ஆண்டிப்பட்டி அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

தேனி இளம்பெண் கொலை தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டியை சேர்ந்த அன்னக்கொடி மகன் லோகிதாசன் (வயது 34). கூலித்தொழிலாளி.

இவர், தனது ஊருக்கு அருகில் உள்ள கோவில்பட்டியை சேர்ந்த கருப்பையா மகள் ஜெயப்பிரதா (21) என்பவரை காதலித்தார்.

அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் பழகி வந்தார். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், லோகிதாசன் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றார்.

இந்த திருமண ஏற்பாடு ஜெயப்பிரதாவுக்கு தெரியவந்தது. இதனால் அவர் லோகிதாசனை சந்தித்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினார்.

மேலும், தன்னை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றால், மணப்பெண்ணின் வீட்டில் காதல் விவகாரத்தை கூறி திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்றார்.

கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி லோகிதாசன் கோவில்பட்டிக்கு சென்று ஜெயப்பிரதாவை சந்தித்து சமாதானம் பேசினார்.

பின்னர் அவரை ஆசை வார்த்தைகள் கூறி ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு கலைக் கல்லூரிக்கு பின்புறம் ஆண்கள் கழிப்பிடம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு ஜெயப்பிரதாவை தாக்கி அவர் அணிந்து இருந்த சேலையால் அவருடைய கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை இந்த சம்பவம் குறித்து ஜெயப்பிரதா தந்தை கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302 (கொலை) மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் லோகிதாசனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சாந்திசெழியன் நேற்று தீர்ப்பளித்தார்.

கொலை செய்த லோகிதாசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

பின்னர் லோகிதாசனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

https://www.dailythanthi.com/News/State/forced-into-marriage-near-andipattilife-sentence-for-teenager-who-killed-girlfriend-718696?infinitescroll=1

Share.
Leave A Reply

Exit mobile version