ilakkiyainfo

கோர்த்து விட்ட கோட்டா

“சீன கப்பலின் வருகையினால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்ற நம்பிக்கையை– வாக்குறுதியை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியா அதற்கெல்லாம் மசிந்து கொடுப்பதாகத் தெரியவில்லை”

 

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறும் போது, கூடவே பல பிரச்சினைகளையும் சேர்த்து வைத்து விட்டுப் போயிருக்கிறார்.

அவர் இங்கிருந்து தப்பிச் சென்ற போது, இந்தியாவையும், சீனாவையும் கோர்த்து விட்டு, பிராந்தியப் பதற்றத்தை உருவாக்கி விட்டுச் சென்ற விவகாரம், அண்மையில் தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளின் பாதையை கண்காணிக்கும், யுவான் வாங் 5 என்ற ஆய்வுக் கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்க வழங்கப்பட்ட அனுமதியை ஒட்டி, பிராந்திய பாதுகாப்பு, இராஜதந்திர நெருக்கடி ஒன்று உருவாகியிருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட அனுமதியைக் கொண்டே, இந்தக் கப்பல் வரும் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழையவிருக்கிறது.

வரும் 17ஆம் திகதி வரை இங்கு தரித்து நிற்கும் இந்தக் கப்பல், இந்தியப் பெருங்கடலின் வடமேற்கு பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்தக் கப்பலின் பயணம் தொடர்பாக தகவல் வெளியான போது, பாதுகாப்பு அமைச்சு அதனை நிராகரித்த போதும், பின்னர் அந்த தகவலை ஒப்புக்கொண்டது.

முன்னைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதியை கொண்டே சீனக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது என்பது மட்டும் தான், தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தப்பிக் கொள்வதற்காக இருக்கும் ஒரே வழி.

அந்த அனுமதியை இரத்துச் செய்தால், சீனா கோபமடையும். கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தின் காலத்தில் 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்ட போது, சீனா எவ்வாறான பிரதிபலிப்பை வெளிப்படுத்தியது என்பது ஜனாதிபதி ரணிலுக்கு நன்றாகவே தெரியும்.

அதனால், இந்தக் கப்பலின் வருகைக்கான அனுமதியை இரத்துச் செய்வது பற்றி யோசிக்க அரசாங்கம் தயாராக இல்லை. அதேவேளை, சீனாவைப் போன்றே இந்தக் கப்பல் வருகை விவகாரத்தை இந்தியா எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதும் அரசாங்கத்துக்கு தெரியாத ஒன்று அல்ல.

2014ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல் தரித்துச் செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எத்தகைய நெருக்கடியை ஏற்படுத்தியது என்பது யாவரும் அறிந்த ஒன்று.

‘ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்’ என்ற நிலையில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் சிக்கியிருக்கிறது.

இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாமல், சீனாவுடனும் முரண்படாமல் – இந்தப் பிரச்சினையை தீர்ப்பது ரணில் அரசாங்கத்துக்கு முக்கியமான சவாலாக மாறியிருக்கிறது.

ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் விட்டுப் போயிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளையே தீர்க்க முடியாமல் இருக்கின்ற போது, இதுவும் ஒரு புதுப்பிரச்சினையாக முளைத்திருக்கிறது.

அதுவும், இலங்கையினால் தட்டிக்கழிக்க முடியாத, இரண்டு நாடுகள் இங்கு கோர்த்து விடப்பட்டிருக்கின்றன.

இந்தியா குறுகிய காலத்தில் 3.5 பில்லியன் டொலர்கள் நிதியைக் கொடுத்து உதவிய நாடு. இன்னும், 1.5 பில்லியன் டொலர்கள் உதவிக் கோரிக்கையை பரிசீலித்து வருகின்ற நாடு.

சீனா தற்போதைய நெருக்கடியில் பேரளவு நிதியை வழங்காவிட்டாலும் மனிதாபிமான உதவிகளை வழங்குகின்ற நாடு. தற்போது, சீனாவிடம் விடுக்கப்பட்ட 4பில்லியன் டொலர்கள் உதவிக் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.

இந்த இரண்டு நாடுகளில் எதனைப் பகைத்துக் கொண்டாலும், அது இலங்கைக்கு பாதகம் என்பதை விட, ஆபத்து என்று கூறுவது தான் பொருத்தம்.

கம்பராமாயணத்தில் கடன்பட்டார் நெஞ்சத்தை இலங்கை வேந்தனின் கலக்கத்துக்கு உவமானமாக காட்டப்பட்டது.

ஆனால் உண்மையிலேயே கடன்பட்டதால், கலங்கும் நிலையில் இன்றைய இலங்கை ஆட்சியாளர்கள் கலங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சிக்கலை இராஜதந்திர வழியில் மாத்திரமே தீர்க்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.

அதாவது, சீன கப்பலின் வருகையையும் தடுக்காமல், அதனால் இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இந்த விவகாரத்தை அணுக முற்படுகிறது அரசாங்கம்.

கப்பலின் வருகையினால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்ற நம்பிக்கையை– வாக்குறுதியை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியா அதற்கெல்லாம் மசிந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

இந்தக் கப்பலின் வருகையை வழக்கத்துக்கு மாறான ஒன்று அல்ல என்றே இலங்கை அரசாங்கம் குறிப்பிடுகிறது.

இதுவரை 18 சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வந்து போயிருப்பதாகவும், அவற்றினால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்வை என்றும், நியாயம் கூறுகிறது இலங்கை.

ஆனால், பாதுகாப்பு விடயத்தில் சீனாவை நம்புவதற்கு இந்தியா தயாராக இல்லை என்பது தான், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் துரதிஷ்டம்.

சீனாவைப் பொறுத்தவரையில், இந்தியாவிடமோ, அமெரிக்காவிடமோ தனது அதிகாரம் தோற்றுப் போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.

அவ்வாறான நிலைப்பாட்டில் உள்ள சீனா, இந்த விவகாரத்தில் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்காது.

அதேவேளை இந்தியாவோ, இந்த விவகாரத்தில் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதினால், இலங்கைக்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்கவும் தயங்காது.

சீன ஆய்வுக் கப்பல் எதற்காக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லாத நிலையில், இந்தியா அதனை சந்தேகத்துடன் பார்ப்பது இயல்பு.

ஏனென்றால், ‘யுவான் வாங்’  கப்பல்கள், ஆகப் பிந்திய தலைமுறை நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதென பென்டகன் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தக் கப்பல் விண்வெளி மற்றும் செய்மதிகளை மட்டும் கண்காணிப்பதற்கானது அல்ல. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் பாதைகளையும் கண்டறியக் கூடிய திறன் பெற்றது.

தான் ஏவுகின்ற ஏவுகணைகளை கண்காணிப்பதற்காக சீனா இதனை இந்தியப் பெருங்கடலுக்கு அனுப்பியிருப்பதாக கொள்ள முடியாது.

ஏனென்றால், சீனா தனது ஏவுகணைப் பரிசோதனைகளை அதன் கிழக்கு கடற்பரப்பிலேயே மேற்கொள்கிறது.

அவ்வாறாயின் புதிதாக இந்தியப் பெருங்கடலை நோக்கி ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்ள சீனா முற்படுகிறதா?

அல்லது இந்தியா தனது கிழக்கு கடலோரப் பகுதியில் இருந்து – ஏவுகின்ற நவீன ஏவுகணைகளின் பயணப் பாதையைக் கண்டறியும் நோக்கில் இந்தக் கப்பலை சீனா அனுப்பி வைக்கிறதா?

அல்லது தாய்வான் விவகாரத்தில் தாக்குதலுக்குத் தயாராகி வரும் சீனா, அமெரிக்காவை எச்சரிக்க இந்தக் கப்பலை அனுப்பி வைக்கிறதா?

அல்லது இலங்கையின் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இந்த கப்பலை அனுப்பி வைக்கிறதா என பல கேள்விகள் இருக்கின்றன.

இதில் எந்தக் காரணம், உண்மையானதாக இருந்தாலும் அது இந்தியாவையோ, அமெரிக்காவையோ இலக்கு வைத்ததாகவே இருக்கும்.

எனவே, இந்தக் கப்பல் விவகாரம் பிராந்தியப் பதற்றத்தை மோசமடையச் செய்யுமே தவிர குறைக்காது. இந்த நிலையில், ரணில் அரசாங்கம், எந்த நகர்வை முன்னெடுத்தாலும், அது சிக்கல்களையே தோற்றுவிக்கும்.

-ஹரிகரன்

Exit mobile version