Site icon ilakkiyainfo

புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர் மனைவி, குழந்தைகளை கொன்று, தற்கொலை – கடன் சுமையால்

 

கடன் சுமையால் புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மனைவி, இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(38). ஆட்டோ ஓட்டுநர். குடும்பத்துடன் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். இதனிடையே கடன் சுமை காரணமாக ஆட்டோ ஒட்டவில்லை.

கடனால் அவரின் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 20 மாதங்களாக எலக்ட்ரீசன் வேலை மற்றும் கூலி தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இன்று காலை சுமார் 9 மணியளவில், அவரது உறவினர்களுக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, அனைவரையும் அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார்.

தகவலைக் கேட்ட உறவினர்கள் உடனடியாக தியாகராஜன் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது தியாகராஜன், அவரது மனைவி பச்சைவாலி(வயது 34), 7 வயது பெண், மற்றும் 3 வயது ஆண் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கணவர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் பிரேதங்களை புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உடற் கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் ராமேஷிடம் கேட்டபோது, “கடன் சுமை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகள் இருவரைக் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். விசாரணை நிறைவு பெற்ற பின்னரே முழு விவரம் தெரியவரும்,” என்றார்.

Exit mobile version