ilakkiyainfo

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற ஓகஸ்ட் 05 வரை அவகாசம்

காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அனுமதியின்றி தங்கியுள்ள அனைவரும் எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு முன் வெளியேற வேண்டுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய இன்றையதினம் (03) குறித்த பகுதிக்குச் சென்று கொழும்பு கோட்டை பொலிஸார் பின்வரும் அறிவிப்பை அவர்களுக்கு விடுத்ததாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள அனைத்து நபர்களுக்கும் இலங்கையை பொலிசார் விடுக்கின்ற அறிவிப்பு

நீங்கள் தங்கியுள்ள காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அரசாங்கத்திற்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் உரித்தான காணிகளில் மேற்கொண்டுள்ள அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் பயிர்ச் செய்கைகளை உடனடியாக அகற்றுமாறும்,

பொதுமக்களுக்கு உள்ள புலனாகாத உரிமைகளை பறிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் இதன் மூலம் அறியத் தரப்படுகின்றது.

இதனை நடைமுறைப்படுத்த 2022 ஓகஸ்ட் 05ஆம் திகதி பி.ப. 5.00 மணிக்கு முன்னர் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறியத் தருகின்றோம்.

நாட்டில் காணப்படுகின்ற சட்டத்திற்கு அமைவாகவும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத வகையிலும் செயற்பட வேண்டுமென்பதையும் இதன் மூலம் சுட்டிக்காட்டுகின்றோம்.

மேற்படி ஆலோசனைகளுக்கு அமைய செயற்படாத நபர்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென இதன் மூலம் அறியத் தருகின்றோம்.

நிலைய பொறுப்பதிகாரி
பொலிஸ் நிலையம்
கோட்டை


Exit mobile version