இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதற்கான கடிதத்தை மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ஷ என தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால், இத்தகைய முறையில் ஒரு ஜனாதிபதி அனுப்பும் கடிதம் அரசியலமைப்பின்படி செல்லுமா, அதன் உண்மைத்தன்மையை எவ்வாறு சட்டபூர்வமாக சரிபார்ப்பது என சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த ஆலோசனை நடத்தி வருதவாக அவரது செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
முன்னதாக, தாய்நாட்டில் இருந்து மாலத்தீவுக்கு புதன்கிழமை அதிகாலையில் தமது மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் சென்ற கோட்டாபய, வியாழக்கிழமை நண்பகலில் அங்கிருந்து புறப்பட்டு சிங்கப்பூருக்கு உள்ளூர் நேரப்படி இரவு 7.15 மணியளவில் வந்தார்.
அவர் சிங்கப்பூரில் அடைக்கலம் கேட்பார் என்று அலுவல்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த நிலையில், கோட்டாபய தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூருக்கு வந்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார்.
அந்த வகையில் தற்போதைய அவரது பயணமும் அதே நோக்கத்துடனேயே இருக்கலாம் என்றும் அந்த அடிப்படையிலேயே அவர் நாட்டுக்குள் வருவதற்கு சிங்கப்பூர் அரசு அனுமதித்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், சிங்கப்பூரில் கோட்டாபய ராஜபக்ஷ எத்தனை நாட்கள் தங்கியிருப்பார், இங்கிருந்து வேறு நாட்டுக்கு செல்வாரா என்பதை கோட்டாபயவோ அவரது தரப்போ தெளிவுபடுத்தவில்லை.
இதற்கிடையே, இலங்கையில் கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் மின்னஞ்சல் வாயிலாக வந்த தகவலை சபாநாயகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.