Site icon ilakkiyainfo

தமிழ்நாடு: 95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு வீட்டை இடித்த அதிகாரிகள்

தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு அதிகாரிகள் வீட்டை இடித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சீரங்ககவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவருடைய தந்தை 95 வயதான குப்பணகவுண்டர். இவர் குடும்பம் இதே கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஓலைக் குடிசை வீட்டில் வசித்துவந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் வீட்டை புனரமைத்து கட்டிட வீடு கட்டி இருக்கிறார்கள்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரிகள் சுமார் 30 குடும்பத்தினருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளார்கள்.

ஒரே நாளில் 17 வீடுகள் அகற்றம்

நெடுஞ்சாலை துறை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பில் இருக்கக்கூடிய 30 வீடுகளை அதிகாரிகள் அகற்ற இருக்கிறார்கள்.

தற்போது முதற்கட்டமாக வெங்கடாசலம் வீடு உட்பட 17 வீடுகளை தற்போது அகற்றி இருக்கிறார்கள்.

அனைவருமே குறிப்பிட்ட இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்தவர்கள். தற்பொழுது ஒரு சிலர் தவிர பெரும்பாலானோர் வீடு இன்றி உறவினர்கள் வீட்டிலும், கோவில்களிலும் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

ஒரு வீட்டை புல்டோசர் மூலம் தகர்ப்பது சட்டப்பூர்வமானதா, சட்டவிரோதமானதா?
உத்தர பிரதேசத்தில் புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு: அறிக்கை கேட்ட உச்ச நீதிமன்றம் – 10 தகவல்கள்

“எனது வீட்டை அகற்றுவதற்காக வருவாய் துறையிடம் இருந்து நோட்டீஸ் வழங்கும்போது நான் ஊரில் இல்லை, அதனால் எனது கையெழுத்தை போலியாக போட்டு அந்த நோட்டீசை நான் பெற்றுக் கொண்டது போல் ஆவணப்படுத்தி எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி எனது வீட்டை அகற்றி உள்ளார்கள். இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கிறேன்” என்கிறார் வெங்கடாசலம்.

“தற்போது எனக்கு 54 வயதாகிறது. நான் பிறப்பதற்கு முன்பிருந்தே இந்த வீட்டில் எனது தாய் தந்தையர் வசித்துவந்தனர். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வீட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். மற்ற குடும்பத்தினரும் தோராயமாக 50 ஆண்டுகளுக்கு மேல் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள். சாலை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு எனக்கூறி எங்களுடைய வீட்டை தற்போது அகற்றி வருகிறார்கள். இதனிடையே ஆக்கிரமிப்பிற்கு சம்மதம் என்று எனது கையெழுத்தை அதிகாரிகளே போட்டுக்கொண்டு ஜேசிபி இயந்திரத்துடன் வந்து எனது வீட்டை அகற்றினார்கள். மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்தோ, வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தோ, மின்வாரிய அலுவலகத்தில் இருந்தோ, ஊராட்சி அலுவலகத்தில் இருந்தோ தனக்கு எந்தவொரு தகவலும் அளிக்காமல் எனது வீட்டை இடித்தார்கள்” என்று கூறியுள்ளார்.
95 வயதான எனது தந்தை தற்போது தெருவில் இருக்கிறார்

“படுத்த படுக்கையாக இருக்கும் எனது 95 வயதான தந்தையை கட்டிலுடன் வீட்டிலிருந்து தூக்கி தெருவில் வைத்துவிட்டு காலம் காலமாக குடியிருந்து வந்த வீட்டை காவல் துறை உதவியுடன் அவசர அவசரமாக இடித்தார்கள். தற்போது நானும் எனது தந்தையும் வீடு வாசல் இன்றி தெருவில் இருக்கிறோம்.

அசாம் வெள்ளம்: 45 பேர் பலி, பல லட்சம் பேர் வீடிழந்தனர்- எங்கும் தண்ணீர்
சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கு பாதிப்பு: ஆசையாக வாங்கிய வீடுகளில் அகதியாக வாழும் மக்கள்

எங்களுக்கு மாற்று இடமோ, வீடோ இல்லாததால் வீட்டை இடிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.

வீட்டை இடிப்பதற்கு வீட்டில் இருந்த கதவை மட்டுமே எங்களால் எடுத்துக் கொள்ள முடிந்தது மற்ற பொருட்கள் அனைத்தும் வீட்டின் உள்ளே இருந்தது.

இருப்பினும் அதை எடுக்க கூட அவகாசம் இல்லாத காரணத்தினால் வீட்டில் உள்ள பொருட்களோடு எனது வீட்டை இடித்துள்ளார்கள்” என்றார் வெங்கடாசலம்..

தற்போது வருவாய் துறையிடம் தங்களுக்கு மாற்று இடம் வேண்டி கோரிக்கை மனு கொடுத்தால் அவருக்கு மாற்று இடம் கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் வட்டார வளர்ச்சி அலுவலர் அந்தோணியார்.

“சாலை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பில் இருந்த 30 வீடுகளை அகற்றுவதற்கு நாங்கள் நோட்டீஸ் வழங்கி உள்ளோம். இதில் வெங்கடாச்சலம் குடும்பத்தினருக்கு மட்டுமே நோட்டீஸ் வழங்கவில்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்படி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு அனைத்துமே வழிமுறைகளையும் முறையாக பின்பற்றி உள்ளோம். வயதான நபரை வீட்டிலிருந்து வெளியே தூக்கிவந்து வெளியே வைத்துவிட்டு வீட்டை இடித்தது வருத்தத்துக்கு உரிய விஷயம்தான். இருப்பினும் ஒரு நபருக்காக ஆக்கிரமிப்பை அகற்றுவதை நிறுத்த இயலாது. தற்போது வெங்கடாசலபதிக்கு மாற்று இடம் வேண்டும் என்றால் வருவாய் துறையிடம் முறையாக மனு அளித்தால் அவருக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும்” என்றார் அந்தோணியார்.

Exit mobile version