தைவானை பாதுகாக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிடுமா என்பது குறித்து அமெரிக்க அரசு நீண்டகாலமாக உத்திசார்ந்த குழப்பமான கொள்கையையே கொண்டுள்ளது.

சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங், “தைவானுடனான ‘மறு ஒருங்கிணைப்பு’ நிறைவேற்றப்பட வேண்டும்” என்கிறார். மேலும், இதைச் சாத்தியப்படுத்த ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை அவர் நிராகரிக்கவில்லை.

தன்னாட்சி செய்துகொள்ளும் தைவானை, காலப்போக்கில் மீண்டும் அதோடு இணையக்கூடிய, சீனாவின் ஒரு பகுதியாக மாறக்கூடிய, பிரிந்துள்ள ஒரு மாகாணமாகத்தான் சீனா பார்க்கிறது.

இருப்பினும், தைவான் தனது சொந்த அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் தன்னை ஒரு சுதந்திர நாடாகப் பார்க்கிறது.
முதல் தீவு சங்கிலி

தைவான், தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தீவு.

 

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமான அமெரிக்க நட்பு நாடுகள் பட்டியலான “முதல் தீவு சங்கிலி” (first island chain) என்றழைக்கப்படும் பட்டியலில் தைவான் உள்ளது.

சீனா தைவானை கைப்பற்றினால், மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் அதன் அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட முடியும் என்றும் குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க ராணுவ தளங்களை அது அச்சுறுத்தக் கூடும் என்றும் சில மேற்கத்திய வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனால், சீனா தனது நோக்கங்கள் முழுவதும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது.
தைவான் சீனாவில் இருந்து பிரிந்தது ஏன்?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சீனாவின் பிரதான நிலப்பகுதியில் தேசியவாத அரசாங்கத்தின் படைகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான சண்டை நடந்தபோது, சீனா-தைவான் பிரிவு ஏற்பட்டது.

கம்யூனிஸ்டுகள் 1949-ஆம் ஆண்டில் வெற்றி பெற்றனர். அவர்களுடைய தலைவரான மாவோ சேதுங் பெய்ஜிங்கில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இதற்கிடையே, கோமின்டாங் என்று அறியப்பட்ட தேசியவாதக் கட்சி, தைவானுக்கு தப்பி ஓடியது.
தைவானுக்கு தப்பியோடிய பிறகு, சியாங் காய்-ஷேக் கோமின்டாங் கட்சியை வழிநடத்தினார்

தைவானுக்கு தப்பியோடிய பிறகு, சியாங் காய்-ஷேக் கோமின்டாங் கட்சியை வழிநடத்தினார்

தைவான் வரலாற்றின் குறிப்பிடத்தக்க காலத்திற்கு ஆட்சி செய்து வரும் கோமின்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இப்போது, தைவானை இறையாண்மை கொண்ட நாடாக கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தலைமையகமான வாட்டிகனும், வேறு 13 நாடுகளும் அங்கீகரிக்கின்றன.

தைவானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கக்கூடிய எதையும் செய்யக் கூடாது என்று சீனா மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜ்ஜீய ரீதியிலான அழுத்தங்களைச் செலுத்துகிறது.

தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சர், சீனா உடனான தங்களது உறவு கடந்த 40 ஆண்டுகளில் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

தைவான் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியுமா?

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற ராணுவமல்லாத வழிகளில் சீனா மீண்டும் தைவானுடன் ஒன்றிணைவதற்கான முயற்சிகளை எடுக்கலாம்.

ஆனால், ராணுவ மோதல் என்று வரும்போது, அது எந்த வகையில் இருந்தாலும், சீனாவின் படைகள் தைவான் படைகளை எளிதில் தோற்கடித்துவிடும்.

அமெரிக்காவுக்கு அடுத்து மற்ற உலக நாடுகளைவிட அதிகளவில் சீனா பாதுகாப்புத் துறைக்காகச் செலவழிக்கிறது.

கடற்படையிலிருந்து ஏவுகணை தொழில்நுட்பம், விமானம், சைபர் தாக்குதல்கள் வரை பெரியளவிலான ஆற்றலைப் பெறுவதற்காக, சீனா செலவு செய்கிறது.

சீனா மற்றும் தைவானின் ராணுவ பலம்

சீனாவுடைய ராணுவ சக்தியின் பெரும்பகுதி வேறு இடங்களில் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக செயலிலுள்ள பணியாளர்களைப் பொறுத்தவரை, இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.

ஒரு வெளிப்படையான மோதலில், தைவான் சீனத் தாக்குதலின் வேகத்தைக் குறைப்பது, சீன படைகள் தைவானில் கரையிறங்குவதைத் தடுக்க முயல்வது, வெளியிலிருந்து உதவி கிடைக்கும் வரை காத்திருக்கும்போது கொரில்லா தாக்குதல்களை மேற்கொள்வது ஆகியவற்றைச் செய்ய முடியும் என்று சில மேற்கத்திய வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்காவிடம் இருந்து அந்த உதவி வரலாம்.

இப்போது வரை, அமெரிக்க அரசின் உத்திசார் தெளிவின்மை கொள்கை, தாக்குதலின்போது தைவானை எப்படிப் பாதுகாக்கும் என்பது பற்றி அமெரிக்கா இன்னமும் தெளிவற்று இருப்பதையே காட்டுகிறது.

ராஜ்ஜியரீதியாக, அமெரிக்க தற்போது “ஒற்றை சீனா” கொள்கையைக் கடைபிடிக்கிறது. இது ஒரேயொரு சீன அரசாங்கத்தை அங்கீகரிக்கிறது. தைவானை காட்டிலும் சீனாவுடன் முறையான உறவுகளைக் கொண்டுள்ளது.

ஆனால், திங்கள் கிழமையன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனின் நிலைப்பாட்டைக் கடினமானதாக்கினார்.

அமெரிக்கா தைவானை ராணுவ ரீதியாகப் பாதுகாக்குமா என்ற கேள்விக்கு, பைடன் “ஆம்” என்று பதிலளித்தார்.

தைவான் மீதான சீன தாக்குதலுக்கும் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கும் இடையே அவர் ஓர் ஒற்றுமையைச் சுட்டினார். “இது பிராந்தியத்தை முற்றிலும் இடம் மாற்றி, யுக்ரேனில் நடந்ததைப் போன்ற மற்றுமொரு செயலாகவே இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

அக்டோபர் 2021-இல், ஒரே நாளில் 56 ஊடுருவல்கள் என்ற அளவில் சீனாவின் ஊடுருவல் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது.

நிலைமை மோசமடைகிறதா?

2021-ஆம் ஆண்டில், தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்கு ராணுவ விமானங்களை அனுப்பியதன் மூலம் சீனா அதன் அழுத்தத்தை அதிகரிக்க முயன்றது.

தைவான் 2020-ஆம் ஆண்டில் விமான ஊடுருவல் பற்றிய தரவுகளைப் பொதுவில் வெளியிடத் தொடங்கியது.

அதன்படி, அக்டோபர் 2021-இல், ஒரே நாளில் 56 ஊடுருவல்கள் என்ற அளவில் சீனாவின் ஊடுருவல் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது.

உலகின் பிற பகுதிகளுக்கு தைவான் ஏன் முக்கியமானது?

தைவான் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது.

உலகின் அன்றாட மின்னணு உபகரணங்களான கைபேசிகள், மடிக்கணினிகள், கடிகாரங்கள், கேம் கன்சோல்கள் எனப் பெரும்பாலானவை, தைவானில் தயாரிக்கப்பட்ட கணினி சிப்களால் இயக்கப்படுகின்றன.

தைவான் கணினி சிப் உற்பத்தியில் முன்னிலையில் உள்ளது

ஓர் அளவீட்டின்படி, தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் அல்லது டிஎஸ்எம்சி என்ற ஒரு தைவானிய நிறுவனம், உலக சந்தையில் பாதியைத் தன்னகத்தே வைத்துள்ளது.

டிஎஸ்எம்சி என்பது, வார்ப்பகம் என்றழைக்கப்படும், நுகர்வோர் மற்றும் ராணுவ வாடிக்கையாளர்களால் வடிவமைக்கப்பட்ட சிப்களை உருவாக்கும் நிறுவனம். இந்தத் துறையின் 2021-ஆம் ஆண்டு மதிப்பு கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்.

தைவானில் சீனாவின் கையகப்படுத்தல், உலகின் மிக முக்கியமான தொழில்களில் ஒன்று மீது பெய்ஜிங்கிற்கு கட்டுப்பாட்டைக் கொடுக்கலாம்.

ராணுவ தாக்குதல் இருக்காது என்றே தைவானியர்கள் கருதுகின்றனர்

தைவான் மக்கள் இதுகுறித்துக் கவலைப்படுகிறார்களா?

சீனாவுக்கும் தைவானுக்கு இடையே சமீபகால பதற்றங்கள் இருந்தபோதிலும், பல தைவானிய மக்கள் ஒப்பீட்டளவில் கவலையற்று உள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது.

அக்டோபரில் தைவான் பொதுக் கருத்து அறக்கட்டளை, இறுதியில் சீனாவுடன் போர் நடக்கும் என்று நினைக்கிறீர்களா என மக்களிடையே கேட்டது.
தைவானியர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

அதில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் (64.3%) இல்லையென்று பதிலளித்துள்ளனர்.

தைவானில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களை தைவானியர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதாக மற்றுமொரு ஆராய்ச்சி கூறுகிறது.

1990-களின் முற்பகுதியிலிருந்து தேசிய செங்ச்சி பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வுகள், சீனர்கள் அல்லது சீனர்கள் மற்றும் தைவானியர்கள் என அடையாளம் காணும் மக்களின் விகிதம் குறைந்துள்ளது என்றும் பெரும்பாலான மக்கள் தங்களை தைவானியர்கள் என்றே கருதுவதாகவும் கூறுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version