கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலையடுத்து ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவு பாராளுமன்றத்தின் ஊடாக அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.

இதற்காக 4 பிரதான வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளமையை நேரடியாக அறிவித்துள்ள நிலையில் , மேலும் சிலரும் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க , எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் நேரடியாக தாம் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, சுயாதீன உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஆகியுார் போட்டியிட தயார் என அறிவித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது கட்சி வாக்களிக்கும் என்று அறிவித்துள்ளார்.

எனினும் அந்த கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ‘எமது கட்சி உறுப்பினர் என்ற ரீதியில் டலஸ் அழகப்பெருமவிற்கே வாக்களிக்க வேண்டும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பொதுஜன பெரமுனவிலுள்ள ரணில் எதிர்ப்பு தரப்பினரும், பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுபவர்களும் டளஸ் அழகப்பெருமவிற்கு வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவிற்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு தமது வேட்பாளருக்கு 62 வாக்குகளே கிடைக்கப் பெறும் என்று , ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றைய தினம் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்கள் எவ்வாறு வாக்குகளைப் பெற்றுக் கொள்வர் அல்லது அவர்களை ஆதரிக்கும் தரப்பினர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆனால் பொதுஜன பெரமுனவினர் ரணில் – டளஸ் என்ற இரு தரப்பினருக்கும் வாக்குகளை வழங்கினால், அந்த கட்சியின் வாக்குகள் சிதறடிக்கப்படும். அத்தோடு இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் ‘விருப்பு வாக்கு’ முறைமையும் பயன்படுத்தப்படும்.

அரசியல் நிபுணர்களும் , ஆர்வலர்களும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே , இடைக்கால ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்படுவார் என்று ஊகத்தினை வெளியிட்டுள்ள போதிலும் , வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அதனால் கிடைக்கப்பெறும் விருப்பு வாக்களிப்பதற்கான வாய்ப்பு என்பன அடுத்த ஜனாதிபதி யார் என்பதில் அனைவர் மத்தியிலும் பாரிய எதிர்பார்ப்பினையும் , ஐயப்பாட்டினையும் ஏற்படுத்தியுள்ளன.

‘நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறேன். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதிக்கம் மிக்க வாக்குகள் அதிகமுள்ளன என்பதை அறிவேன். இது ஒரு கடினமான போராட்டமாக இருந்தாலும் , உண்மை வெல்லும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.’ என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version