கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள ‘நோ-டீல் கம’ போராட்டக்களத்தை அகற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
மே 09 ஏற்பட்ட வன்முறையின் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதையடுத்து அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரி மாளிகைக்கு முன்னால் ‘நோ-டீல் கம’ போராட்டக்களத்தை அமைத்தனர்.
இதையடுத்து இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில், குறித்த பகுதியில் இருந்த போராட்டக்களத்தை அங்கிருந்து அகற்ற போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.