சுடச்சுட பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் சாப்பாடு, குழம்பு மற்றும் கீரையை பெறுவதற்காக கைகளில் குழந்தையுடன் நீண்ட வரிசைகளில் பெண்களும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் காத்திருக்கிறார்கள். ஏனெனில், இதுதான் அவர்களுக்கு, அந்த நாளுக்கான ஒரு வேளை உணவாக இருக்கலாம். இதுதான் இலங்கையின் தற்போதைய களநிலவரமாக உள்ளது.
“பசிக்கொடுமையால் நாங்கள் இங்கு நிற்கிறோம்” என்று கூறுகிறார் நான்கு குழந்தைகளுக்கு தாயான சந்திரிகா.
இவ்வாறு வரிசையில் நின்று பெறப்பட்ட உணவை பிசைந்து தன் குழந்தை ஒன்றுக்கு ஊட்டிக்கொண்டே பேசிய அவர், தற்போதைய பொருளாதார நெருக்கடியில், ஒரு துண்டு ரொட்டி வாங்குவது கூட மிகவும் கடினமாக உள்ளதாக கூறுகிறார்.
“நான் குழந்தைகளுக்கு அவ்வப்போது பால் மற்றும் சாப்பாடு போன்றவற்றை கொடுப்பதுண்டு, ஆனால் காய்கறிகளின் விலை மிகவும் அதிகமாக உள்ளதால் அவற்றை வாங்கி சமைப்பதில்லை.”
மோசமான நிலையில் உள்ள அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவை இலங்கையின் பொருளாதாரத்தை படுமோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அரசின் வருமானத்தை பாதிக்கும் வரிக் குறைப்புகளை முன்னெடுத்ததுடன், நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிடம் இருந்து பெருமளவு கடன் வாங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இதுமட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கொரோனா நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டதும், யுக்ரேன் போரால் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையுயர்வும் இலங்கையை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.
இலங்கை தற்போது மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலுள்ள 70 சதவீதம் குடும்பங்கள் தங்களது தினசரி உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கே சிரமப்படும் சூழ்நிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நிலவி வருவதாகவும், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதாகவும் யுனிசெஃப் அமைப்பு கூறுகிறது.
“குழந்தைகளின் நிலை பரிதாபமாக உள்ளது”
குடும்பத்தின் உணவுத் தேவையை நிறைவேற்றுவதற்கான வழிகள் குறைந்ததால், தனது வீட்டிற்கு அருகே உள்ள சமுதாய சமையல் கூடத்திற்கு முதல் முறையாக சென்ற சந்திரிகா, “எங்களால் விண்ணை முட்டும் தினசரி செலவை தாக்குப்பிடிக்க முடியவில்லை; அங்கும் இங்கும் கடன் வாங்கியே பிழைப்பை நடத்தி வருகிறோம்” என்று கூறுகிறார்.
சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு ஒற்றைப் பலாப்பழத்தை வைத்து மூன்று நாட்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்த கணவன் அற்ற தாய் ஒருவரின் அவலநிலையை கண்ட கிறித்தவப் பாதிரியாரான மோசஸ் ஆகாஷ் தேவாலயம் ஒன்றில் சமுதாய சமையல் கூடத்தை தொடங்கினார்.
“கடந்த நான்கு மாதங்களாக ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கூடஉணவு சாப்பிடாத பலரை பார்க்க முடிகிறது” என்கிறார் பாதிரியார் மோசஸ்.
கடந்த மாதம் இந்த சமுதாய சமையல் கூடத்தை திறந்தபோது சுமார் 50 பேர் தினமும் உணவுக்காக வந்த நிலையில், அது தற்போது ஏறக்குறைய 250ஆக அதிகரித்துள்ளதாக கூறுகிறார் அவர். கடந்த ஜூன் மாதம் மட்டும் இலங்கையில் உணவுப்பொருட்களின் விலை 80% உயர்ந்த நிலையில், இந்த தகவல் வியப்பளிப்பதாக இல்லை.
“ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற குழந்தைகளை இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது” என்று அவர் மேலும் கூறுகிறார்.
“என் குழந்தைகளின் நிலை பரிதாபகரமாக உள்ளது. அவர்கள் எல்லா வகையிலும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் அல்லது பால் பாக்கெட் கூட வாங்க முடியாத நிலையில் நான் இங்கு நிற்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.
கூலித் தொழிலாளியாக இருக்கும் சஹ்னாவின் கணவர் வாரத்திற்கு 800 இந்திய ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் நிலையில், அதை வைத்து ஒட்டுமொத்த குடும்பத்தின் உணவுத் தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக அவர் கூறுகிறார்.
“நாட்டின் தலைவர்கள் நல்ல வாழ்க்கையை வாழ்கிறார்கள்; அவர்களின் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றால், என் குழந்தைகள் ஏன் அப்படி இருக்கக்கூடாது?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
மனிதாபிமான நெருக்கடி
சூழ்நிலை இப்படி இருக்க, சஹ்னா தனது அடுத்த குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்தில் நாட்டின் பொருளாதார சூழ்நிலை மென்மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் தலைநகரான கொழும்புவில் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அதன் மேயர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் தொடர் மின்வெட்டு போன்றவை தினசரி வாழ்வின் அங்கமாகிவிட்டதால் மக்களால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று பொருட்களை வாங்கவோ மீண்டு வரவோ அல்லது சமைக்கவோ முடியாத சூழல் நிலவுகிறது.
“மக்களால் தாங்கள் முன்பு வாங்கி வந்த பொருட்களை இப்போது வாங்க முடியவில்லை. எனவே, மக்கள் உணவு உண்பதையும், குறிப்பாக சத்தான உணவு உண்பதை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஊட்டச்சத்து குறைபாடு நாட்டின் மிகப் பெரிய பிரச்னை என்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்” என்று யுனிசெஃப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் கூறுகிறார்.
“நாங்கள் ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தவிர்க்க முயன்று வருகிறோம். ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் இறக்கும் நிலை இன்னும் ஏற்படவில்லை என்பது நல்லதுதான், ஆனால் அதைத் தவிர்க்க பல்வேறு தரப்பினரின் ஆதரவு அவசியம்.”
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், மேலும் 10 லட்சம் மக்களுக்கு சுகாதார சேவையை வழங்கவும் அவசர நிதி உதவிக்கு யுனிசெஃப் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 13 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும் என்று என்று இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர் ரேணுகா ஜயதிஸ்ஸ கூறுகிறார்.
மக்கள் பெரும்பாலும் அந்நியர்களின் தயவை நாடியிருப்பதால், இந்த பொருளாதார நெருக்கடி ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் தருணமாகவும் அமைந்துள்ளது. ஆனால் இரக்கமும் நம்பிக்கையும் கூட இப்போது விலைமதிப்பற்றவைகளாக மாறி வருகின்றன.
கொடையாளர்களின் உதவி மட்டும் கிடைக்காவிடில் தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளின் உயிர் ஆபத்தில் இருந்திருக்கும் என்று கொழும்புவிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மருத்துவரான சமன் குமாரா கூறுகிறார்.
தற்போது அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதில் “முற்றிலும் கொடையாளர்களின் நிதியுதவியை நம்பியே இந்த மருத்துவமனை இயங்குகிறது” என்றும் பல நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளதால் இன்னும் நிறைய கொடையாளர்கள் உதவ முன்வர வேண்டுமென்றும் அவர் கூறுகிறார்.
மறுபுறம், சமுதாய சமையல் கூடத்தில் உள்ள சந்திரிகா, தனது மகனுக்கு கிடைத்த உணவை ஊட்டிவிடுவதை நிறைவு செய்கிறார்.
“என்னுடைய மகிழ்ச்சியான நாட்கள் முடிந்துவிட்டன. ஆனால் எங்களது குழந்தைகள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது” என்று அவர் கூறுகிறார்.
“அவர்கள் வளரும்போது சூழ்நிலை என்னவாகும் என்று எனக்கு தெரியவில்லை.”