தனது மார்பகங்கள் குறித்து தான் பெருமை அடைவதாக முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஹிருணிகா பிரேமசந்திர, போலீஸாருடன் முரண்பட்டிருந்தார்.
இதன்போது, ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் செல்ல முடியாதவாறு, போலீஸார் பாதுகாப்பு வேலிகளை அமைத்து, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை ஏற்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், ஹிருணிகா பிரேமசந்திர, அந்த தடைகளை மீறி, பிரதமரின் வீட்டிற்குள் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில், போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சிலர், ஹிருணிகா பிரேமசந்திரவின் மார்பகங்கள் குறித்து தவறான பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
”எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமை அடைகின்றேன். நான் மூன்று அழகிய குழந்தைகளுக்கு இதனூடாக தாய்ப்பால் கொடுத்தேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, எனது முழு உடலையும் அவர்களுக்கு அர்ப்பணித்தேன்.
(போலீஸாருடனான மோதல் காரணமாக) எனது வெளியில் தென்பட்ட மார்பகங்களை வைத்து கேலி, கிண்டல் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருந்த போது, அவர்களின் தாய்மார்களின் மார்பகக் முலைக்காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன். எப்படியும், எனது மார்பகங்கள் குறித்து நீங்கள் பேசி, மீம்ஸ்களை உருவாக்கி, சிரிக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்பது உங்களுக்கு தெரியவரும்” என அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமசந்திரவின் தாய்மையை அவமதிக்கும் விதத்திலான புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
நாகரீகமான சமூதாயம் தாய்மையை அவமதிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தாய்மை என்ற கருப் பொருள் எல்லாவற்றிற்கும் மேலாக உயரிய இடத்தில் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பிரச்னைக்காகவே ஹிருணிகா பிரேமசந்திர, தனது வீட்டிற்கு முன்பாக வருகை தந்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த பிரச்னைக்கு உரிய சித்தாந்தத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும் என கூறிய அவர், ஹிருணிகா பிரேமசந்திரவின் தாய்மையை அவமதிக்கும் வகையில் செயல்படக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
போலீசை கட்டியணைத்து…
பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த போலீஸாரை கட்டி அணைத்து, அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
முதலில் பாதுகாப்பு பிரிவினருடன் மோதலில் ஈடுபடும் அளவிற்கு முயற்சிகளை மேற்கொண்ட ஹிருணிகா பிரேமசந்திர, பின்னர் போலீஸாரை கட்டி அணைத்து, சுமூகமான முறையில் கலந்துரையாடி, அங்கிருந்து வெளியேறியிருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
யார் இந்த ஹிருணிகா பிரேமசந்திர
இலங்கையின் பிரபல அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் புதல்வியே ஹிருணிகா பிரேமசந்திர.
2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் போது, இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில், பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என குற்றச்சாட்டப்பட்ட பிரபல அரசியல்வாதியான துமிந்த சில்வா உள்ளிட்ட தரப்பிற்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கினார் ஹிருணிகா பிரேமசந்திர.
அன்று முதல் இலங்கை அரசியல் களத்தில் ஹிருணிகா பிரேமசந்திர, ஒரு முக்கிய பெண் அரசியல்வாதியாக திகழ்ந்து வருகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் களமிறங்கி, தோல்வியை தழுவினார்.
எனினும், ஹிருணிகா பிரேமசந்திர இன்றும் செயற்பாட்டு அரசியலில் முன்னிற்கிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் ஹிருணிகா பிரேமசந்திர, தற்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகவும் போராட்டங்களை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.