இலங்கையில் அரசியலமைப்பு யாப்பு மக்களுக்காக எழுதப்படாமல் தனிப்பட்டவர்களுக்காக எழுதப்படுவதும் திருத்தப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இலங்கையின் முதலாவது அரசியலமைப்பு யாப்பு பிரித்தானிய குடியேற்றவாத்த த்தை புதிய குடியேற்றவாதமாக மாற்றுவதற்கு 1947இல் எழுதப்பட்டது.
1972இல் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தனது ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கு இலங்கைக் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு யாப்பை பயன்படுத்தினார்.
1978இல் ஆட்சியில் இருந்த ஜே ஆர் ஜயவர்த்தன தன்னை அதிகாரம் மிக்க ஆட்சியாளராக மாற்ற ஓர் அரசியலமைப்பு யாப்பை உருவாக்கினார். தன்னை நிறைவேற்று அதிகாரம் கொண்ட குடியரசுத்தலைவராக்கினார்.
திருத்தங்கள் நாட்டை திருத்தவில்லை
நிறைவேற்று அதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவர் முறைமையை ஒழிப்பேன் என சூளுரைத்துக் கொண்டு 1994இல் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அதை நிறைவேற்றாமல் அதிபரின் அதிகாரங்களை இலங்கை அரசியல் யாப்பின் 17-ம் திருத்தம் மூலம் குறைத்தார்.
2001-ம் ஆண்டு குடியரசுத் தலைவராக ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ச 18-ம் திருத்தத்தின் மூலம் தன் அதிகாரங்களை அதிகரித்தார்.
2015-ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமை அமைச்சராகவும் மைத்திரிபால சிறிசேன குடியரசுத் தலைவராகவும் கூட்டாக ஆட்சியைக் கைப்பற்றினர்.
ரணில் தலைமை அமைச்சரான தனது அதிகாரஙகளை அதிகரிப்பதற்காகவும் மைத்திரியை ஓரம் கட்டுவதற்காகவும் 19-ம் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அது ஆட்சியாளர்களின் பொறுப்புக் கூறலை அதிகரித்தது என்று சொல்லப்பட்டாலும் ரணில் ஆட்சிக் காலத்தில் இலங்கை நடுவண் வங்கியின் கடன் முறி விற்பனையில் பெரும் ஊழல் நடந்தது.
2019இல் கோத்தபாய ராஜபக்ச குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அவரது கட்சியான இலங்கை மக்கள் முன்னணி 2020இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரு வெற்றி பெற்றனர்.
இதனால் அவர்கள் 2020இல் இலங்கை அரசியலமைப்பின் 20-ம் திருத்தத்தை நிறைவேற்றினர்.
அதனால இலங்கை அவரகளது பிடிக்குள் போய்விட்டது என்ற குற்றம் சாட்டு இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் பரவலாக முன்வைக்கப்பட்டது.
இலங்கையின் அரசியலமைப்பு யாப்பு அவ்வப்போது தனிப்பட்டவர்களுக்கு ஏற்ப திருத்தப்பட்டமையால் நாட்டில் ஊழல், திறமையற்ற ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் இலங்கையின் பொருளாதார முகாமைத்துவத்தில் பேரினவாதம் இரண்டறக் கலந்திருப்பதாலும் நாடு தொடர்ச்சியாக சீரழிந்து கொண்டிருக்கின்றது.
கொலையாளிகளைத் தேடும் சிங்களம்
இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த தேர்தலில் இனக்கொலையை சிறப்பாகச் செய்பவர்கள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர்.
2019 குடியரசுத் தலைவர் தேர்தலிலும் 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் முடிவுகளை 2019 ஏப்ரல் மாதம் உதிர்த்த ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புக்களே முடிவு செய்தன.
அது தேர்தல் முடிவை மாற்ற திட்டமிட்டுச் செய்யப்பட்ட குண்டு வெடிப்புக்கள் என ஐயம் வெளிவிடப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை ஆலோசகரான சகல இரத்நாயக்க கோத்தபாய ராஜபக்சவை “சேர்” (Sir) என அழைப்பதை அவருடன் பணிபுரிபவர்கள் நகைத்த போது கோத்தபாய விடுதலைப் புலிகளை அழித்தவர் என்பதால் அவர் மரியாதைக்கு உரியவர் என சகல இரத்நாயக்க பதிலளித்தார்.
ஓர் இனம் இனைக்கொலையாளி எனக் குற்றம் சாட்டுபவரை மற்ற இனம் மதிப்புக்குரியவராக உயர்த்திக் கொண்டிருப்பதால் அவரது தகைமை, திறமை, நேர்மை போன்றவற்றிற்கு அப்பால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
முன்னாள் இலங்கை குடியரசுத் தலைவர் ஜே ஆர் ஜயவர்த்தன தமிழர்களுக்கு தீங்கிழைப்பவர்களை சிங்களவர்கள் மதிப்பார்கள் எனப் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
21இற்கு திசை திருப்பும் ரணில்
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் பெரும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த நிலையில் மஹிந்த ராஜ்பக்ச தலைமை அமைச்சுப் பதவியில் இருந்து விலக ரணில் விக்கிரமசிங்கேயை தலைமை அமைச்சராக 2022 மே மாதம் அவரது அரசியல் எதிரியாகக் கருதப்படும் குடியரசுத் தலைவர் கோத்தபாய ராஜபக்ச நியமித்தார்.
நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு, அரசியல் சீர்திருத்தம் என்பவற்றை முதன்மை கொள்கையாக முன்வைத்து ரணில் பதவியை ஏற்றுக் கொண்டார்.
அவர் பதவி ஏற்ற பின்னர் மேற்கு நாடுகளில் இருந்தும் உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றிடமிருந்தும் கடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
காலிமுகத்திடலில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை இலங்கை வர்த்தக சபை, சட்டவாளர் சபை, சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் ஆகியவை காலிமுகத் திடல் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைப்புக்களாக கருதப்படுகின்றது.
ரணில் தலைமை அமைச்சராகிய பின்னர் காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்தின் வலிமை குறைந்து விட்டதாகவும் சில செய்திகள் வெளிவருகின்றன.
குடியரசுத் தலைவர் பதவியை ஒழிக்க முடியுமா?
ரணில் விக்கிரமசிங்கவால் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் பொருட்களுக்கான விலையை குறைக்க முடியாது என்ற சூழலில் மக்களைத் திசைதிருப்பவும் தனது அதிகாரத்தை கூட்டி படிப்படியாக ராஜபக்சேக்களை ஓரம் கட்டவும் இலங்கை அரசியல் யாப்பிற்கான 21-ம் திருத்தத்தை கொண்டு வர முயல்கின்றார்.
அவரது கை இலங்கை அரசியலில் ஓங்குவதை விரும்பாத அவரது அரசியல் எதிரியான மக்கள் வலிமைக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரு 21-ம் திருத்தத்தை முன் வைத்துள்ளார்.
ரணில் குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை குறைக்க முயல்கின்றார். சஜித் குடியரசுத் தலைவர் பதவியையே ஒழித்துக் கட்ட முயல்கின்றார்.
சஜித் தன்னால் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதால் அப்பதவியை ஒழிக்க முயல்கின்றார். இறப்பதற்கு முன்னர் தான் குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற அவாவில் ரணில் அதை ஒழிக்க மறுக்கின்றார். கோத்தபாய ராஜபக்சவும் குடியரசுத் தலைவர் பதவியை ஒழிப்பதை எதிர்க்கின்றார்.
இரட்டைக் குடியுரிமைப் பிரச்சனை
21-ம் திருத்தத்தின் படி இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவோ குடியரசுத்தலைவராகவோ பதவி வகிக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்குவதில் ரணிலும் சஜித்தும் முனைப்பு காட்ட கோத்தபாயவின் மக்கள் முன்னணிக் கட்சியினர் பலர் அதை எதிர்க்கின்றனர்.
இலங்கையின் அரசியலமைப்பு தனிப்பட்டவர்களைச் சுற்றியே சுழலுகின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
கோத்தாவிற்கு அமைச்சுப்பதவி பிரச்சனை
கோத்தபாய ராஜ்பக்ச தன் குடியரசுத் தலைவர் பதவியுடன் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கின்றார்.
குடியரசுத் தலைவர் அமைச்சுப் பதவியை வகிக்க கூடாது என சஜித் மற்றும் ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் கருதுகின்றனர்.
ரணில் கோத்தபாயாவைச் சமாளிக்க வேண்டி இருப்பதால் அதில் அதிக முனைப்பு காட்டவில்லை. ஆனால் ரணிலிடம் பாதுகாப்பு அமைச்சுப் பதவி இருந்தால் அவரால் இலகுவாக கோத்தபாயாவை ஓரம் கட்டலாம்.
தலைமை அமைச்சரின் அதிகாரம்
தலைமை அமைச்சரான ரணில் தலைமை அமைச்சருக்கே அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் 21-ம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என விரும்புகின்றார்.
தற்போது தலைமை அமைச்சர் உட்பட எல்லா அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடமே உள்ளது.
அது ரணிலின் கையில் வந்தால் அவர் தனது பக்கம் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே ரணில் மனுஷ நாணயக்காரா, ஹரின் பெர்னாண்டோ ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சஜித் பிரேமதாசவின் மக்கள் வலிமைக் கட்சியில் இருந்து தன் பக்கம் கவர்ந்துள்ளார்.
மக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கோத்தபாயவின் அதிகாரங்களை தேர்தலில் தோல்வியடைந்து பின் கதவால் நாடாளுமன்றத்திற்கு வந்த ரணிலுக்கு தாரைவார்க்கக் கூடாது என கோத்தபாயவின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 20-ம் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தேர்தல் நடந்து நான்கரை ஆண்டுகளின் பின்னரே அதை குடியரசுத் தலைவர் கலைக்க முடியும்.
ரணில் அந்தக் கால எல்லையை 21-ம் திருத்தத்தின் மூலம் இரண்டரை ஆண்டுகளாக குறைக்க முயல்கின்றார்.
அதன் மூலம் அடுத்த ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தீர்த்துவிட்டு தேர்தலை நடத்தி தான் அதிகாரம் மிக்க ஒருவராக வரவேண்டும் என்பது ரணிலின் கனவு.
சிங்களவர்கள் எத்தனை தடவை அரசியலமைப்பை மாற்றினாலும் அவர்களால் ஒரு நேர்மையான, திறமையான ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பதில்லை என்பதை இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் திருந்தும் வரை திருத்தங்கள் பயன் தரமாட்டாது.