஷ்ய உக்ரேனிய நெருக்கடிக்கு பிரதான காரணம் என்பது பொதுவான புரிதல். இதுவே யதார்த்தமும் கூட. எனினும், இந்த யுத்தம் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் முடிவு எவ்வாறு அமையும் என்ற கரிசனையும் உருவாகியிருக்கிறது.
ஒருபுறத்தில் யுத்தத்தின் கோரவிளைவுகள். மறுபுறத்தில் எரிசக்தி நெருக்கடி. ரஷ்யா எரிவாயு ஐரோப்பிய நாடுகளுக்கான விநியோகத்தை நிறுத்தும் அபாயம்.
இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் உக்ரேனிய யுத்தத்திற்கு எதிரான கருத்துக்கள் வலுவடைந்து வருவதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
சோவியத் ஒன்றியத்தின் இரும்புத்திரை தகர்ந்தபோது, நேட்டோவில் இணைய வேண்டுமா என்று பொதுமக்களிடம் கேட்கப்பட்டது. இதன்போது, நேட்டோவில் இணைய வேண்டும் என கருதியவர்களின் எண்ணிக்கை 25சதவீதத்தைக் கூட தாண்டவில்லை.
உக்ரேனிய யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 75சதவீத மக்கள், நேட்டோவில் இணைவதை ஆதரித்திருக்கிறார்கள்.
சுவீடன் மக்களில் 57சதவீதமான மக்கள் நேட்டோவுடன் இணைய வேண்டும் எனக் கருதுவதாகத் தெரிகிறது. இவ்விரு நாடுகளிலும் சோஷலிஸ ஜனநாயக கோட்பாடுகளை அனுசரிக்கும் கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன.
இரு பிரதமர்களும் தமது நாடு நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருபவர்கள். எனினும், மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளின் நாடாளுமன்றங்களும் மாற்றத்தை அங்கீகரித்தால், பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் சேர்ந்து விடக்கூடும்.
இது ரஷ்யாவின் ஆத்திரத்தை அதிகரித்து, ஐரோப்பாவின் பாதுகாப்பு ஒழுங்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
முதலில் பூகோள ரீதியான விடயம். இன்று நேட்டோ நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான பொது எல்லை லத்வியாவிலும், எஸ்தோனியாவிலும் உள்ளன.
நேட்டாவில் பின்லாந்து இணைந்தால், இந்தப் பொது எல்லையின் நீளம் இரு மடங்காக அதிகரிக்கும்.
ஏனெனில், பின்லாந்திற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான எல்லை நீளமானது நேட்டோவில் சேரும் பின்லாந்தை ரஷ்யா பகையாளியாக கருதும் பட்சத்தில், இரு பகையாளிகளும் அருகருகில் இருக்கக்கூடிய நிலப்பரப்பு அதிகரிக்கிறது.
இன்று உக்ரேனில் தத்தளிக்கும் ரஷ்யா இரண்டாவது போர் முனையை ஸ்தாபிப்பதற்காக பின்லாந்து எல்லையில் அணுவாயுதங்களைக் குவிக்கலாம். இது தவிர, பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளுடன் சைபர் யுத்தத்திலும் ஈடுபட்டு நேட்டோவைப் பழிவாங்கக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன.
இங்கு சுவீடனும், பின்லாந்தும் நேட்டோவில் இணைவது சரியா, தவறா என்ற கேள்வி எழலாம்.
அதற்குரிய தார்மீக உரிமை பற்றியும் கேள்வி எழுப்பப்படலாம். இந்தப் பிரச்சனையை நாம் வெளித்தரப்பில் இருந்து பார்க்கிறோம். எமக்கு இரு சுறாக்களின் சண்டையில், ஒரு பக்கம் சேரும் சிறுமீன்களே தெரிகின்றன.
சிறுமீன்களின் கண்ணோட்டத்தில் யோசிப்பதில்லை. அவற்றின் கரிசனை எமக்குத் தெரிவதும் கிடையாது. இனிமேலும் நடுநிலையாக இருக்கும் பட்சத்தில், தமக்குப் பாதுகாப்பு கிடையாது என பின்லாந்து, சுவீடன் மக்கள் கருதினால், அவர்கள் கொள்கைகளை மாற்றலாம்.
ஒரு தேசத்தின் இறையாண்மை என்பது என்ன? அதன் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடாமல் இருப்பது மாத்திரம் தானா? மக்களுக்கு விரும்பிய விதத்தில் இராச்சியத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளை வகுத்துக் கொள்வதும் இறையாண்மையில் உள்ளடங்கும் விடயம் தானே?
சுவீடனும், பின்லாந்தும் நேட்டோவில் இணைய வேண்டுமா, நடுநிலையாக இருக்க வேண்டுமா என்பது அந்நாட்டு மக்களி;ன் இறையாண்மையைப் பொறுத்த விடயம்.
இந்நாடுகள் இணைந்தாலும், இணையாவிட்டாலும், ரஷ்யா ஆக்கிரமிப்பைக் கைவிடப் போவதும் இல்லை. ரஷ்யாவை ஓரங்கட்டும் முயற்சியில் அமெரிக்க சளைக்கப் போவதும் இல்லை.
துற்போதைய தேவையெல்லாம் சிறுமீன்கள் பக்கம் சேருதல் சரியா, தவறா என்பதை வெளியில் இருந்து பார்த்து விமர்சிப்பதை விடவும், சண்டையை நிறுத்துமாறு சுறாக்களை நிர்ப்பந்திப்பதே.