ilakkiyainfo

இலங்கைக்கு தமிழ்நாடு காவல்துறை ரூ. 1.40 கோடி, தொழில்துறை ரூ. 1.35 கோடி நிவாரண நிதி – முதலமைச்சரிடம் வழங்கினர்

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல் துறையினர் ரூ. 1.40 கோடி அளித்தனர். தொடர்ந்து, இந்திய தொழில் கூட்டமைப்பினர் ரூ. 1.35 கோடி வழங்கியுள்ளனர்.

இந்திய தொழிற்கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் சத்யகாம் ஆர்யா, முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.சந்திரகுமார், சென்னை மண்டல தலைவர் ஜெ.முருகவேல், பான் பியூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு. பி.லஷ்மிபதி, தமிழ்நாடு இயக்குநர் டி.துளசிராஜ், துணை இயக்குநர் எஸ்.வெங்கட்ராமன் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர்.

அப்போது, இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1.35 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.

இதையடுத்து, டிகே பிரஸ்டீஜ் நிறுவனத்தின் குழும இயக்குநர் கே.சங்கரன் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இதேபோல் நேற்றைய தினம், தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் 37 மாவட்டம் மற்றும் 9 மாநகர காவலர்கள் சார்பாக ரூ. 1,34,19,643 மற்றும் இந்திய காவல் பணி அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக ரூ. 6,63,500 என மொத்தம் ரூ. 1,40,83,143 முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, முதலமைச்சரிடம் இதற்கான காசோலையை வழங்கினார்.

Exit mobile version