Site icon ilakkiyainfo

இயங்காநிலை நோக்கி நகரும் இலங்கை – வீரகத்தி தனபாலசிங்கம்

இலங்கையின் பொருளாதாரம் இயங்காநிலை நோக்கி விரைந்து நகருகிறது.எரிபொருட்கள் இல்லாததால் பொருளாதார செயற்பாடுகள் முடக்கநிலைக்கு வருகின்றன.பெரும்பாலான அரசாங்க சேவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறும் கேட்கப்படுகிறார்கள். பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் இடைநிறுத்தப்படுகின்றன.தனியார்துறை ஊழியர்களையும் பெரும்பாலும் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு பணிக்குமாறு முகாமைத்துவங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை கூறுகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு உணவு நெருக்கடியை மேலும் மோசமாக்கியிருக்கிறது.சுமார் 50 இலட்சம் மக்கள் உணவு நெருக்கடியினால் நேரடியாக பாதிக்கப்படப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.நாட்டின் சனத்தொகையில் 22 சதவீதமானவர்களுக்கு உணவு உதவி அவசரமாக தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டம் அறிவித்திருக்கிறது.

86 சதவீதமான குடும்பங்கள் உணவு நெருக்கடியைச் சமாளிக்க தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்திருப்பதாகவும் போசாக்கு குறைவான உணவை உட்கொள்வதாகவும் ஒரு வேளை உணவை தவிர்ப்பதாகவும் உலக உணவுத்திட்டம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

“கர்ப்பிணித் தாய்மார் தினமும் போசாக்கு நிறைந்த உணவை உட்கொள்ளவேண்டும். ஆனால் வறிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளால் போதிய போசாக்கு உணவை பெறமுடியாமல் இருக்கிறது. சில வேளை உணவை அவர்கள் தவிர்ப்பதால் தங்களினதும் பிள்ளைகளினதும் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்.

நகரங்களில் உள்ள வறிய குடும்பங்களும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வேலை செய்பவர்களும் பெறும் வருமானங்களில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற அதேவேளை பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது.

உலகளாவிய மட்டத்தில் தினமும் உணவு மற்றும் எரிபொருட்களின் விலைகள்  அதிகரித்தவண்ணமே இருக்கின்றன.ஆபத்தான நிலைமையைத் தவிர்க்க விரைந்து செயற்படவேண்டியிருக்கிறது” என்று ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான உலக உணவுத்திட்ட பிரதி பணிப்பாளர் அந்தியா வெப் கூறியிருக்கிறார்.

ஜூன் தொடக்கம் செப்டெம்பர் வரை 17 இலட்சம் மக்களுக்கு உயிர்காக்கும் உதவிகளுக்காக 4 கோடி 70 இலட்சம் அமெரிக்க டொலர்கள் உதவியை சர்வதேச சமூகத்திடம் இருந்து திரட்டுவதற்கான அழைப்பை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் கடந்த 9 ஆம் திகதி விடுத்திருந்தது. இலங்கைக்காக உணவு உதவிக்கு ஐக்கிய நாடுகள் வேண்டுகோள் விடுத்திருப்பது இதுவே முதற்தடவையாகும்.

உணவு வகைகள் மற்றும் பொருட்கள் விநியோக சங்கிலியும் சீர்குலைந்துபோயிருக்கிறது. இந்த விநியோகத்தில் ஈடுபடுகின்ற லொறிகள் போன்ற பெரிய வாகனங்களின் சாரதிகள் தங்களது சேவைகளை மீண்டும் தொடர எப்போது எரிபொருட்கள் கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மைல் கணக்கில் வரிசைகளில் காத்துக்கிடக்கிறார்கள்.

பெரும்பாலான விற்பனை நிலையங்களில் பல அத்தியாவசியப்பொருட்கள் பெரும் தட்டுப்பாடாகவுள்ளது.இதனிடையே வர்த்தகர்கள் பதுக்கலில் ஈடுபடுவதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகிறது மக்கள் எதிர்நோக்கப்போகின்ற பாரதூரமான உணவு நெருக்கடிக்கு இது கட்டியம் கூறுவதாக இருக்கிறது.

இந்த நெருக்கடி குறித்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எச்சரிக்கை செய்கிறார்களே தவிர செயலில் எதையும் காணோம். நிலைமை மோசமடைவதை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் கடந்த வருடம் ஏப்ரில் மாதம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் இரசாயனப் பசளைகள் இறக்குமதிக்கு தடைவிதித்து விவசாயத்துறைக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தவறை காலந்தாழ்த்தி ஒத்துக்கொண்டு தடையை அண்மையில் நீக்கியபோதிலும்,தேவையான பசளை வகைகளை இறக்குமதி செய்ய அரசாங்கத்திடம் வெளிநாட்டு செலாவணி இல்லை.அத்துடன் ரஷ்ய — உக்ரேன் போர் காரணமாக உலகளாவிய மட்டத்தில் பசளைகளின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தொழிற்சாலைகளின் செயற்பாடுகளும் குறைந்துவிட்டன.எரிபொருட்கள் தட்டுப்பாடு மற்றும் பொதுப்போக்குவரத்து இன்மையால் சேவைகள் துறையின் செயற்பாடுகளும் முடக்கநிலையில் இருக்கிறது. தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களது சேவைகளை கடந்த வாரம் 80 சதவீதத்தினால் குறைத்தார்கள். பஸ்களுக்கு எரிபொருட்களை அவர்களால் பெறமுடியாமல் போனால் இவ்வாரம் சேவைகளை முற்றாக நிறுத்திவிடவும் கூடும்.

இந்திய தொடர் கடனுதவியின் கீழான கடைசி டீசல் கப்பல் ஜூன் 16 வந்து சேர்ந்தது. அதற்குப் பிறகு அடுத்த எரிபொருள் கப்பல் எப்போது வரும் என்பது எவருக்கும் தெரியாமல் இருப்பதால் நிலைவரம் இருளார்ந்ததாக மாறியிருக்கிறது.

ஜூன் 23க்கு பிறகு எரிபொருட்கள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்று எரிசக்தி,மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியிருந்தார் என்ற போதிலும், எரிபொருள் கொள்வனவுக்கான புதிய தொடர் கடனுதவி எதுவும் உடனடியாகக்கிடைக்கும் சாத்தியம் தென்படவில்லை என்பதால் அவரது அறிவிப்புகள் பெருமளவுக்கு நம்பிக்கையைத் தருவதாக இல்லை என்று அந்த துறை சார்ந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

அதேவேளை, தினமும் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இது சட்டம்,ஒழுங்கு சீர்குலையும் ஆபத்தைக் கொண்டுள்ளது.கடந்தவாரம் நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கும் மக்களுக்கும் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே கைகலப்புகள் இடம்பெற்றிருந்தன.

தேவையான டீசலையும் உலை எண்ணெய் மற்றும் அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியையும் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்ய இயலாமல் போகுமானால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.இது நிலைவரத்தை மேலும் மோசமாக்கும்.

சகல மின்சக்தி மூலங்களில் இருந்தும் விநியோகங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் அடுத்த மூன்று வருடங்களுக்கு மின்வெட்டை தொடர வேண்டி வரலாம் என்று கடந்தவாரம் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அரசியல் வர்க்கம் என்ன செய்யப்போகிறது என்பது முக்கியமான கேள்வி.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்பதற்கான அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்கென்று சவால்களுக்கு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்ற விக்கிரமசிங்கவுக்கு அரசாங்கத்துக்குள் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைப்பதாக இல்லை.

ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஷக்களின் நலன்களை அடிப்படையாகக்கொண்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரமே செயற்படுகிறார்கள் என்பது வெளிப்படையானது.

பிரதமராக விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டது குறித்து ஜனாதிபதியிடம் அவர்கள் தொடர்ச்சியாக அதிருப்தி தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கைகளைத் தான் பிரதமர் முன்னெடுக்கவேண்டும் ; அரசியலமைப்பு திருத்தங்கள் இப்போது அவசியமில்லை என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.

ஜனாதிபதியின் அதிகாரங்களில் குறைப்பைச் செய்து பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் நோக்கில் கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்படுகின்ற 21ஆவது அரசியலமைப்பத் திருத்தவரைவை கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகரித்திருக்கிறது. அதை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சியிடமிருந்து எத்தகைய முட்டுக்கட்டைகள் வரும் என்பதை இப்போதே கூறிவிடமுடியாது.

அதேவேளை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் குறித்து அவர்கள் இருவரும் அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் தனித்தனியாக கலந்தாலோசனை நடத்துகிறார்கள்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான தற்போதைய உறவுமுறை குறித்து பிரபல அரசியல் ஆய்வாளரும் பத்திரிகையாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் கடந்தவாரம் டெயிலி மிரர் பத்திரிகையில் தனது கட்டுரையில் எழுதியபோது தேளும் தவளையும் சம்பந்தப்பட்ட நீதிக்கதையொன்றை நினைவூட்டியிருந்தார்.

‘தேளுக்கு நீந்த முடியாது. ஆற்றைக்கடக்க விரும்பி தவளையிடம் உதவி கேட்டது.முதுகில் ஏற்றிச்செல்லும்போது தேள் தனக்கு கொட்டிவிடும் என்று பயந்து தவளை மறுத்துவிட்டது. ஆனால் அவ்வாறு செய்யமாட்டேன், நான் உன்னைக் கொட்டி நீ இறந்தால் ஆற்றில் நானும் மூழ்கி இறக்கவேண்டிவருமல்லவா…. அதனால் நான் ஒன்றும் செய்யமாட்டேன் என்று தேள் உறுதியளித்தது.

அந்த உறுதிமொழியை நம்பி தவளை தேளை ஏற்றி ஆற்றில் நீந்திச்சென்றது.ஆற்றில் இடைநடுவில் தேள் தனது வாலினால் தவளையைக் கொட்டிவிட்டது.தவளை இயங்கமுடியாமல் ஆற்றில் மூழ்கியது.தவளையின் முதுகில் ஏறியிருந்த தேளும் மூழ்கியது.மூழ்கிக்கொண்டுபோகும்போது தவளை தேளிடம் “ஏன் இவ்வாறு செய்தாய் ? என்று கேட்டது.

அதற்கு தேள் “எனக்கு தெரியவில்லை. எனது உணர்ச்சியை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.அது எனது இயல்பு” என்று பதில் கூறியது. இறுதியில் இரு பிராணிகளும் ஆற்றில் மூழ்கி இறந்துபோயின.

கதையில் வரும் தேளைப்போன்று கோட்டா…கோட்டாதான்.அவருக்கே உரித்தான இயல்பின்படி அவர் அதிகாரத்தை விட்டுப்போகத் தயாராயில்லை. பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கு ரணிலை முழுமையாக அனுமதிக்கவோ அல்லது அவருடன் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ளவோ கோதா விரும்பவில்லை.

இங்கு தவளையை தேள் இன்னமும் கொட்டவில்லை.ஆனால் அது கொட்டுவதற்கு தனது வாலை அசைக்கிறது என்பதற்கான அந்தரங்க அறிகுறிகள் தெரிகின்றன என்று ஜெயராஜ் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் பதவியேற்ற தொடக்கத்தில் அமைதியாக இருந்த எதிரணி கட்சிகள் இப்போது அரசாங்கத்துக்கு எதிராக தீவிரமாகப் பேசத்தொடங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மார்ச் 15 ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் அவரது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியபோது தனது தலைமையில் அமையக்கூடிய அரசாங்கத்துக்கு சலுகை அடிப்படையில் எரிபொருட்களை வழங்க மூன்று மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் தயாராயிருப்பதாக அறிவி்த்தார் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கும்.

அவ்வாறு அறிவித்தவர் பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கேட்டபோது மறுத்துவிட்டார். இப்போது அவர் இந்த அரசாங்கத்தை ஒரு கேலிக்கூத்து என்று வர்ணிப்பதுடன் தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கோருகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலகி புதிய ஜனாதிபதியையும் பிரதமைரையும் பாராளுமன்றம் தெரிவுசெய்வதற்கும் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதற்கும் வழி விடவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

ஆனால், அதேவேளை அந்த கட்சியின் முக்கிய எம்.பி.க்களான ஹர்ஷா டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன போன்றவர்கள் விக்கிரமசிங்கவின் அழைப்பையேற்று பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்கள். இது பற்றி பிரேமதாச எதுவும் பேசுவதாக இல்லை.

பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இப்போது பிரிந்து நிற்கிறது.கோட்டாபய — விக்கிரமசிங்க அரசாங்கம் பதவியில் இருக்கும்வரை சர்வதேச நிதி நிறுவனங்களோ அல்லது உதவி வழங்கும் நாடுகளோ இலங்கையை மீட்டெடுக்க முன்வரப்போவதில்லை என்று சிறிசேன கடந்தவாரம் கூறினார்.

பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசாங்கம் ஒன்று 15 பேர் கொண்ட அமைச்சரவையுடன் அமைக்கப்படவேண்டும் என்றும் 6மாத காலத்திற்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் அவர் கோருகிறார். நல்லாட்சிக் காலத்தில் தனக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் மூண்டதைப் போன்ற போட்டி இப்போது கோட்டாபயவுக்கும் பிரதமருக்கும் இடையில் ஆரம்பித்திருப்பதாகவும் சிறிசேன கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியைப் (ஜே.வி.பி.) பொறுத்தவரை தற்போதைய அரசாங்கத்தை ஒரு சர்வகட்சி அரசாங்கமாக ஏற்றுக்கொள்ளத்தயாராயில்லை. நாட்டை மீட்டெடுக்க ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு சர்வகட்சி அரசாங்கம் ஒன்றில் பங்கேற்கத்தயார் என்று அறிவித்திருக்கும் ஜே.வி.பி. 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறது.

அதேவேளை பொதுஜன பெரமுனவின் நேச அணிகளாக இருந்து தற்போது பிரிந்திருக்கும் விமல் விரவன்ச,உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றவர்களும் இன்றைய அரசாங்கத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். அரசாங்கம் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் இயக்கப்படுகிறது என்பது அவர்களது நிலைப்பாடு.

இந்த நிகழ்வுப்போக்குகள் சகலதையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது தற்போதைய பாராளுமன்றத்தை வைத்துக்கொண்டு பொருளாதார நெருக்கடியையோ அரசியல் நெருக்கடியையோ தீர்க்கமுடியாது என்பது தெளிவாகத்தெரிகிறது. அதன் உறுப்பினர்களின் வகையும் தொகையும் எந்தவொரு உருப்படியான சீர்திருத்தத்தையும் அனுமதிக்காது என்பது இதுவரையான அனுபவமாகும். அதனால் நாட்டு மக்களின் புதிய ஆணையுடன் ஒரு பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படவேண்டும்.

ஆனால் தற்போதைய நெருக்கடி நிலையில் பொதுத்தேர்தல் ஒன்றை நாடு தாங்குமா என்ற கேள்வி எழுகிறது.அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு பிறகு தேர்தலைச் சந்திக்க தயாராகுமாறு பொதுஜன பெரமுன எம்.பி.க்களிடம் ஜனாதிபதி கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் பொதுத்தேர்தல் ஒன்றுக்கு நாடு முகங்கொடுக்கக்கூடியதாக பொருளாதார நெருக்கடியில் தணிவு ஏற்படுமா?

வீரகத்தி தனபாலசிங்கம்

Exit mobile version