நாடாளுமன்றத்தில் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே ஒரு உறுப்பினர்,அதுவும் தேர்தலில் தோற்றதால்,தேசியப் பட்டியல்மூலம் உள்ளே வந்தவர்,நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
இது ஆசியாவின் அதிசயம் மட்டுமல்ல உலகத்தின் அதிசயமும்தான்.தாமரை மொட்டுக்குத் தலைமை தாங்கும் யானைக்கும், யானைக்குத் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கும் இடையிலான போட்டியில் யானை ஜெயித்திருக்கிறது.
எனவே அது எல்லா விதத்திலும் தாமரை மொட்டுக்குக் கிடைத்த வெற்றிதான்.ரகசிய வாக்கெடுப்பு என்பது திருடர்களுக்கு வசதியானது.”அரகலய”போராட்டக்காரர்கள் கூறுவதுபோல, திருடர்களே வெற்றியைத் தீர்மானித்திருக்கிறார்கள்.
ரணிலை முன்னிறுத்தியதன்மூலம் ராஜபக்சக்கள் தங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாதுகாத்துக் கொண்டு விட்டார்கள்.
இது முதலாவது வெற்றி.இரண்டாவது வெற்றி,போராட்டத்தைப் பிசுபிசுக்கச் செய்யலாம் என்பது.பதவியேற்ற அடுத்தநாளே ரணில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்.
எனினும் இது ஒரு முழுமையான முறியடிப்பு நடவடிக்கை அல்ல. ஒருவிதத்தில் குறியீட்டு வகைப்பட்ட எச்சரிக்கை எனலாம்.
ஜனாதிபதி செயலகத்தின் முன்பகுதியைக் கைப்பற்றி வைத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களே அகற்றப்பட்டிருக்கிறார்கள்.
அதேசமயம் கோட்டா கோகம கிராமத்தைச் சேந்த கூடாரங்கள் பெருமளவுக்கு அகற்றப்படவில்லை.
ஜனாதிபதி செயலகத்தை சில தினங்களில் கையளிக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபடும் தரப்புகள் சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தன என்றும்,நள்ளிரவுத் தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிகிறது.
இது கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தை ஒத்தது. தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமது பிரதான கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்டபின் அந்த வெற்றியின் உற்சாகத்தால் புதிய கோரிக்கைகளை முன்வைத்து ஒரு தரப்பு தொடர்ந்து போராட்டக் களத்தில் நின்றது.
மிஞ்சி நின்ற அந்தத் தரப்பை தமிழக அரசு பலத்தை பிரயோகித்து துரத்தியது.
எனினும் காலி முகத்திடல் போராட்டம் சற்று வித்தியாசமானது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி பெறவில்லை.
ரணிலை முன்னிறுத்தி ராஜபக்சக்கள் தப்பிவிட்டார்கள்.அதுமட்டுமல்ல போராட்டத்தின் இறுதி வெற்றியைத் தடுக்கும் ஒருவராக ரணில் ஜனாதிபதியாக மேலெழுந்து விட்டார்.
ராஜபக்சக்களை பிரதியீடு செய்யும் ரணிலை அகற்றுவதற்காக தொடர்ந்து போராடப் போவதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.
ஏற்கனவே தன்னுடைய வீடு எரிக்கப்பட்டதாலும்,தனக்கு மிகவும் விருப்பத்துக்குரிய வளர்ப்பு நாய் கொல்லப்பட்டதாலும்,ரணில் தனிப்பட்ட முறையில் மனமுடைந்து காணப்பட்டவர்.நள்ளிரவுத் தாக்குதலை ஊக்குவித்த காரணிகளில் அதுவும் ஒன்றா?
ஆனால் போராட்டங்களுக்கு மேற்கத்திய தூதரகங்களின் ஆசீர்வாதம் இருந்தது.
இப்பொழுதும் ரணில் விக்ரமசிங்கவின் முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு நாடுகள், கொழும்பில் உள்ள ஐநா தூதரகம் போன்றன கருத்துத் தெரிவித்துள்ளன.
ஆனால் முன்பு ராஜபக்சவுக்கு எதிராக பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளை இம்முறை பயன்படுத்தவில்லை.
இதுதான் அரசியல்.சீனாவுக்கு விசுவாசமான ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை போராட்டக்காரர்களைத் தடவித்தடவி உற்சாகமூட்டினார்கள்.
ராஜபக்சக்கள் அகற்றப்பட்டதன் விளைவாக மேற்கிற்கு விசுவாசமான ரணில் ஜனாதிபதியாகிவிட்டார்.
இப்பொழுது எந்தப் போராட்டங்களை மேற்கு ஆசீர்வதித்ததோ,அதே போராட்டங்களை அவர்களுடைய விசுவாசியை வைத்துக் கையாள வேண்டிய ஒரு நிலை.
போராட்டங்களின் இதயமாகக் காணப்பட்ட இடதுசாரி மரபில் வந்த ஜேவிபி, முன்னிலை சோசலிசக் கட்சி,அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்றவற்றை மேற்குநாடுகள் இந்தியா போன்றன எச்சரிக்கை உணர்வோடுதான் அணுகின.
இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த தரப்புகள் இலங்கைத்தீவின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதையோ அல்லது தீர்மானிக்கும் சக்திகளாக வருவதையோ மேற்குநாடுகளும் அனுமதிக்காது, இந்தியாவும் அனுமதிக்காது. எனவே ரணிலுக்கு எதிரான அரகலயவை ஏதோ ஒரு விதத்தில் முறியடிக்க வேண்டிய தேவை மேற்குக்கும் உண்டு.
அரகலயவை நீர்த்துப்போகச் செய்வதும் பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாகத் தணிப்பதும் ஒன்றுதான்.
ஏனென்றால் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாகத்தான் அரகலய தோற்றம் பெற்றது.
எனவே பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாக வேணும் வெற்றிகரமாகக் கையாண்டால்,நடுத்தர வர்க்கத்தின் கொதிப்பையும் கோபத்தையும் தணிக்கலாம்.
ரணில் பதில் ஜனாதிபதியாக வந்த கையோடு அந்த மாற்றத்தைக் காட்டவிளைந்தார்.
எரிவாயு கிடைக்க தொடங்கியது,எரிபொருள் வரத் தொடங்கியது,மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது.
ரணில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் ஐ.எம்.எஃப் வெளியிட்ட அறிக்கையும் மத்தியவங்கி ஆளுநர் தெரிவித்த கருத்துக்களும் அந்த வகையிலானவைதான்.
மத்தியவங்கியின் ஆளுநர் இப்பொழுது கூறுகிறார் 5 மாதங்களுக்குள் நிலைமை தேறிவிடும் என்று.
ஆனால் சில கிழமைமைகளுக்கு முன் ரணில் கூறினார்,பொருளாதாரத்தை நிமிர்ந்துவதற்கு குறைந்தது நான்கு ஆண்டுகள் தேவை என்று ஐ.எம்.எஃப் கூறியதாக. அதிலும் குறிப்பாக முதலாவது ஆண்டு மிக நெருக்கடியான ஆண்டாக அமையும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
ஆனால் இப்பொழுது மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகிறார் நாலைந்து மாதங்களில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று.
மொத்தத்தில் ரணிலைப் பலப்படுத்துவதற்காக மேற்குநாடுகளும் ஐ.எம்.எஃப்பும் இலங்கைத்தீவை நோக்கி உதவிகளைப் பாய்ச்சத் தொடங்கிவிட்டன.
பங்குச் சந்தையும் அண்மை நாட்களில் மாற்றத்தைக் காட்டுகிறது.ரணிலை பலப்படுத்துவதுதான் அவர்களுடைய ஒரே குறிக்கோள்.
ரணிலை பலப்படுத்துவதென்றால் பொருளாதாரத்தை தற்காலிகமாகவேனும் நிமிர்த்த வேண்டும்.
பொருளாதாரத்தை தற்காலிகமாக நிமிர்த்திவிட்டால் போராட்டத்திற்கான காரணங்கள் வலுவிழுந்துவிடும்.
எனினும்,போராடும் தரப்புக்களுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று ரணில் சிந்திப்பதாகத் தெரிகிறது.
இத்தாலிய அறிஞரான க்ரொம்சி கூறுவது போல…நாடாளுமன்றம்,ஜனநாயகம் என்றெல்லாம் வெளித் தோற்றத்துக்குக் காட்டப்படும்.
ஆனால் அரசுக்கு ஆபத்து என்று வரும்போது நாடாளுமன்றத்தின் பின் மறைந்து நிற்கும் ராங்கிகள் வெளியில் வரும்.
அதுதான் கடந்த வியாளன் நள்ளிரவு நடந்ததா?பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் ரணில் காயப்பட்ட படையினரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்ததும், ஜனாதிபதியாக வந்ததும் படைத்தரப்பைச் சந்தித்ததும் அதைத்தான் காட்டுகின்றன.
அதாவது ராஜபக்சக்கள் ரணிலை ஒரு முன்தடுப்பாக முன் நிறுத்தியதன்மூலம் தமது இரண்டாவது இலக்கையும் அதாவது அரகலயவைத் தோற்கடிப்பது என்ற விடயத்தில் வெற்றிபெறத் தொடங்கி விட்டார்களா?
ரணில் பதில் ஜனாதிபதி ஆகியதும் போராட்டக்காரர்கள் உஷார் அடைந்தார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பாசிச சக்திகள் உண்டு என்று அவர் கூறினார்.எனவே அரகலய தன்னை தற்காத்துக் கொள்ள முற்பட்டது.
ஏற்கனவே அவர்கள் கட்சித் தலைவர்களை சந்திக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள்.
ஜனாதிபதி தேர்தலையொட்டி கட்சிகளுடன் சந்திப்பை வேகப்படுத்தினார்கள்.அவர்கள் ஒரு புதிய கட்சியை உருவாக்கப் போவதாகவும் ஓர் அறிவிப்பு வந்தது.
ஆனால் அது போராட்டத்துக்குள் ஊடுருவிய சிலரின் பொய்யான அறிவிப்பு என்று போராடும் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ராஜபக்சக்கள் ரணிலை முன்னிறுத்தியதும் அரகலய முன்னெச்சரிக்கை உணர்வோடு தற்காப்பு நிலைக்குச் செல்லத்தொடங்கியது.
எந்த அரசியல் கட்சிகளை போராட்ட களத்தில் அனுமதிக்க மறுத்தார்களோ,அதே கட்சிகளை அவர்கள் சந்தித்தார்கள்.
எந்த மக்கள் பிரதிநிதிகளை அவர்கள் திருடர்கள் என்று விழித்தார்களோ அவர்களைச் சந்தித்தார்கள்.
எனினும் அரகலயவின் முன்னெச்சரிக்கையோடு கூடிய தற்காப்பு நடவடிக்கைகளை மீறி ரணில் தாக்குதலைத் கொடுத்திருக்கிறார்.
ராஜபக்சக்கள் செய்யத்துணியாத ஒன்றை அவர் செய்திருக்கிறார்.ஏனென்றால் ராஜபக்சக்களின் பலம் உள்நாட்டில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத உணர்வுதான்.
அவர்கள் எப்பொழுதும் உள்நாட்டில் பலமான தலைவர்கள்.
வெளியரங்கில் பலவீனமானவர்கள்.அதனால்,உள்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியதும் அவர்களுடைய சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத் தளம் ஆட்டங்காணத் தொடங்கியது.
வெளியரங்கில் மிகப் பலமானவர்.மேற்கு நாடுகள் மத்தியில் அவருக்கு கவர்ச்சி அதிகம். அந்தத் துணிச்சல் காரணமாகத்தான் அவர் அரகலயவின் மீது கை வைத்திருக்கிறார்.
ஆனால் இது ஒரு விஷப்பரீட்சை.ஏனெனில் அரகலியவின் பின்னணியில் இடதுசாரி மரபில் வந்த,ஏற்கனவே பலமான நிறுவனக் கட்டமைப்புகளை கொண்டுள்ள,அமைப்புகளும் கட்சிகளும் உண்டு.
ஏற்கனவே இருதடவை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு தோற்கடிக்கப்பட்ட அனுபவம் உண்டு.
பலமான தொழிற்சங்கங்கள் உண்டு.இவற்றின் தொகுக்கப்பட்ட விளைவாக ரணிலை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று பார்க்க வேண்டும்.
ரணில் இப்பொழுதும் உள்நாட்டில் பலவீனமான தலைவர்தான்.
பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாகத் தணிப்பதன்மூலம் அரகலியவை இல்லாமல் செய்யலாம் என்று ரணிலும் மேற்கு நாடுகளும் சிந்திக்கும்.
ஆனால் முறைமை மாற்றத்தை கேட்டு அரகலய புதிய வடிவம் எடுக்குமாக இருந்தால் அது நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிக்கும்.
இதைப் பொழிவாகச் சொன்னால், ரணில் அரகலயவை எப்படிக் கையாள போகிறார் என்பதுதான் நாட்டின் அடுத்தகட்ட அரசியலைத் தீர்மானிக்கப் போகின்றது.
அரகலயவின் விளைவாகத்தான் அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பே கிடைத்தது.இக்கட்டுரை எழுதப்படும் கணம் வரையிலும் அரகலயவவின் வெற்றிக் கனிகளை ரணில் தன்னுடைய சட்டப்பைக்குள் போட்டுக் கொண்டு விட்டார்.
நாடாளுமன்றத்தில் தாமரை மொட்டுக்கட்சி தொடர்ந்தும் பலமாகக் காணப்படுகிறது.
அதனால் மாற்றத்தைக் கேட்கும் மக்களுக்கு ஒரு தோற்ற மாற்றத்தைக் காட்டும் ஒரு உத்தியாக அரசியல் சங்கீதக் கதிரை விளையாட்டை அக்கட்சி கடந்த மூன்று மாதங்களாக விளையாடி வருகிறது.
இந்த சங்கீதக் கதிரையில் கடைசியாக அமர்த்தபட்டவர்தான் ரணில்.ஆனால் அதுதான் சங்கீதக் கதிரை விளையாட்டின் கடைசிக் கட்டம் என்று எடுத்துக் கொள்ள தேவையில்லை.
இலங்கைத் தீவில் கடந்த சுமார் இரண்டரை ஆண்டு காலப் பகுதிக்குள் ஒன்பது தடவைகள் அமைச்சரவை பகுதியளவோ அல்லது முழுமையாகவோ மாற்றப்பட்டிருக்கிறது.
ஐந்து நிதி அமைச்சர்கள் வந்துவிட்டார்கள்.மூன்று பிரதமர்கள் வந்துவிட்டார்கள்.ஒரு புதிய ஜனாதிபதியும் வந்துவிட்டார். இதுதான் கடைசி மாற்றமா இதற்குப் பின்னரும் மாற்றங்கள் இடம் பெறுமா என்பதனை ரணிலுக்கும் அரகலயவுக்கும் இடையிலான மோதல்தான் தீர்மானிக்கப் போகிறதா?