மதுரங்குளி நகரத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு டீசல் பெறுவதற்காக காத்திருக்கும் வாகனங்களுக்கு அண்மையிலுள்ள காணில் இருந்து இனந்தெரியாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத ஆண்ணொருவரின் சடலம் கிடப்பதாக, மதுரங்குளி பொலிஸாருக்கு இன்று (13) காலை கிடைத்த தகவலை அடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில், டீசலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அண்மையிலுள்ள காணில் இருந்தே சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சடலம் கிடக்கும் இடத்துக்கு அண்மையில், ஜீப் வாகனத்துக்கு அருகில் ​உடைந்த போத்தல் துண்டுகளும் கிடந்துள்ளன பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர், டீசல் பெற்றுக்கொள்ள வந்தவரா? அல்லது வேறு நபரா என்பது தொடர்பில், இன்று (13) பிற்பகல் வரையிலும் பொலிஸாருக்கு எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை.

நீர் நிரம்பிய அந்த காணில், குப்புற கவிழ்ந்திருக்கும் நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர், 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர், காற்சட்டையும் ரி-சேர்ட்டும் அணிந்துள்ளார்.

எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் பலவற்றின் உரிமையாளர்கள் அல்லது சாரதிகள், வாகனத்தின் கதவுகளை பூட்டிவிட்டு சென்றுவிடுவதை வழ​க்கமாகக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரிவித்த மதுரங்குளி பொலிஸார், சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version