ilakkiyainfo

ஆட்டம் ஆரம்பம்!

• சம்பவத்தின் பின்னணியில் மூன்று காரணிகள் இருக்கலாம். அரசியலமைப்பையும் சட்டத்தையும் கடுமையாக பின்பற்றுபவர் என்பதற்கு மற்றுமொரு உதாரணம்?

• பொருளாதார சிக்கலை சீர் செய்யும் இயலாமைக்கு காரணம் காண்பிப்பதற்காக இவ்வாறான போராட்டங்களை தொடர்ந்து பேணுவதற்கான ஒரு சதி?

•ராஜபக்சர்களை மீண்டும் அரசியல் களத்துக்கு கொண்டு வருவதற்கான அடித்தளத்தின் ஆரம்பம்?

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறும், ராஜபக்சர்களினால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து கொள்ளையிடப்பட்ட வெளிநாடுகளில் பேணப்படும் இலங்கையின் பொதுச் சொத்துக்களை மீட்டெடுக்குமாறும் வலியுறுத்தி, 100 நாட்களைக் கடந்து காலிமுகத்திடலின் ஜனாதிபதி செயலகத்தை அண்மித்து முன்னெடுக்கப்பட்டிருந்த “அரகல” எனும் போராட்டக் களத்துக்கு தடை விதிக்கும் வகையில், 20ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவானினால் காலி முகத்திடலில் காணப்படும் பண்டாரநாயக்க சிலையிலிருந்து 50 மீற்றர் சுற்று வட்டப் பகுதியில் எவ்விதமான போராட்டங்களும் இடம்பெறக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை ஹுனுபிட்டி விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், அரச சொத்துக்களில் பலவந்தமாக உட்பிரவேசித்தல் சட்ட விரோதமானது எனவும், அதனை அனுமதிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 22 ஆம் திகதி பி.ப. 2 மணியளவில் தாம் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுவதாக கோட்டை பொலிசாருக்கு இந்த அரகலவில் ஈடுபட்டவர்கள் எழுத்து மூலம் அறிவித்திருந்ததாகவும், அதன் முதற்கட்டமாக, நோ டீல் கம எனும் பெயரில் அலரி மாளிகைக்கு முகப்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

ரணில் பதவி விலக வேண்டும் எனவும், ரணில் ராஜபக்ச குடும்பத்தாரின் விடுவிப்பாளர் அல்லது ஒரு ஆதரவாளர் என இவர்கள் தெரிவித்ததுடன், தொடர்ந்தும் தமது அமைதிவழி போராட்டம் தொடரும் என இந்த அரகல ஆர்ப்பாட்டாக்காரர்களினால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஆனாலும், ரணில் விக்ரமசிங்க பதவியேற்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு அவருக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனும் குறிக்கோளுக்கமைய இவர்கள் தாம் கையகப்படுத்தி வைத்திருந்த ஜனாதிபதி செயலகம் அடங்கலான பொது பகுதியிலிருந்து வெளியேற சம்மதித்திருந்தனர்.

இவர்களுக்கு கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பகுதியில் அரகல போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என ரணில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் நேற்று நள்ளிரவு கடந்த வேளையில் அமைதியான முறையில் அரகல பகுதியில் பிரவேசித்த பாதுகாப்புத்தரப்பு, அங்கிருந்த ஆர்ப்பாட்டாக் காரர்களை கடுமையாக தாக்கியுள்ளதுடன், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சர்வதேச, உள்நாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக படைத்தரப்பினருக்கு முழு அதிகாரம் வழங்கப்படுவது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலும் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் மூன்று காரணிகள் அமைந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.

பொது மக்கள் மத்தியில் பெரிதும் அதிருப்திக்கு ஆளாகியுள்ள ராஜபக்ச குடும்பத்துக்கு ஏதேனும் வழியில் மக்கள் மத்தியில் ஒரு கருணை மனப்பாங்கை ஏற்படுத்தி, சிங்கப்பூரில் தற்போது தற்காலிக தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவது மற்றும் நாமல் ராஜபக்சவுக்கு தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு களத்தை மீண்டும் உருவாக்கிக் கொடுப்பது.

ஏனெனில் கோட்டாபயவுக்கு எதிராக இந்த போராட்டம் ஆரம்பமாகிய போது, இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை இவ்வாறு அகற்றுவதற்கு இராணுவத்தில் இருந்த அனுபவம் பொருந்திய கோட்டாபய நடவடிக்கை எடுக்கவில்லை.

தம்மை நோக்கி வர முற்பட்ட ஆர்ப்பாட்டாக்காரர்களை தடுக்கும் வகையிலான தாக்குதல்களை மேற்கொள்ள மாத்திரமே ஆணையிட்டிருந்தார்.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கலை சீர் செய்வதற்கு பெருமளவு காலம் செல்லலாம்.

மத்திய வங்கியின் ஆளுநரின் கருத்தின் பிரகாரம் ஐந்து மாதங்களில் பொருளாதார சரிவிலிருந்து மீளக்கூடியதாக இருக்கலாம் எனத் தெரிவித்த போதிலும், நிஜத்தில் அது நிறைவேறுவதற்கு சில வருடங்கள் வரை செல்லலாம்.

அத்துடன், அடுத்த மாதத்தில் இலங்கை மக்களுக்கு மேலும் சுமையூட்டும் விலை அதிகரிப்புகள் இடம்பெறவுள்ளன.

(மின்கட்டண அதிகரிப்பு, ரயில் கட்டண அதிகரிப்பு போன்றன). இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டு, பொது மக்கள் மத்தியில் ஒருவித அமைதியின்மையை தோற்றுவிப்பதனூடாக இந்த ஆர்ப்பாட்ட சூழலை தொடர்ந்தும் பேணி, அதனைக் காரணமாக முன்வைத்து, தம்மால் போதியளவு சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என புதிய ஜனாதிபதியால் தெரிவிக்க திட்டமிட்டிருக்கலாம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக அரசியலமைப்பை பின்பற்றுபவர். எனவே, அரசியலமைப்பை மீறும் வகையில் இந்த ஆர்ப்பாட்டாக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் அடங்கலாக பொதுப் பகுதியை கைப்பற்றி, நீதிமன்ற உத்தரவையும் மீறி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமைக்கு எதிராக இந்த நடவடிக்கையை கட்டவிழ்த்துவிட்டிருக்கலாம்.

அத்துடன் நாட்டில் அவசர கால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரு பொது இடத்தில் கூடுவதற்கு அனுமதியளிக்கப்படமாட்டாது. அதனை அடக்கும் அதிகாரம் படையினருக்கு உள்ளது.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இவ்வாறு மேற்கொண்டுள்ள தாக்குதல் காரணமாக பொது மக்களில் ஒரு பிரிவினர் மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது தாம் கொண்டுள்ள நம்பிக்கையில் தளர்வு ஏற்பட்டுள்ளதை சமூக ஊடகங்கள் வாயிலாக கண்டு கொள்ள முடிந்தது.

பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவ்வாறு மக்களின் அமைதிவழி போராட்டங்களை அதிகாரத்தைக் கொண்டு அடக்கியுள்ளமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

எரிவாயு விநியோகம் மீள ஆரம்பித்துள்ளது, கடந்த காலங்களில் சடுதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருளின் விலையிலும் சற்றுக் குறைப்பு ஏற்படுத்தப்பட்டது, ஒரு மாத காலத்துக்கும் மேலாக செயற்படாமலிருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீண்டும் செயலாற்ற ஆரம்பித்துள்ளன,

மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாடசாலை விடுமுறை முடிவடைந்து மீண்டும் திங்களன்று ஆரம்பமாகின்றது.

விவசாயிகளுக்கு உரம் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் மீண்டும் சற்று தமது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பிக்கையில் தற்போது இவ்வாறானதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த காலங்களைப் போலல்லாது, தற்போது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் ஆட்டம் வித்தியாசமானதாக இருக்கும்!

Exit mobile version