சென்னை : காசு இருக்குன்னு சில மூஞ்சிங்க நடிக்க வர்றாங்க என இரவின் நிழல் சக்சஸ் மீட்டில் ராதா ரவி பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு பின்னர் பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இரவின் நிழல்’. வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமை இரவின் நிழல் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பார்த்திபனின் முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின் பாராட்டு

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரவின் நிழல் படத்தை பார்த்துவிட்டு, பார்த்திபனில் ஸ்டைலிலேயே பாராட்டி உள்ளார்.

எதிலும் தனிப்பாணி அதுதான் இரா.பார்த்திபன். ஒத்த செருப்பு படத்துக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்!

இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்!

நான் லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் எனக் காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள் என ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

வித்தியாசமான பெயர்

இதையடுத்து, இரவின் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராதாரவி, இரவின் நிழல் என்ற பெயரே ஒரு வித்தியாசமான பெயராக உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் தான் டெக்னிஷன்களை பாராட்டும் படமாக உள்ளது அதற்கு காரணம் பார்த்திபன்.

அந்த படத்தில் எந்த இடத்திலும் பார்த்திபன் தன்னை உயர்த்திக்கொள்ளவே இல்லை.
ஆனால் கடைசியில் ஹீரோயிஷத்தை வைத்து தான் இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார் என்றார்.

சர்ச்சை பேச்சு

தொடர்ந்து பேசிய ராதாரவி, பார்த்திபன் மூஞ்சிய 2 மணிநேரம் தொடர்ந்து பார்க்க முடியுமா? அதை பார்க்க வைத்தவன் பார்த்திபன்.

அதற்கு காரணம் திறமை,நடிப்பு,நடிப்பின் மீது இருக்கும் காதல். இப்போலாம் பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க நடிக்க வர்றாங்க.

நான் சாபம் விட்டாலே அப்படி ஆகிடுவாங்க போல. விளம்பரத்துல ஆடுறத பார்த்துவிட்டு இவன் நடிக்க வந்துருவான்னு சொன்னேன் ஒரு மேடைல.

அதே மாதிரியே வந்துட்டான்யா என பேசி உள்ளார். மேலும், ஒத்த செருப்பு மாதிரி ஒரு படத்தில் இவனை நடிக்கவைக்க வேண்டும் என்றார்.

லெஜண்ட் சரவணனுக்கு ஆதரவு

இதைப் பார்த்த ரசிகர்கள் பலர், ராதாரவி லெஜண்ட் சரவணனைப் பற்றிதான் இவ்வாறு பேசியுள்ளார் என கூறி வருகின்றனர்.

சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் தான் நடிக்க வர வேண்டுமா என்றும், ஒருவருடைய வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள ராதா ரவியால் முடியவில்லை என லெஜண்ட் சரவணனுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ராதாரவி பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

எல்லோரும் சிவாஜியாக முடியாது

இதற்கு முன் ஒரு மேடை நிகழ்ச்சியிலும், கோடம்பாக்கம் பாலம் கட்டும் முன் சின்ன ரயில்வே கேட் இருக்கும். அப்ப எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி சாவித்ரி என பலரது கார் நிற்கும். கதவு திறந்தவுடன் பார்த்து பார்த்து விடுவானுங்க. இப்ப பாலம் கட்டினவுடன் எல்லா கார்களும் சர்ரு சர்ருன்னு போகுது. எல்லோரும் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினியாகி விட முடியாது என லெஜண்ட் சரவணனை மறைமுகமாக கிண்டலடித்து பேசியிருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version