இலங்கை வரலாற்றில முதல் தடவையாக சிங்கள ரியாலிட்டி இசை நிகழ்ச்சி போட்டியில், தமிழ் சிறுமி ஒருவர் முதலிடத்தை பெற்று, வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பதுளை மாவட்டம், பண்டாரவளை நகரில் வசிக்கும் 13 வயதான தியாகராஜா பிரனிர்ஷா என்ற சிறுமியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இலங்கையில் பிரபல தனியார் சிங்கள தொலைக்காட்சி சேவையான சிரச தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட ‘வாய்ஸ் டீன்’ இசை நிகழ்ச்சி போட்டியிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

சுமார் 6 மாத காலமாக நடைபெற்ற இந்த போட்டியில், நூற்றுக்கணக்கான சிங்கள சிறுவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட ஒரே தமிழ் சிறுமி பிரனிர்ஷா.

 

தனது சாதனை பயணம் குறித்து, பிரனிர்ஷா பேசினார்.

”இந்த போட்டிக்கு முதல் முதலில் செல்லும் போது, எனக்கு வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவே இல்லை.

பங்குபெற வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருந்தது. வெற்றி பெற்றதன் பின்னர் மேடையில் இருக்கும் போதே, நான் அதிர்ச்சி அடைந்தேன்.

ஏனென்றால், இதுவொரு சிங்கள தொலைக்காட்சி. சிங்கள மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை.

எனினும், நிறைய சிங்கள மக்கள் வாக்களித்திருந்தார்கள். சிங்கள மக்கள் தமிழ் மக்கள் இரண்டு பேரும் இணைந்து தான் எனக்கு வாக்களித்திருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது” என கூறினார்.

சிங்கள இசை நிகழ்ச்சி மேடையில் ஏன் பாட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வந்தது?

இதுவொரு சர்வதேச போட்டி. இதில் அனைத்து மொழிகளிலும் பாட முடியும். பண்டாரவளை நகரிற்கும் ஆடிசனுக்கு வருகின்றார்கள் என கேள்விபட்டேன்.

சர்வதேச போட்டியொன்றில் பங்கு பெற வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அதுக்காகவே நான் போட்டியில் கலந்துக்கொண்டேன் என குறிப்பிட்டார்.

முதல் தடவையாக இந்த மேடையில் ஏறும் போது, உங்கள் மனதில் தோன்றியது என்ன?

முதல் தடவையாக நான் அந்த மேடையில் ஏறும் போது, வித்தியாசமான ஒரு சுற்று. நடுவர்கள் மறுபுறம் திரும்பியிருப்பார்கள்.

இந்த முறைமை எனக்கு ரொம்பவே பிடிக்கும். இதில் நான் தெரிவு செய்யப்படுவேன் என நினைக்கவில்லை. அதுலயும் போட்டியிட வேண்டும் என்ற கனவு மாத்திரமே இருந்தது. ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருந்தது.”

இந்த போட்டியில் திருப்பு முனையாக இருந்த சந்தர்ப்பம் எது என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

நான் மூன்றாவது சுற்றில் பாடிய பாடலே திருப்பு முனையாக இருந்தது. மூன்றாவது சுற்றில் நான் சிங்கள பாடல் ஒன்றை பாடினேன். ‘மகே ரட்டட தலதா” என்ற பாடலை பாடினேன்.

அந்த பாடலுக்கு நிறைய பேர் கமண்ட் பண்ணி இருந்தார்கள். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு தமிழ் சிறுமி, ஒரு சிங்கள பாடலை பாடும் போது, வித்தியாசமான உணர்வு இருந்தது என கூறினார்கள். இந்த பாடலே எனக்கு முழுமையான திருப்பு முனையாக அமைந்தது.
பிரனிர்ஷா

நீங்கள் சிங்கள மொழி அறிந்தா இந்த இசை மேடைக்கு வந்தீர்கள்?

ஆரம்பத்தில் எனக்கு சிங்கள வார்த்தைகள் மாத்திரமே தெரியும். அந்த வார்த்தைகளை எப்படி இணைத்து பேச வேண்டும் என எனக்கு தெரியாது.

இந்த போட்டிக்கு வந்ததன் பிறகு தான் நான் சிங்களம் பேச கற்றுக்கொண்டேன். இந்த போட்டி ஆரம்பிக்கப்பட்டு, 5 அல்லது 6 மாதம் இருக்கும். இந்த 5, 6 மாதங்களில் அங்குள்ளவர்களுடன் பேசும் போது, சிங்களம் கற்றுக்கொண்டேன் என கூறினார்.

பாடல்களில் வார்த்தைகளை பயன்படுத்தும் போது, அது உணர்வோடு வர வேண்டும். இந்த ஐந்து மாத காலப் பகுதியில் உச்சரிப்பு, உணர்வு அனைத்தையும் எப்படி பழகுனீர்கள்?

பாடல்களை பாடும் போது, பாடல்களிலுள்ள வசனங்களுக்கான அர்த்தம் எனக்கு தெரியாது.

அப்போது, பயிற்றுவிப்பாளர்களே எனக்கு சொல்லி கொடுத்தார்கள். இந்த பாடல் இந்த சந்தர்ப்பத்தில் பாடப்பட்டது.

இந்த பாடலுக்கான அர்த்தம் இது தான் என பயிற்றுவிப்பாளர்கள் கூறுவார்கள். ஒவ்வொன்றாக பயிற்றுவித்தார்கள்.

இந்த மேடையில் பெரும்பாலும் சிங்கள மக்களே இருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறான சவால்களை நீங்கள் எதிர்நோக்கியிருந்தீர்கள்?

எனக்கு நிறைய சந்தர்ப்பங்களில் சவால்கள் ஆரம்ப காலத்தில் இருந்தது. எனக்கு சிங்களம் பேச முடியாது. தொடர்பாடலை ஏற்படுத்த முடியாது.

பயிற்றுவிப்பாளர்கள் சொல்லி கொடுக்கும் சில விடயங்களை என்னால் புரிந்துக்கொள்ள முடியாது.

அங்குள்ளவர்கள் பேசுவதை என்னால் புரிந்துக்கொள்ள முடியாது. நிறைய கஷ்டங்கள் இருந்தது.

ஆனால், போக போக சிங்கள பாடல்கள் பாட சொல்லி, சிங்களம் பழகி, அதுக்கு பிறகு அவங்களோட வேலை செய்ய இலகுவாக இருந்தது.

உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

எனக்கு மருத்துவராக வேண்டும் என்பது லட்சியம். கட்டாயம் மருத்துவராகுவேன். சிறுவர்களுக்கான மருத்துவராக வேண்டும். அதோட சேர்த்து, இசையையும் தொடர வேண்டும் என்பது எனது ஆசை.

எந்த வயதில் உங்களின் இசை பயணம் ஆரம்பமானது?

நான் சின்ன வயதில் தேவாரம் பாடுவேன். பாடசாலை செல்வதற்கு முன்னரே நான் தேவாரம் பாடுவேன்.

அதை பார்த்து தான், பெற்றோர் என்னை வகுப்புக்களுக்கு சேர்க்க யோசித்தார்கள். வகுப்புக்களுக்கு சென்று படிபடியாக வந்தேன்.

இசையில் நான் இப்போது கர்நாட்டிக் படித்துக்கொண்டிருக்கின்றேன். அதை அப்படியே தொடர வேண்டும். இசையில் பெரிய பாடகியாக வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. மருத்துவரானாலும், இசையையும் தொடர்வேன். வாழ்க்கையில் நிறைய பாடல்களை பாட வேண்டும். நிறைய ஆல்பம் பாடல்களை பாட வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது.
பிரனிர்ஷா

இலங்கையை பொருத்த வரை இசைத்துறையில் தமிழர்களுக்கு சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

இலங்கை தமிழர்களுக்கான ஒரே களம் தென்னிந்திய களம். தென்னந்தியாவிற்கு செல்ல அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

எனக்கு தெரியவில்லை அப்படி நடக்குமா என்று. அப்படி நடந்தால், ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

தென்னிந்தியாவில் சந்தர்ப்பம் கிடைத்தால், செய்யலாமா? இல்லையா? என்பதை எதிர்காலத்தில் பார்க்க வேண்டும். அப்படி கிடைத்தால், ரொம்பவே சந்தோசம்.

‘சிங்களவர்களும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்’

சிரச தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட இசை போட்டியில் வெற்றியீட்டிய தியாகராஜா பிரனிர்ஷாவிற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்த வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

”தமிழ் இளைஞர் யுவதிகள் எப்படி சிங்கள மொழி மூலமான பாடல்களை பாடுவதோடு சிங்கள மொழியினை சரளமாக பேசுகிறார்களோ, அதேபோன்று சிங்கள இளைஞர் யுவதிகள் தமிழ் பாடல்களை பாடுவதன் மூலமாக மற்றும் தமிழ் மொழியினை பேசுவதன் மூலமாக இலங்கையர்களாகிய நாம் மத மொழி வேறுபாடுகளை மறந்து ஒரு உண்மையான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும் என நம்புகிறேன்.” என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், இலங்கையின் இசைத்துறை சார்ந்தோர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர், தியாகராஜா பிரனிர்ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version