காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அகற்றுவதற்காக, கடந்த 22ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கூட்டு இராணுவ நடவடிக்கை பரவலான கண்டனங்களையும், அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனங்களையும் தோற்றுவித்திருக்கிறது.

மூன்று மாதங்களாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாசலில் போராட்டங்கள் இடம்பெற்று வந்தபோதும், – ஜூலை 9ஆம் திகதி தொடக்கம், அது போராட்டக்காரர்களின் வசம் இருந்து வந்த நிலையிலும், அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரச படையினரும், பொலிஸாரும், வியாழக்கிழமை நள்ளிரவு தொடக்கம் மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தினர்.

விமானப்படை, இராணுவம், கடற்படை, விசேட அதிரடிப்படை, மற்றும் கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவுகள் இணைந்து அந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அது ஜனாதிபதி செயலகத்தை விடுவிப்பதற்கான அல்லது மீளக் கைப்பற்றுவதற்கான ஒரு இராணுவ நடவடிக்கை தான். அந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரில் சிலர், தேசியக்கொடியை பிடித்தவாறு முன்நோக்கி நகர்ந்து சென்றனர்.

2009 இல் இறுதிக்கட்டப் போரின் இறுதி நாட்களில், தேசியக்கொடியை ஏந்திப் பிடித்தவாறு படையினர் முன்னேறிச் செல்லும் காட்சிகள், அப்போது அதிகளவில் ஊடகங்களுக்குப் பகிரப்பட்டது.

அதனை மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில், தான் ஜனாதிபதி செயலகத்தை மீளக் கைப்பற்றும் படை நடவடிக்கையிலும், தேசியக்கொடி பயன்படுத்தப்பட்டது.

முப்படைகளினதும் சிறப்புப் படைப் பிரிவுகளைக் கொண்டு அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னரே, இராணுவத் தளபதியாகப் நியமிக்கப்பட்ட லெப்.ஜெனரல் விக்கும் லியனகே, கிளிநொச்சிக்கு சென்று, இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவுகளை உள்ளடக்கிய முதலாவது கோர்ப்ஸ் படையினருடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்வது, கட்டுப்படுத்துவது குறித்து, முதலாவது கோர்ப்ஸில் இடம்பெற்றுள்ள படையினருக்கு விசேட பயிற்சிகளும் கிளிநொச்சியில் அளிக்கப்பட்டிருந்தன.

முன்னரே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை இராணுவ நடவடிக்கையாக அரசாங்கம் அடையாளப்படுத்தாவிடினும், அது முன்னெடுக்கப்பட்ட முறையும், களமிறக்கப்பட்ட படைகளும், தயார்படுத்தல்களும் அவ்வாறான தன்மைகளையே வெளிப்படுத்துகின்றன.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணித்தியாலங்கள் முடிவதற்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பதவியேற்றதும், பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று படைத் தளபதிகளுக்கு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அவர் அனுமதி அளித்திருந்தார்.

போராட்டக்காரர்கள், வெள்ளியன்று மதியத்துடன் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்த போதும், அதற்கு முன்னதாக அவசரமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

போர்நிறுத்தங்கள், பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் இராணுவ பலத்தை வெளிப்படுத்துவதற்காக அல்லது மேலாதிக்கத்தை காட்டுவதற்காக கடைசி நேரத் தாக்குதல்கள் இடம்பெறுவது வழக்கம்.

அதுபோலத் தான், போராட்டக்காரர்களுக்கு தனது கடும் போக்கையும், இன்னொரு முகத்தையும் காட்டுவதற்கு ரணில் விக்கிரமசிங்க விரும்பினார்.

அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறி விட்டால், அதற்கு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் தான்- அந்த நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடந்து கொண்டிருந்த போதே, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும்,  தூதுவர்களும்  ருவிட்டரில் தமது கண்டனங்கள், கவலைகளை பகிரத் தொடங்கி விட்டனர்.

ஐ.நா.பொதுச்செயலர் தொடங்கி முக்கியமான நாடுகள், அமைப்புகள் அனைத்தும், இந்த தாக்குதலை வேண்டப்படாத ஒன்றாக- இத்தகைய தருணத்தில் தவிர்த்திருக்க வேண்டிய ஒன்றாகவே அடையாளப்படுத்தி கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

சர்வதேச சமூகம் தன் மீது இப்படி ஒரேயடியாகப் பாயும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்திருக்கவில்லை.

நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கம் ஒன்றை புதிதாக பொறுப்பேற்கும் ஒருவர், முதலாவதாக முன்னெடுக்க வேண்டிய விடயமாக, முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயமாக, அதனை சர்வதேச சமூகம் கருதியிருக்கவில்லை.

சர்வதேச ஆதரவையும், உதவிகளையும் உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் முதல் நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்.

கிடைத்துள்ள உதவிகள் மற்றும் வசதிகளை நாட்டு மக்களுக்கு சமமாக பகிர்ந்து, நிலைமையை சுமுகப்படுத்துவதற்கு முயன்றிருக்க வேண்டும்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, போன்றவற்றை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

அதையெல்லாம் விட்டு விட்டு ரணில் விக்கிரமசிங்க தன் கையில் இருக்கும் வாள் (அதிகாரம்) கூர்மையானதா, மொட்டையானதா என்ற பரிசோதிக்கும் வேலையை தான் முதலில் முன்னெடுத்திருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தை மீளக் கைப்பற்றுவது மட்டுமே சட்டத்தின் ஆட்சியை நிலைப்படுத்துவதன் அடையாளம் அல்ல.

ஆனால் அவர் அதனைக் கைப்பற்றுவதன் மூலம்,  அதிகாரத்தின் உச்சத்துக்கே செல்லவும் தான் தயாராக இருப்பதான செய்தியை சொல்ல விழைந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவை, நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பார்க்கவில்லை. அவரை ராஜபக்ஷவினரின் இன்னொரு முகமாகத் தான் பார்த்தனர்.

ஆனால், அவர்களை விடவும் தான் மோசமானவர் என்பதை காட்ட ரணில் முயற்சித்தார். அவரது அந்த முயற்சி பெரும் சறுக்கலை சந்தித்திருக்கிறது.

இப்படிக் குழப்பமானதொரு நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உறுதிப்பாட்டை எதிர்பார்க்க முடியாது என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம், எச்சரித்திருக்கிறது. எல்லா நாடுகளுமே இப்போது, இலங்கைக்கு எதிராக திரும்பி நிற்கின்றன.

இலங்கையின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, அனுதாப பார்வை பார்த்த நாடுகள் கூட இப்போது, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டினால் தங்களின் முடிவை  தாமதப்படுத்துகின்றன.

உதாரணத்துக்கு இலங்கையின் அரசியல் குழப்பங்கள் தான் இந்தியா இந்தளவுக்கும் உதவிப் பொதிகளை அறிவிக்கத் தயங்குவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்தியாவிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், கடன் வசதிக் கோரிக்கைக்கு பதில் கிடைக்கவேயில்லை. ஆனால், இந்திய அரசின் பிரதிநிதிகள், இலங்கைக்க்கு உதவ தமது நாடு அர்ப்பணிப்புடன் உள்ளதாக கூறுகின்றனர்.

நடைமுறையில் இந்தியா புதிதாக எந்த உதவியையும் அறிவிக்கத் தயங்குகிறது. இதேநிலை தான் ஏனைய நாடுகள் விடயத்திலும் உள்ளது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களை சர்வதேசம் ஜனநாயக உரிமைகளாக பார்த்தது. ரணில் விக்கிரமசிங்க அதனை அடித்து நொருக்கியதை, நியாயப்படுத்தியிருக்கிறார்.

அரச கட்டடங்களுக்கு இடையூறு விளைவிக்கவும் மற்றும் அரச சொத்துக்களை பிற நோக்கங்களுக்காக இடையூறு விளைவிக்க போராட்டகாரர்களுக்கு அனுமதிக்க கூடாது என அமெரிக்காவின் சிவில் சுதந்திர சங்கத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இராஜதந்திரிகளிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார் ஜனாதிபதி ரணில்.

அமெரிக்காவின் சிவில் சுதந்திர சங்கம் என்பது ஒரு பழைமை வாய்ந்த சிவில் அமைப்பு.  அது அமெரிக்கா மாநிலங்களின் சிவில் உரிமைகள் சார்ந்து செயற்படும் ஒன்று.

அதன் வழிகாட்டலை ரணில் ஏன் காலிமுகத்திடலில் பிரயோகிக்க முயன்றார்? அதற்கும் இலங்கைக்கும் என்ன தொடர்பு?

அமெரிக்க, மேற்குலக இராஜதந்திரிகளின் வாயை அடைப்பதற்காகவே அவர் இந்த அமைப்பின் கருத்தை திணிக்க முயன்றிருக்கிறார்.

அரச கட்டடங்களை போராட்டக்காரர்கள் ஆக்கிரமிப்பதை எந்த நாட்டுச் சட்டமும் இடமளிக்காது. அதனை தடுக்க வேண்டியது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் பொறுப்பு.

ஜனாதிபதி செயலகம்,  பிரதமர் செயலகம் போன்றவற்றை போராட்டக் காரர்கள் கைப்பற்றும் போது, பிரதமராக இருந்த ரணில் அதனை ஏன் தடுக்காமல் தப்பியோடினார்?

இரண்டு வாரங்களுக்கு மேலாக ஜனாதிபதி செயலகம் போராட்டக்காரர்களின் கையில் இருந்த போது-  அது சட்டவிரோதம் என்பது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

கைப்பற்றிய மாளிகைகளுக்குள் பொதுமக்கள் நீச்சலடித்துக் குளித்தும், கட்டிலில் குதித்து குஸ்தி போட்டு விளையாடிய போதும், அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்குள்ள உடற்பயிற்சி கூடத்திற்குள்  படையினரும் பொலிஸாரும் கூட சென்று விளையாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தியது மட்டும் சட்டவிரோத செயல் இல்லையா?

கைப்பற்றிய ஜனாதிபதி செயலகத்தை கைவிட்டுப் போகிறோம் என்று அறிவித்த பின்னர், தாக்குதலை நடத்தியது ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமல்ல அரச படைகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

13 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுதங்களை மௌனிப்பதாக  விடுதலைப் புலிகள் அறிவித்த பின்னரும் போர் வலயத்தில் தாக்குதல்களை நடத்தியது, போரின் முடிவில் சரணடைந்தவர்களை காணாமல் ஆக்கியது போன்ற சம்பவங்கள் இன்றைக்கும் அரச படைகளின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கின்றன.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் பின்வாங்குவதாக அறிவித்த பின்னர், அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதும், 2009இல் அரச படைகள் நடந்து கொண்ட முறைமைக்கும் இடையில் வேறுபாடு ஏதும் இல்லை.

ராஜபக்ஷவினர் தங்களின் அதிகாரத்துக்காக படையினரைப் பொறியில் தள்ளியது போலத் தான், ஜனாதிபதி ரணிலும், தன் அதிகாரத்துக்காக படையினரை மீண்டும் பொறிக்குள் தள்ளியிருக்கிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version