பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரா (வயது 26). இவர் பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

புதிகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா (28). இவர் பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார்.

ரேணுகா, பெலகாவி டவுனில் உள்ள பசவ நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ரேணுகாவுக்கும், ராமசந்திராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

அவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இளம்பெண் கொலை

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ராமசந்திராவுடன் பேசுவதையும், பழகுவதையும் ரேணுகா தவிர்த்து வந்தார்.

மேலும் ராமசந்திராவை காதலிக்கவில்லை என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமசந்திரா, ரேணுகாவை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி இரவு பசவ நகரில் ரேணுகா தங்கியிருந்த வீட்டுக்கு ராமசந்திரா சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் வீட்டில் கிடந்த கயிறை எடுத்து ரேணுகாவின் கழுத்தை ராமசந்திரா இறுக்கி உள்ளார். இதில் ரேணுகா மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலன் தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசந்திரா, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது பற்றி அறிந்ததும் ஏ.பி.எம்.சி. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் கொலையான ரேணுகா, தற்கொலை செய்துகொண்ட ராமசந்திரா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காதலித்து ஏமாற்றியதால் ரேணுகாவை கொன்றுவிட்டு ராமசந்திரா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஏ.பி.எம்.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Share.
Leave A Reply

Exit mobile version