இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையொன்று தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை இன்று முன்வைத்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுக்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, அதில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான உரையின் தமிழாக்கம்

இன்று எமது நாட்டின் பிரதான பிரச்னைகள், பொருளாதாரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. அதேபோன்று, அரசியல் துறையில் இரண்டு பிரதான பிரச்னைகள் காணப்படுகின்றன. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்துவது முதலாவது பிரச்னை.

அதற்கு தீர்வாக, கட்சித் தலைவர்கள் என்ற விதத்தில் நாம், 21வது திருத்தத்தைத் தயாரித்து வருகின்றோம். இரண்டாவது பிரச்னை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது.

அதற்கான கால எல்லை மற்றும் நடைமுறைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். இதற்கு மேலதிகமாக நாடாளுமன்றம் தொடர்பில் பிரச்னை ஒன்று உள்ளது. 20வது திருத்தத்தின் ஊடாக நாடாளுமன்றம் வலுவிழக்கச் செய்யப்பட்டு, அதிகளவிலான அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரம் தன்வசப்படுத்திக் கொண்டமையின் ஊடாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

இந்த பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்கு நாடாளுமன்றம் செயற்படவில்லை என்பதே இன்றுள்ள பிரதான குற்றச்சாட்டாகும். உத்தேச 21வது திருத்தத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படுகின்றன.

எனினும், அதன் ஊடாக மாத்திரம் எம்மால் திருப்தி அடைய முடியாது. தற்போதுள்ள வெஸ் மினிஸ்டர் அமைச்சரவை முறைமையின்படி, அனைத்தையும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் நிர்வகித்தனர். அதேபோன்று, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தமையினால் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளைத் தவறவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் இடம்பெற்றவை குறித்து, அனைத்து சந்தர்ப்பங்களிலும் விவாதித்துக்கொண்டிருக்க வேண்டியது இல்லை. எனினும், இந்த நாட்டின் அரசாங்கத்தின் ஆட்சிக்கு நாடாளுமன்றத்தையும் இணைத்துக்கொள்ளும் நடைமுறையொன்று இருக்க வேண்டும். அதேபோன்று எமக்கு சரியான நடைமுறையொன்று இருக்க வேண்டும். அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தெரிவுக் குழுவில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அதனால், இதற்கு ஓர் உதாரணம் இருக்கின்றது. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1931ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் செனட் சபையொன்று காணப்பட்டது. அந்த செனட் சபையானது, தெரிவுக்குழு செயற்படும் விதத்திலேயே செயற்பட்டது. 7 தெரிவுக்குழுக்களுக்கு, ஒவ்வொரு விடயங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

அந்த தெரிவுக்குழுக்களின் தலைவர்கள் அமைச்சர்களாக இருந்தனர். அந்த 7 அமைச்சர்களும் ஒன்றிணைந்து அமைச்சரவை ஒன்றை ஸ்தாபித்திருந்தனர். அதற்கு மேலதிகமாக ஆளுநரினால் நியமிக்கப்பட்ட 3 அதிகாரிகளும் இருந்தனர். இந்த இடத்திலேயே தெரிவுக்குழுக்களின் கருத்துகளை பெற்றுக்கொண்டு, அமைச்சரவை வரவு செலவுத்திட்டத்தை தயாரித்தது. கொள்கைகள் தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதற்கு மேலதிகமான நிதி கட்டுப்பாடு தொடர்பில் நிதி தெரிவுக்குழுவொன்று இருந்தது. இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எமக்கு அந்த காலத்தில் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் பின்னர் நாடாளுமன்ற வியூகம் மாற்றப்பட்டு, தற்போதுள்ள நாடாளுமன்ற முறைமை, தற்போதுள்ள வெஸ்ட் மினிஸ்ட் நடைமுறை, இந்த செனட் சபை முறைமை இரண்டையும் ஒன்றிணைத்து புதிய முறையொன்றை விசேடமாக ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாட்டின் பிரச்னைகளுக்கு நாடாளுமன்றத்திற்கு பங்களிக்க முடியும். நிதி அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, நாடாளுமன்றத்திற்கு அந்த அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்றால், தற்போதுள்ள சட்டங்கள் வலுவாக்கப்பட வேண்டும். குறிப்பாக தற்போதுள்ள நிதி சட்டங்கள் தொடர்பில் அவதானித்து, புதிய நிதி சட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

பிரிட்டன், நியூசிலாந்து, இந்தியா போன்ற நாடுகளை உதாரணமாக எடுத்துக்கொண்டு, தற்போதுள்ள சட்டத்தை விடவும் வலுவான சட்டமொன்றை நாம் முன்வைக்கவுள்ளோம். தற்போது அரச நிதி தொடர்பிலான 3 தெரிவுக்குழுக்கள் காணப்படுகின்றன. இந்த மூன்று தெரிவுக்குழுக்களிலும் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதற்கு, சபை முதல்வரான தினேஷ் குணவர்தன பல யோசனைகளை முன்வைத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக நாம் மேலும் பல யோசனைகளை முன்வைக்கவுள்ளோம். நிதி தொடர்பிலான புதிய 2 தெரிவுக்குழுக்களை அமைப்பதற்கு நாம் யோசனை முன்வைக்கவுள்ளோம்.

நாட்டின் அரச வருமானம் குறைவடைந்துள்ளது. எதிர்வருத் தசாப்தத்திற்குள் அரச வருமானத்தை, தேசிய உற்பத்தியில் 18 முதல் 20 வீதம் வரை அதிகரிக்க வேண்டியுள்ளது. அடிப்படையில் 17 வீதத்திற்கு அதிகரிக்க வேண்டியுள்ளது. இந்த நடவடிக்கைக்கான நடைமுறைகள் தொடர்பிலான தெரிவுக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் வருமானத்தைச் சேர்த்தல், வருமானத்தை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கான யோசனைகளை முன்வைக்கும் குழுவே, அந்த குழுவாகும்.

இரண்டாவது எமக்கு மற்றுமொரு பிரச்னை காணப்படுகின்றது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் காணப்படுகின்ற நிதி பிரச்னையே அடுத்த பிரச்சினையாகும். அது குறித்து பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் வலுவிழந்துள்ளன. அவற்றை வலுவடைய செய்ய வேண்டுமாயின், அது குறித்து அறிக்கையிட புறம்பாக குழுவொன்று தேவைப்படுகின்றது. அதனால், வங்கி மற்றும் நிதி சேவைகள் தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எமது நிலையியற் கட்டளை 111ன் கீழ், எமக்கு கண்காணிப்பு குழுக்களை நியமிக்க முடியும். கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்படவில்லை.

அதனால், 10 கண்காணிப்பு குழுக்களை நியமிக்குமாறு நான் யோசனையொன்றை முன்வைக்கின்றேன். இந்த கண்காணிப்பு குழுக்களுக்கு அரசாங்கத்தில் இருக்கின்ற விடயதானங்களை பகிர்ந்தளிக்க முடியும். அந்த கண்காணிப்பு குழுக்களின் ஊடாக அறிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியும். கொள்கைகள் தொடர்பிலும் நாடாளுமன்றத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். இது தொடர்பில் நாடாளுமன்றம் செயற்பட வேண்டும்.

இந்த நிதி செயற்குழுக்களிலும், கண்காணிப்பு குழுக்களிலும் தலைவராக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவார்கள். அமைச்சர்கள் இல்லை. அமைச்சர்களுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்கான இயலுமை எமக்கு கிடைக்கும். இந்த இடத்தில் விசேட விடயமொன்று குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கின்றார்கள்.

பிரச்னைகளை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த 15 தெரிவுக்குழுக்களுக்கும் தலா 4 இளைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதில் ஒருவர் இளையோர் நாடாளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். மற்ற மூவரும் போராட்டக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்கள். இந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையை இளைஞர் அமைப்புகளே தீர்மானிக்க முடியும்.

அத்துடன், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று நம்புகிறோம். இப்பணியின் மூலம் இளைஞர்கள் தாங்களாகவே பிரச்னைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க முடியும். அவர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட முடியும்.

தேசிய கவுன்சிலையும் நாங்கள் முன்மொழிகிறோம். சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழு தேசிய கவுன்சில் என்று அழைக்கப்படுகிறது.

தேசிய சபை மிகவும் முக்கியமானது என்றே கூற வேண்டும். நாட்டின் கொள்கைகள் குறித்து இதில் பேசலாம். அமைச்சரவையின் முடிவுகள் குறித்தும் பேசலாம். இந்நாட்டின் நாடாளுமன்ற மறுசீரமைப்பு குறித்தும் பேசலாம். அப்படியானால், அதை அரசியல் அமைப்பு என்று சொல்லலாம்.

அமைச்சர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்களை அழைக்க தேசிய கவுன்சிலுக்கு உரிமை உண்டு.

நாம் முன்வைத்துள்ள புதிய முறைமையின்படி ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். அமைச்சர்களின் அமைச்சரவையும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். தேசிய கவுன்சிலும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். பதினைந்து தெரிவுக்குழுக்கள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

அமைச்சரவை மூலம் அரசாங்கத்தை கட்டுப்படுத்தவும், ஜனாதிபதியின் பணிகளை ஆராயவும், தேசிய சபையின் மூலம் அரசியல் விவகாரங்களை மேற்பார்வையிடவும், மற்ற பதினைந்து குழுக்களின் நிதி விவகாரங்கள் மற்றும் பிற விடயதானங்களை கண்காணிப்பதற்கும் ஓர் அமைப்பு உள்ளது. வேறு பல அமைப்புகளும் இதே போன்ற திட்டங்களை முன்வைத்திருக்கின்றன. இந்த யோசனைகள் அனைத்தையும் ஆராய்ந்து, எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு எவ்வாறு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியும் என்பது தொடர்பில் நாம் இணக்கப்பாட்டிற்கு வருவோம்.

Share.
Leave A Reply

Exit mobile version