சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெக் நிறுவனம் இலங்கையின் சந்தையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காண்பித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெக் நிறுவனம் இதுவரை சுமார் 10,000 சர்வதேசக் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கியிருப்பதுடன் தற்போது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வந்தடைந்திருப்பதாக கடல்சார் விவகாரம் மற்றும் ‘ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்ட’ அபிவிருத்தி தொடர்பான சுயாதீன ஆய்வாளரான யசிறு ரணராஜா ‘ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்டம்’ என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் எழுதியிருக்கும் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி இலங்கையின் சந்தைக்குள் நுழைவதற்கும் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் எரிபொருள்சார் உற்பத்திப்பொருள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபடுவதற்கு சினோபெக் நிறுவனம் ஆர்வம் காண்பிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு வெளிநாட்டுக்கையிருப்புப் பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்து, அவற்றை மீள்விற்பனை செய்யும் நடவடிக்கையை இலங்கையில் முன்னெடுப்பதற்கு ஆர்வம் காண்பிக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குமாறு சக்திவலு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்குக் கடந்த ஜுன் மாதம் அமைச்சரவை அங்கீகாரமளித்திருந்த பின்னணியிலேயே இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version