தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகச் கவலை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரின் கீழான மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர உதவி வழங்கல் தொடர்பான ஒருங்கிணைப்பாளர் மார்டின் க்ரிஃபித்ஸ், இருப்பினும் இந்நெருக்கடி தீவிரமடைவதைத் தடுப்பதற்கு அபிவிருத்திசார் உதவிகளை வழங்குவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மார்ட்டின் க்ரிஃபித்ஸ் மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல மில்லியன் மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட 1.7 மில்லியன் மக்களுக்கு அவசியமான அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கு 47 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு நாம் கோரியிருக்கின்றோம்.
எனினும் இது மேலும் பாரிய நெருக்கடியாக மாறுவதைத் தடுப்பதற்கு அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவது இன்றியமையாததாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.