Site icon ilakkiyainfo

கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?

தமிழ்நாடு முதல்வராக இருந்த மறைந்த ஜெ.ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது அசையும் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவிடும்படி பெங்களூருவில் உள்ள தகவல் உரிமை செயல்பாட்டாளர் ஒருவர் இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வழக்கறிஞரும் ஆர்டிஐ செயல்பாட்டாளருமான டி.நரசிம்மமூர்த்தி, இந்த கடிதத்தை பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிபதிக்கும் எழுதியிருக்கிறார்.

அதில், நகைகள், புடவைகள் மற்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள பல சொத்துக்களை ஏலம் விடலாம் என்றும் அந்தப் பணத்தை பொது நலனுக்காகப் பயன்படுத்தலாம் என்றும் யோசனை கூறியுள்ளார்.

விதான் சவுதாவில் உள்ள கர்நாடக மாநில கருவூலத்தில் இப்போது ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் உள்ளன.

“ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலத்தில் விற்றால், அவற்றை உணர்பூர்வமானதாக கருதி அவரது தீவிர தொண்டர்கள் வாங்குவார்கள். அதன் மூலம் கற்பனை செய்ய முடியாத பொது ஏலத் தொகையைப் பெற முடியும்,” என்று நரசிம்மமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

கருவூலத்தில் கிடக்கும் பல்வேறு பொருட்களில், புடவைகள், நகைகள் மற்றும் சால்வைகள் அடங்கும். லட்சக்கணக்கான ஜெயலலிதாவுக்கு லட்சக்கணக்கில் ஆதரவாளர்கள் மற்றும் அபிமானிகள் இருப்பதால் நல்ல தொகையை ஈட்ட முடியும்,” என்றும் தமது யோசனை குறித்து பிபிசியிடம் பேசிய நரசிம்மமூர்த்தி கூறினார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு (சிறப்பு நீதிமன்றம்) மாற்றப்படும் முன்பே, இந்த பொருட்கள், 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றத்தின் உத்தரவின்படி பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, வி.என். சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றமும் அந்த தீர்ப்பை உறுதிப்படுத்தியது. ஆனால் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் விவரம்

தங்கம், வைரம், ரூபி, மரகதம், முத்துக்கள், ரத்தினக்கற்கள் மற்றும் பல வண்ண கற்கள் போன்றவை உள்பட 468 நகைகள் பட்டியலில் உள்ளன.

மேலும், சில வகை மின்னணு பொருட்கள், ரொக்கம், விலை உயர்ந்த சேலைகள், சால்வைகள், காலணிகளும் அந்த பட்டியலில் உள்ளன. இதில் புடவைகளின் எண்ணிக்கை மட்டும் 11 ஆயிரத்து 344, சால்வைகளின் எண்ணிக்கை 250, காலணிகள் 750 என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சொத்துகள்

சென்னை தேனாம்பேட்டை போயஸ் கார்டனில் 1996ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி ஜெயலலிதாவின் இல்லத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட குறிப்பேட்டில், 44 ஏசி இயந்திரங்கள், 33 தொலைபேசி மற்றும் இன்டர்காம்கள், 131 சூட்கேஸ்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர்க் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 டேபிள்கள், 24 கட்டில்கள், 9 டிரெஸ்ஸிங் டேபிள்கள், 81 அலங்கார தொங்கும் விளக்குகள், 20 சோபா செட்டுகள், 750 காலணிகள், 31 டிரெஸ்ஸிங் கண்ணாடி டேபிள்கள் மற்றும் 215 படிக வெட்டுக் கண்ணாடிகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

புடவைகளின் தரம் குறையும் – நிபுணர்கள்

ஜவுளி நிபுணர்கள், “ஜவுளிப் பொருட்களில் சில வகை பொருட்கள் மடிந்த நிலையில் நீண்ட காலம் இருந்தால் அவை நாளடைவில் தரத்தை இழந்து, நிறமும் மங்கலாகலாம்,” என்று தெரிவிக்கின்றனர்.

சால்வைகள் கெட்டுப்போகலாம். இதே போல், காலணிகள் மற்றும் பிற தோல் அல்லது பொருட்கள் அவற்றின் தரம் மற்றும் வலிமையை இழக்கலாம். அப்படியானால், ஏ,பி,சி பட்டியலில் உள்ள பொருட்கள் தரமற்றதாகவும் அதன்பின் எந்தப் பயன்பாட்டிற்கும் தகுதியற்றதாகலாம் என்று கடிதத்தில் நரசிம்மமூர்த்தி கூறியுள்ளார்.

எனவே உரிய சட்ட நடைமுறைகளில் நீதி பரிபாலன முறைகளுக்கு உட்பட்டு எது தகுதியாக இருக்குமோ அதைப் பின்பற்றி இந்த நீதிமன்றம் இணைப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பொருட்களை ஏலத்தில் விற்க உரிய அதிகாரிகள் மூலம் அனுப்பலாம். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மாநில கருவூலத்தில் வரவு வைத்து மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் என்று நரசிம்மமூர்த்தி கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version