•ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்குகிறது. •டிரோன் பயன்பாடு குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருகிறது.

மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களைக் கைப்பற்றியபோது, உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

இதற்கிடையே, ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட டிரோன்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்கி வருகிறது.

தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த வாரம் ஈரான் செல்கிறார். சிரியா விவகாரம் குறித்து ஈரான், துருக்கியுடன் நடைபெற உள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில் அதிபர் புதின் பங்கேற்க உள்ளார் என கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சுமத்திய நிலையில், அதிபர் புதினின் ஈரான் பயணம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version