சேலம் சூரமங்கலம் முல்லை நகரை சேர்ந்தவர் தியாகலிங்கம். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு தனுஸ்ரீ (வயது 26) என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர்.
என்ஜினீயரான தனுஸ்ரீயை அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி- ரஞ்சனி தம்பதியின் மகன் கீர்த்திராஜ் (31) என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர்.
கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கீர்த்திராஜ் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கணவன், மனைவி இருவரும் சேலம் ரெட்டிப்பட்டி பகுதியில் வாடகை எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் கீர்த்திராஜ், தனது மனைவியின் காதில் பலமாக தாக்கினார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தனுஸ்ரீ, அதன்பிறகு கணவர் வீட்டிற்கு செல்லாமல், முல்லை நகரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனிடையே நேற்று முன்தினம் மாலை கீர்த்திராஜ் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு கீர்த்திராஜின் தந்தை பெரியசாமி, மருமகள் தனுஸ்ரீயின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர் தூக்கில் தொங்குவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரெட்டிப்பட்டிக்கு விரைந்து சென்று பார்த்தபோது, தனுஸ்ரீயை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனுஸ்ரீயின் கணவர் கீர்த்திராஜ், மாமனார் பெரியசாமி, மாமியார் ரஞ்சனி ஆகியோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில் கீர்த்திராஜ், தனுஸ்ரீயை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசாரிடம் அவர், பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அதன் விபரம் வருமாறு:- எனக்கும், தனுஸ்ரீக்கும் திருமணம் ஆன தொடக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். பின்னர் நாட்கள் செல்ல செல்ல, உறவினர்கள் எங்களிடம் உங்களுக்கு குழந்தை இல்லையா? என தொடர்ந்து கேட்க தொடங்கினர்.
இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. குழந்தை இல்லாததால் மனைவி தனுஸ்ரீயிடம் தகராறு செய்தேன். இதையடுத்து எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நான் அடித்ததில் தனுஸ்ரீயின் காதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் தனுஸ்ரீ கோபித்துக்கொண்டு அவருடைய தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் நான், முல்லை நகருக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு தனுஸ்ரீயை அழைத்தேன். அப்போது, அவரது பெற்றோர், செல்ல வேண்டாம் என கூறினர். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இருந்தாலும் பெற்றோர் பேச்சை பொருட்படுத்தாமல் புறப்பட்டு என்னுடன் வீட்டுக்கு வந்தார்.
வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நான், கிரிக்கெட் மட்டையால், தனுஸ்ரீயின் தலையில் பலமாக அடித்தேன்.
இதில் ரத்தம் பீறிட்டு அறை முழுவதும் சிதறியது. இந்த கொடூர தாக்குதலை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படியே தனுஸ்ரீ ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி துடிக்க துடிக்க கொன்றேன்.
இதையடுத்து தனுஸ்ரீ உடலை மின்விசிறியில் கட்டி தொங்க விட்டேன். அதன் பிறகு நான் ரத்தம் படிந்த எனது துணியை மாற்றி விட்டு, எனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது உறவினர்களை நம்ப வைத்து நாடகமாடினேன்.
ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையினாலும், தனுஸ்ரீ உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், இது கொலை என கண்டுபிடித்து தெரிவித்ததாலும் நான் சிக்கிக் கொண்டேன். இவ்வாறு கீர்த்திராஜ் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து கீர்த்திராஜை கைது செய்தனர். மேலும் கொலையை மறைத்தது தொடர்பாக அவரது பெற்றோர் பெரியசாமி- ரஞ்சனி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.