Site icon ilakkiyainfo

‘இங்குதான் அவரை முதலில் சந்தித்தேன்’ – தம்பதியாக பேட்டியளித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

நயன்தாராவை முதன்முதலில் சந்தித்த ஓட்டலில், திருமணத்திற்குப் பிறகு முதல்முறையாக தம்பதி சகிதமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேட்டியளித்தனர்.

‘நானும் ரௌடிதான்’ படத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் பழக்கம் உருவானது.

நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறிய நிலையில், சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இதையடுத்து இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக, ஆடம்பரமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான், கார்த்தி, சூர்யா, விக்ரம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், மணிரத்னம் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று திருப்பதி சென்று புதுமணத் தம்பதியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

 

பின்னர் மாட வீதிகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் போட்டோ ஷூட் நடத்தியபோது, அவர்களது புகைப்படக்காரர்கள், நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கால்களில் செருப்பு அணிந்து மாட வீதியில் நடந்து சென்றனர்.

இது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து விக்னேஷ் சிவன் மன்னிப்புக்கோரி திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதினார்.

மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை மட்டும் திருமணத்துக்கு அழைத்தநிலையில், பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை.

இதனால் தம்பதியாக தங்கள் முதல் பத்திரிகையாளர் சந்திப்பை இன்று சென்னையில் உள்ள தாஜ் க்ளப் ஹவுசில் நடத்தினார்கள்.

இது அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்து பெறும் மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக நடைபெற்றது.

பின்னர் நிகழ்வில் பேசிய நயன்தாரா “எங்களுக்கு இதுவரை ஆதரவளித்த நீங்கள், இனிமேலும் ஆதரவு தர வேண்டும்” எனக் கூறினார்.

அதன்பிறகு பேசிய விக்னேஷ் சிவன் “நான் முதல் முதலில் கதை சொல்வதற்காக இந்த ஓட்டலில் தான் நயன்தாராவை சந்தித்தேன்.

அதனால் பத்திரிகையாளர் சந்திப்பு இங்கு நடைபெருகிறது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று கூறினார்.

Exit mobile version