கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது முன்னாள் அதிபர் ட்ரம்ப் வீட்டில் நடந்த அதிரடி ரெய்டுதான்! அமெரிக்க அரசியல் வரலாற்றில், இதற்கு முன்பாக அதிபர் பதவி வகித்த எவர் வீட்டிலும் இதுபோன்ற ரெய்டுகள் நடந்ததில்லை எனச் சொல்லப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி ட்ரம்ப்பின் வீட்டில் எஃப்.பி.ஐ நடத்திய சோதனைகள் தற்போது வரையிலுமே பேசுபொருளாக இருக்கின்றன.

நேற்றுகூட, “என்னிடமிருந்து பறிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை எஃப்.பி.ஐ திருப்பித் தந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார் டொனால்டு ட்ரம்ப்.

தினசரி அமெரிக்கச் செய்தி சேனல்களில் முக்கியச் செய்தியாக இருக்கும் ட்ரம்ப் விவகாரத்தில் நடப்பது என்ன?

ட்ரம்ப் – ஜோ பைடன்

சோதனையின் பின்னணி என்ன?

அமெரிக்காவின் மார்-ஏ-லாகோ பகுதியில் அமைந்திருக்கிறது டொனால்டு ட்ரம்ப்பின் பிரமாண்ட வீடு. அந்த வீட்டில், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு நேரத்தில், அதிரடியாக நுழைந்த எஃப்.பி.ஐ ஏஜென்ட்டுகள் சோதனை மேற்கொண்டதாகத் தெரிவித்தார் ட்ரம்ப். இதையடுத்து, அமெரிக்கா முழுவதும் இந்த விவகாரம் தீயெனப் பற்றிக்கொண்டது.

ட்ரம்ப், நாட்டின் அதிபராக இருந்தபோது அரசின் அதிகாரபூர்வ ஆவணங்களைக் கையாண்ட விதம் குறித்த விசாரணையுடன் தொடர்புடையதுதான் இந்த ரெய்டு என்று செய்திகள் வெளியாகின.

அமெரிக்க அரசியலமைப்புச் சட்டப்படி, நாட்டின் அதிபராக இருப்பவர்கள் தங்களது பதவிக் காலத்தில் கையாண்ட அனைத்து ஆவணங்களையும், தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், ட்ரம்ப் அதிபராக இருந்தபோது பல ஆவணங்களைக் கிழித்து எறிந்துவிட்டதாகவும், அதனை ஒட்ட வேண்டி இருந்ததாகவும் தேசிய ஆவணக் காப்பகம் குற்றம்சாட்டியது.

சில அதிகாரபூர்வ அறிக்கைகளை `போலிச் செய்தி’ என்று சொல்லி ட்ரம்ப் நிரகாரித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியது.

மேலும், அவரிடம் இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்க நீதித்துறையிடம் கேட்டுக் கொண்டது தேசிய ஆவணக் காப்பகம்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் ஒரு பகுதிதான் ட்ரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

பைடனுக்குத் தெரியாது?

ட்ரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைகள் குறித்து வெள்ளை மாளிகைக்கோ, அதிபர் ஜோ பைடனுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

நீதித்துறையின் நேரடி உத்தரவின் பேரில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

அதிபர் பைடனின் மகன் ஹன்டன் பைடன், வரி ஏய்ப்பு புகார் ஒன்றில் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறார்.

எனவே, தேர்தலுக்கு முன்பாகவே, `நான் நீதித்துறையின் விவகாரங்களில் தலையிடமாட்டேன்’ என்று வாக்குறுதி அளித்திருந்தார் பைடன்.

ஜோ பைடன்

ட்ரம்ப்பின் அறிக்கை!

இந்தச் சோதனைக்குப் பிறகு ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “அறிவிக்கப்படாத இந்தச் சோதனைகள் ஏற்புடையதல்ல.

விசாரணை தொடர்பாக அனைத்து அரசு அமைப்புகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்தும், முன்னறிவிப்பில்லாமல் வீட்டில் சோதனை நடத்துவது சரியல்ல.

ஏழை நாடுகள், வளரும் நாடுகளில் மட்டுமே இதுபோன்ற அரசியல் உள்நோக்கத்துடனான தாக்குதல்கள் நடைபெறும்.

ஆனால், இப்போது அமெரிக்காவும் அந்த நாடுகளில் ஒன்றாகிவிட்டது. இது மாதிரியான அதிகார துஷ்பிரயோகமும், மோசமான நடவடிக்கைகளும் இதற்கு முன்பாக அமெரிக்காவில் நடந்ததே இல்லை. நமது நாட்டின் இருண்ட காலம் இது” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடுவதைத் தடுக்கவே நீதித்துறையை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்!

 

அரசியல் உள்நோக்கம்?

அதிபர் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், ட்ரம்ப் வீட்டில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டிருப்பது பல்வேறு வியூகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.

அதுவும், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ட்ரம்ப் தயாராகி வரும் நிலையில், அவர் வீட்டில் நடத்தப்பட்டிருக்கும் இந்தச் சோதனைகள் அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

“ட்ரம்ப் பல தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அவரை விசாரணை அமைப்புகள் அணுகும் முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது. எனவே, இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கக்கூட வாய்ப்புகள் இருக்கின்றன” என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.

மேலும் சில வழக்குகள்!

அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபரான டொனால்டு ட்ரம்ப், வரிச் சலுகைகள் பெறுவதற்காகத் தனது சொத்து விவரங்களைத் தவறாகக் குறைத்துக் காட்டியிருப்பதாகப் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக ஆகஸ்ட் 11-ம் தேதி, நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் நடந்த விசாரணையில் ஆஜரானார் ட்ரம்ப்.

இந்த விசாரணைக்குப் பிறகு ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version