ரொபட் அன்டனி

ரணில் விக்­கிர­ம­சிங்க  பிர­த­ம­ரா­கி­ய­வுடன் என்னை அழைத்து தனது அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­ளும்­படி கூறினார்.

அவ­ருக்கு என் மீது நம்­பிக்கை அதி­க­மாக இருக்­கி­றது.  அதனை பொறுப்­புடன் கூற விரும்­பு­கிறேன்.  ஆனால் அதனை நான் நட்பு ரீதி­யாக மறுத்தேன்.

ரணில் எனக்கு  புதி­யவர் அல்ல.  20 வரு­டங்­க­ளாக நான் அவ­ருடன் செயற்­பட்டிருக்­கின்றேன்.

அவர் மீது எனக்கு மரி­யாதை இருக்­கி­றது.   ரணி­லுக்கு நாங்கள் இடை­யூறு இல்­லாமல் ஒத்­து­ழைப்பு வழங்க தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம்.

இதனை நான் தெளி­வாக சஜித் பிரே­ம­தா­ச­வி­டமும்  தெரி­வித்­தி­ருக்­கிறேன்  என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின்  தலைவர்  மனோ கணேசன் தெரி­வித்தார்.

வீர­கே­ச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே  அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

செவ்­வியின் விபரும் வரு­மாறு,

கேள்வி: ரணிலின்  அர­சாங்­கத்தில் தமிழ் முற்­ போக்கு கூட்­டணி பங்­கேற்­குமா? என்­பது பலரின்  கேள்வி. நீங்கள் இல்லை என்று கூறி­விட்­டீர்கள். காரணம் என்ன? நீங்கள் அதில் பங்­கேற்று நாட்டை மீட்­டெ­டுக்­கலாம் அல்­லவா?  

பதில் : அதுவும் ஒரு நல்ல யோச­னைதான். ரணில்  விக்கி­ர­ம­சிங்க  பிர­த­ம­ரா­கி­ய­வுடன் என்னை அழைத்து தனது அர­சாங்­கத்தில் இணைந்து கொள்­ளும்­படி கூறினார்.  அவ­ருக்கு என் மீது நம்­பிக்கை அதி­க­மாக இருக்­கி­றது.  அதனை பொறுப்­புடன் கூற விரும்­பு­கிறேன்.

ஆனால் அதனை நான் நட்பு ரீதி­யாக மறுத்தேன். ரணில் எனக்கு  புதி­யவர் அல்ல.  20 வரு­டங்­க­ளாக நான் அவ­ருடன் செயற்­பட்டிருக்­கின்றேன்.

அவர் மீது எனக்கு மரி­யாதை இருக்­கி­றது.  ஆனால் இன்­றைய கட்­டத்தில் இந்த அர­சாங்­கத்தின் தலைவர் அதி­கா­ர­பூர்­வ­மாக கோட்­டா­பய ராஜ­பக் ஷ ஆவார்.

அதனால் எனக்கு ஒரு பிரச்­சினை இருக்­கி­றது.  அதனால் ரணி­லுக்கு நாங்கள் இடை­யூறு இல்­லாமல் ஒத்­து­ழைப்பு வழங்க தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம்.

இதனை நான் தெளி­வாக சஜித் பிரே­ம­தா­ச­வி­டமும்  தெரி­வித்­தி­ருக்­கிறேன்.  ரணி­லுக்கு அவ­காசம் கொடுக்க வேண்டும் எனக் கூறி­யி­ருக்­கிறேன்.

கேள்வி : உங்கள் கூட்­ட­ணியின் உறுப்­பி­னர்கள் யாரா­வது அர­சுக்கு செல்லும் சாத்­தியம் உள்­ளதா? அவ்­வா­றான ஒரு தக­வல் சமூக வலைத்­த­ளங்­களில் பர­வின அல்­லவா?  

பதில் : தக­வல்கள் வரும். அவ்­வ­ள­வுதான். பேசப்­ப­டு­கின்­ற­வர்­க­ளாக நாங்கள் இருக்­கின்றோம்.  தூங்­கு­மூஞ்­சி­க­ளாக இல்லை.  ஆனால் நாங்கள் எந்த முடி­வாக இருந்­தாலும்   கட்­சி­யா­கவே எடுப்போம்.

கேள்வி : எதிர்க்­கட்சி தலைவர் சஜித்  பிரே­ம­தாச அர­சாங்­கத்தை பொறுப்­பேற்­றி­ருக்­கலாம் என்று கரு­தி­னீர்­களா?

பதில் : அப்­ப­டி­யான ஒரு கருத்து பொது­மக்கள் மத்­தியில் இருக்­கி­றது. ஆனால் பிரச்­சினை என்­ன­வென்றால் ஜனா­தி­ப­திக்கு 4  நிபந்­த­னை­களை சஜித்  முன்­வைத்தார்.

ஆரம்­பத்தில் முன்­வைத்த நிபந்­த­னைகள் மலி­னப்­ப­டுத்தி மீண்டும் முன்­வைக்­கப்­பட்­டது.  அனு­ர­கு­மார திஸா­நா­யக்­கவும் நிபந்­தனை முன்­வைத்தார்.

ரணில் நிபந்­தனை  முன்­வைக்­க­வில்லை.  ஒரு­வேளை ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அவர்கள்  நிபந்­தனை முன்­வைத்­தி­ருக்­கலாம்.  ஒரு மாற்று வழியை கண்­டு­பி­டித்து கொடுங்கள் என்று ரணி­லிடம் கூறி­யி­ருக்­கலாம்.  ஆனால் எமது நிபந்­த­னை­களை கோட்­ட­பாய ராஜ­பக்்ஷ ஏற்­றுக்­கொள்­ளாததன் கார­ண­மாக நாங்கள் எதி­ர­ணியில் இருக்­கின்றோம்.

கேள்வி : எனினும் எதி­ர­ணியின் இரண்டு உறுப்­பி­னர்கள் அமைச்சுப் பத­வி­களை ஏற்­றுள்­ள­னரே ?  

பதில் : சேர் பெய்ல் என்று சொன்­னவர் சென்­றி­ருக்­கின்றார்.   பர­வா­யில்லை.   சேரை திருத்­து­வ­தற்கு அவர் சென்றிருக்­கலாம்.

கேள்வி : ஆனால் ஹரின், மனுஷ நாண­யக்­கார போன்றோர் ஒரு கட்­சியில் திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்தக்கூடிய அர­சியல் கதா­பாத்­தி­ரங்கள் அல்­லவா ? 

பதில் : ஆமாம், அது அப்­ப­டித்தான்.  அவர்­க­ளது வர­லாறு அப்­ப­டித்தான் இருக்­கி­றது.  ஆனால் தனி­ந­பர்­களை நம்பி நாங்கள் அர­சியல் செய்ய முடி­யாது.

எமது தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஐக்­கிய மக்கள் சக்தி அல்ல.  அதில் ஒரு கூட்­டணி கட்சி மட்­டுமே.  சஜித் பிரே­ம­தாச எனது தலைவர் அல்ல.  கூட்­டணி தலைவர்.  அவ்­வ­ள­வுதான். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி : அண்­மையில் ரணி­லு­ட­னான சந்­திப்பு எவ்­வாறு அமைந்­தது?

பதில் : நானும் சுமந்­தி­ரனும் ஹக்­கீமும் இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்டோம்.  அப்­போது கட்­சி­க­ளி­லி­ருந்து யாரையும் பிரித்து எடுக்க வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.

ஹரின், மனுஷ தொடர்­பா­கவும் பேசப்­பட்­டது.  உங்கள் அர­சாங்­கத்­திற்கு வெளியிலிருந்து ஒத்­து­ழைப்பு வழங்­கு­கிறோம்.   ஆனால் ஹரின் ஆரம்­பத்­தி­லி­ருந்தே சஜித்­துடன் முரண்­பட்டுக் கொண்டிருப்­ப­தாக ரணில் என்­னிடம் கூறினார்.

கேள்வி : நீங்கள்  தீர்­மானம் எடுக்கும் போது நெகிழ்வுப் போக்­கு­க­ளுக்கு இட­மில்­லையா? எப்­ப­வுமே இறுக்­க­மா­கவே இருப்­பீர்­களா ?

பதில் : இல்லை.  கொள்கை அர­சியல்,   நடை ­முறை அர­சியல் இரண்­டுக்கும் நடுவில் நடு­நி­லை­யா­கவே நான் பய­ணிக்­கிறேன்.

என்னை சரி­யாக கூர்ந்து பார்த்தால் உங்­க­ளுக்கு அது புரியும். மறந்­து­விட வேண்டாம்.  நாங்கள் எண்­ணிக்­கையில் குறைந்த சிறு­பான்மை மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்றோம்.

கேள்வி : தற்­போ­தைய இந்த நெருக்­கடி குறித்து  உங்களின் மதிப்­பீடு என்ன? 

பதில் :  இன்று இலங்கை 52 பில்­லியன் டொலர் கடன் நெருக்­க­டியில் இருக்­கின்­றது.  கடன் வாங்­கு­வது தப்­பான விட­ய­மல்ல.

அர­சாங்கம் அல்­லது நிறு­வனம் கடன் வாங்கும்.  அமெ­ரிக்கா, இந்­தியா, ஜப்பான் என அனைத்து நாடு­களும் கடன் வாங்­கி­யுள்­ளன.

ஆனால் அந்தக் கடனை வாங்கி என்ன செய்­கிறோம் என்­பதே இங்கு முக்­கியம்.   இலாபம் வராத முட்­டாள்­த­ன­மான முத­லீ­டுகள் செய்­யப்­பட்­ட­மையே   இன்று எமக்கு நெருக்­க­டியை கொடுத்­தி­ருக்­கி­றது.

எனவே கடன்­களை செலுத்த வேண்டும்.  அடுத்­த­தாக தற்­போது   உட­னடி அவ­சர தேவை­க­ளுக்கு எம்­மிடம் டொலர் இல்லை.  அத்­துடன் கடனை மீளச் செலுத்­து­வ­தற்கு  டொலர் இல்லை.

தற்­போது நாம் கடன் கட்ட முடி­யாது என்று அறி­வித்­தி­ருக்­கின்றோம்.  இதனை முதலில் செய்­தி­ருக்க வேண்டும்.  அவ­காசம் தரும்­படி கேட்­டி­ருக்­கலாம். அதனை செய்­ய­வில்லை. அடா­வ­டித்­த­ன­மாக இருந்­து­விட்­டனர்.  அதற்கு நாம் தற்­போது விலை கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.

 

கேள்வி :விரைவில் பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு செல்ல வேண்­டுமா?  

பதில் : நிச்­ச­ய­மாக பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு செல்ல வேண்டும்.  காரணம் புதிய மக்கள் ஆணை பெறப்­ப­ட­வேண்டும்.  தேர்­தலின் மூல­மாக வரப்­ப­டு­கின்ற அர­சாங்­கமே ஸ்திர­மான அர­சாங்­க­மாக இருக்கும்.  சட்­ட­பூர்­வ­மான அர­சாங்­க­மாக இருக்கும். சிலர்   பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளியே அர­சாங்­கத்தை அமைக்க முயற்­சிக்­கின்­றனர்.  அது சரி­வ­ராது.

கேள்வி : தற்­போ­தைய நெருக்­க­டியில் மலை­யக மக்கள் வாழ்க்கைச் செலவு உயர்வில் கஷ்­டப்­ப­டு­கின்­றனர். அது தொடர்பில் என்ன நட­வ­டிக்கை பிர­தி­நி­தி­யாக எடுத்­தீர்கள்?

பதில் : மலை­யகத் தமி­ழர்கள் எனும்­போது எல்­லோரும் தோட்டத் தொழி­லா­ளர்கள் அல்ல. 15 லட்சம் மக்­களில் ஒன்­றரை இலட்சம் பேர் மட்­டுமே தோட்டத் தொழி­லா­ளர்கள்.

பல இடங்­க­ளிலும் மலை­யக மக்கள் என்று பரந்து விரிந்து வாழ்­கின்­றனர்.  ஒன்­றரை லட்சம் பேர் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளாக இருக்­கின்­றனர்.  அவர்கள் கஷ்­டப்­ப­டு­கின்­றனர்.

பின்­தங்­கிய நிலையில் வாழ்­கின்­றனர்.  இந்­தியா, ஜப்பான், தமி­ழக அர­சாங்­கங்கள் எமக்கு உதவி செய்­கின்­றன. உலக வங்­கியும் உதவி செய்­தி­ருக்­கின்­றது.  இவற்றை இந்த பின்­தங்­கிய மக்­க­ளுக்­கான உத­வி­யாக வழங்க வேண்டும். அதற்கான ஏற்­பா­டு­களை நாங்கள் செய்து வரு­கிறோம்.

கேள்வி : தற்­போ­தைய நெருக்­கடி போக்கை பார்க்­கும்­போது அர­சியல் தீர்வு சாத்­தி­யமா? 

பதில் : அர­சியல் தீர்வு தொடர்­பாக நாம் பேச­வேண்டும்.  மலை­யக   அர­சியல் பிரச்­சினை,  முஸ்லிம் மக்­களின் பிரச்­சினை என சகல பிரச்­சி­னைகள் குறித்தும் பேச வேண்டும்.

காணா­மல்­போனோர் பிரச்­சினை, அர­சியல் கைதி பிரச்­சினை,  காணிப் பிரச்­சினை   என்ற விட­யங்கள் இந்த போராடும் மக்­க­ளிடம் கூறப்­பட வேண்டும்.

மலை­யக மக்­க­ளுக்கு அதி­காரப்பகிர்வு வேண்டும்.  முஸ்லிம் மக்கள் பிரச்­சினை குறித்தும் பேச­வேண்டும்.  வெறு­மனே உணவு, மருந்து என்­ப­னவற்றை  மாத்­திரம் இந்த போராட்­டங்­க­ளுக்கு வரை­ய­றுக்க முடி­யாது.  போராட்­டக்­கா­ரர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக பேச வேண்டும்.

கேள்வி : மே 9 வன்­மு­றைகள் இந்த சமூ­கத்­துக்கு எ­தனை கூற வரு­கின்­றன? 

பதில் : அதனை ராஜ­பக் ஷ வன்­முறை என்றே கூற ­வேண்டும். எனவே சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்கள் உள்­ளிட்ட சக­லரும் கைது செய்­யப்­பட வேண்டும்.

இதனை யார் தூண்டி விட்­டது என்­பதை மக்கள் அறி­ய­வேண்டும்.  70 ஆண்­டு­க­ளுக்கு முன்னால் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக தனி சிங்­கள  சட்­ட­ம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது போராட்டம் நடத்­தப்­பட்­டது.

மலை­யக மக்­களின் உரிமை பறிக்­கப்­பட்ட போது  போராட்டம் நடத்­தப்­பட்­டது.  மக்கள் சத்­தி­யா­க்கி­ரக ஆர்ப்­பாட்டம் செய்­த­போது அதனை அடித்து நொறுக்­கி­னார்கள்.  அதுதான் தற்­போது மீண்டும் பிர­தி­ப­லிக்­கி­றது என்று நம்­பு­கிறேன்.

கேள்வி : நான் தற்­போது சில அர­சியல் தலை­வர்­களின் புகைப்­ப­டங்­களை உங்­க­ளுக்கு காட்­டு­கின்றேன். அவர்கள் தொடர்­பான உங்கள் மதிப்­பீட்டை நீங்கள் கூறலாம்..?

டலஸ் அழ­கப்­பெ­ரும  

எனது நண்பர். நாக­ரீ­க­மான பண்­பான மனிதர். அவ்­வ­ள­வுதான் கூற­மு­டியும். இருக்கும் இடம் சரியில்லை என்­பதால் வேறு எதையும் கூற முடி­யாது.

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி 

இவர் தன்னை இந்­தி­யாவின் காவல்­காரன் என்று கூறினார்.  ஆனால் அவ­ரது இரண்­டா­வது பத­வி­யேற்­புக்கு நான் சென்­ற­போது அவரை தென்­னா­சி­யாவின் காவல்கார­னாக இருக்­கு­மாறு கூறினேன். சரி  என்று கூறினார்.

கேள்வி : இவரை மலை­யக மக்கள் இலங்­கைக்கு வந்து 200 வருட  பூர்த்தி நிகழ்­வுக்கு அழைக்க விரும்­பு­கி­றீர்­களா?

பதில் : இவரை அல்ல. நாம் தமி­ழக முதல்வர் ஸ்டாலினை  அழைக்க விரும்­பு­கிறோம்.  இந்­திய பிர­த­மரும் அழைக்­கப்­ப­டலாம்.  நேர­மி­ருந்தால் வருவார்.

கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் 

எனது அடுத்த ஆதாரம் எனது அடுத்த ஆச­னத்­துக்கு அடுத்த ஆச­னத்தில் இருப்­பவர். நான் பன்­னி­ரெண்டாம் ஆச­னத்தில் இருப்பேன்.  பதின்­மூன்றாம் ஆச­னத்தில் ரணில் அமர்ந்­தி­ருந்தார்.

14ஆம் ஆச­னத்தில் சம்­பந்தன் அமர்ந்­தி­ருக்­கிறார்.  மூத்த தலைவர். சிறந்த தலைவர். அவ­ரது உடல் பல­வீ­ன­மாக இருக்­கலாம்.  ஆனால் அவ­ரது அறிவு கூர்­மை­யாக இருக்­கின்­றது.

கேள்வி : பாரா­ளு­மன்­றத்தில் பிர­ப­ல­மான தலை­வர்­க­ளுக்கு அரு­கில்தான் அமர்ந்­தி­ருக்­கி­றீர்கள்?

பதில் : எனது பக்­கத்தில் அமர்ந்­தால் பி­ர­தமர் ஆகி­வி­டலாம். ரணில் எனது பக்­கத்தில் அமர்ந்தார். பிர­தமர் ஆகி­விட்டார். தற்­போது மைத்­திரி வந்­தி­ருக்­கிறார். ரணில் ஜனா­தி­ப­தி­யாகி மைத்­திரி பிர­தமர் ஆகலாம்? என்ன செய்­வது? நான் 13 ஆம் இலக்­கத்தில் அம­ர­வில்­லையே?

ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ

இவர்  2005ஆம் ஆண்டில் பாது­காப்பு செய­லா­ள­ராக இருக்கும் போதே நான்  முரண்­பட்டேன்.  அப்­போது யுத்த காலப்­ப­கு­தியில் நடந்த விட­யங்­க­ளுக்­காக நான் இவரை எதிர்த்து இவ­ருடன்  முரண்­ப­ட்டேன்.  நேர­டி­யாக அவ­ருடன் முரண்­பட்டோம்.

சந்­தி­ரிகா குமா­ர­துங்க

எனது நண்பர். நல்­லவர்.  சில தினங்­க­ளுக்கு முன்னர் அவர் தனி­யாக யுத்த விட­யத்­துக்­காக  தீப­மேற்றி கொண்­டி­ருந்­ததை பார்த்தேன்.  அதனை அவர் தனது தந்தை பண்­டா­ர­நா­யக்­கவின் சிலைக்கு முன்­பாக ஏற்றியிருக்க வேண்டும்.  இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு அவ­ரது  தந்­தையும் ஒரு காரணம்.

கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன் 

எனது நண்பர். எனக்கும் அவ­ருக்கும் நிறைய முரண்­பா­டுகள் இருக்­கின்­றன. நட்பும் இருக்­கின்­றது. முரண்­படும் போது முரண்­ப­டுவோம்.  நட்பின் போது நட்பு பாராட்­டுவோம்.  எம் இரு­வ­ருக்கும் ஒரு ஒற்­றுமை உள்­ளது,  ஒரு பிரச்­சினையை அத்­துடன் விட்­டு­வி­டுவோம். தொடரமாட்டோம்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க 

இந்நாள் பிர­தமர். நல்­லவர். வல்­லவர். அவ­ரது பலமும் எனக்கு தெரியும். பல­வீ­னமும் எனக்கு தெரியும். பல­வீனம் குறித்து பேசமாட்டேன்.  பலம் என்­ன­வென்றால் அவர் ஒரு­வ­ராக வந்து ஒரு அர­சாங்­கத்தை நடத்திக் கொண்­டி­ருக்­கிறார்.  அவ்­வ­ள­வுதான்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ 

யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் இவர்   எனது பிறந்­த ­நா­ளுக்கு  வாழ்த்து தெரி­வித்தார்.  அப்­போது நான் அவ­ரிடம் ஒரு விட­யத்தை கூறினேன்.

அதா­வது நீங்கள் சிங்­கள மக்­களின் மனதை வென்ற தலைவர்.  நீங்கள் ஒரு தீர்வை கொடுத்தால் நிச்­ச­ய­மாக மக்கள் ஏற்­றுக்­கொள்­வார்கள்.

அதனை செய்து காட்­டுங்கள் என்று அவ­ருக்கு நான் கூறினேன்.  மண்ணை மீட்­டது போல் தமிழ் மக்­களின் மனங்­களை மீட்­கு­மாறு கூறினேன்.  ஆனால் அவர் அதனை செய்­ய­வில்லை.

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தலைவர் செந்தில் தொண்­டமான் 

அவர் தலை­வ­ராக பொறுப்­பேற்­றதும்  வாழ்த்து தெரி­வித்தேன். அவ்வ­ள­வுதான்.

கேள்வி : மலை­ய­கத்தில் இரண்டு முகாம்கள் இருக்­கின்­றன (இடை­ம­றிப்பு)

பதில் ; இல்லை ஒரு முகாம்தான் இருக்­கின்­றது.  அது தமிழ் முற்­போக்கு கூட்­டணி மட்­டுமே.    இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஒரு கட்சி அவ்­வ­ளவுதான்.  நாங்கள் மூன்று கட்­சிகள் சேர்ந்து ஒரு­மு­கா­மாக இருக்­கின்றோம்.

இவர்கள் தரப்பில் இருவர் இருக்­கின்­றனர்.  அவர்­களை நாங்கள் குறைத்து மதிப்­பி­ட­வில்லை.  ஆனால் நாங்கள் வளர்ந்து விட்டோம்.  அதனை ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.  கடந்த நான்கு வரு­டங்­களில் நாங்கள் மலை­ய­கத்தை பொற்­கா­ல­மாக உரு­வாக்­கினோம்.

தமி­ழக முதல்வர் ஸ்டாலின் 

வர­லாறு காணாத ஒரு முறை­யி­லேயே தமி­ழ­கத்தை வழி­ந­டத்திக் கொண்­டி­ருக்­கிறார்.  உண்­மையில் அவர் தமி­ழக முதல்­வ­ராக வரும்­போது அவர் மீது ஒரு சந்­தேகம் இருந்­தது.

தந்தை எட்­டடி பாயும்­போது இவர் 4 அடி­யா­வது பாய்­வாரா என்ற சந்­தேகம் இருந்­தது.  ஆனால் அவர் தற்­போது 32 அடிகள் பாய்ந்து கொண்­டி­ருக்­கிறார்.

இந்­தி­யா­வி­லேயே தமி­ழகம் ஒரு முன்­மா­திரி மாநி­ல­மாக கரு­தப்­ப­டு­கி­றது.  இந்­தி­யாவில் ஒரு பிர­ப­ல­மான முத­ல­மைச்­ச­ராக  இந்­தி­யாவின் ஊட­கங்கள் அவரை தெரிவு செய்­கின்­றன.

கேள்வி : ஸ்டாலினின் அடுத்­த­ கட்டம் என்­ன­வாக இருக்கும்?

பதில் :  தெரி­ய­வில்லை.  அவ­ரி­டம்தான் கேட்க வேண்டும்.  ஆனால் அவ­ரு­டைய சமூ­க­நீதி கொள்கை சிறப்­பாக இருக்­கின்­றது.

சமூ­கத்தின் விளிம்பு நிலையில் இருக்­கின்ற மக்கள் பெண்கள் போன்­றோரை நோக்கி அவ­ரது செயற்­பா­டுகள் இருக்­கின்­றன.

அந்த அவ­ரது சமூ­க­நீதி கரங்கள் எமது மலை­யக மக்­க­ளையும் அர­வ­ணைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றேன்.  அந்த கோரிக்கை அவர்கள் கைக்கு சென்றிருக்கின்றது.  வெகுவிரைவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு தமிழக முதல்வரை சந்திக்கும்.

கேள்வி : மனோ கணேசன் தீர்மானம் எடுக்கும் போது எடுக்கின்ற எடுகோள்கள் என்ன? 

பதில் : என் மனச்சாட்சி சொல்வதை நான் செய்கிறேன்.  ஒரு மனிதன் என்றால் என்ன? சிந்தனை, சொல், செயல்.  இந்த மூன்றும் மனச்சாட்சிப்படி செயற்படுகின்றன.

அவையே என்னை தீர்மானிக்கின்றன.  கண்டியில் 15 வருடங்களாக  ஒரு தமிழ் எம்.பி. இருக்கவில்லை.  மூன்று முஸ்லிம் எம்.பி.க்கள் இருந்தார்கள். சிங்களவர்கள் இருந்தார்கள்.

அதனால் நான் கண்டியில் 2010 இல் போட்டியிட்டேன்.  தலைவர் என்றால் சவால்களை சந்திக்க வேண்டும். அதனால்தான் போட்டியிட்டேன்.  நான் தோல்வி அடையவில்லை.

மாறாக வன்முறை காரணமாக வெற்றிபெற முடியவில்லை.  நான் அன்று இட்ட வித்து தான் இன்றுவேலு குமாராக வளர்ந்திருக்கிறது.     நான் ஓடி ஒளியவில்லை.

எனது தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது. மறுபடியும் நான் சாம்பலில் இருந்து எழுந்து வந்திருக்கிறேன்.  நான் நீண்ட நாட்கள் அரசியலில் இருக்கமாட்டேன்.  எல்லோருக்கும் ஒரு ஆரம்பம் முடிவு இருக்கும்.

கேள்வி : அப்படியானால் அடுத்த தேர்தலில்?  

பதில் : பொறுத்திருந்து பாருங்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version