உலகக் கோப்பை டி20 ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி தரும் வகையில் ஆசிய கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்திருக்கிறது.
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி, ரிஷப் பண்ட்-க்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களத்தில் இறக்க முடிவு செய்தது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி ஒரு பந்து மீதம் இருக்கையில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரர் ரிஸ்வான் 43 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரரான கே. எல். ராகுல் இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
அதைத் தொடர்ந்து வந்த அடுத்தடுத்த ஓவர்களில் கோலி, ரோஹித் இருவரும் தங்கள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
அண்மையில் தனது உளவியல் சிக்கல் குறித்து வெளிப்படையாகப் பேசிய விராட் கோலி இந்த ஆட்டத்தில் மிகவும் நிதானமாக ஆடினார்.
8 ஆவது ஓவரின் கடைசி பந்தில் ரோஹித் சர்மா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலியும் ஆட்டமிழந்தார்.
இதனால் 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. எனினும் சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கணிசமாக ரன்களை எடுத்ததால் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.
3 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஹர்திக் பாண்ட்யா சிக்சர் அடித்து வெற்றிபெற உதவினார்.
17 பந்துகளில் 1 சிக்கல் 4 பவுண்டரிகள் உள்பட 33 ரன்களைக் குவித்ததுடன் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
கோலியின் 100வது டி20 போட்டி
இந்த ஆட்டம் கோலி ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான தருணமும் கூட. டி20 போட்டிகளில் தனது 100வது போட்டியை அவர் விளையாடியுள்ளார். இதன்மூலம் கிரிக்கெட்டின் அனைத்து வகை போட்டிகளிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
பாகிஸ்தான் பேட்டிங் எப்படி?
இந்திய அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்து மிகவும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசினர். புவனேஷ்வர் குமார் வீசிய மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தில் பாபர் ஆஸம் அவுட் ஆனார். பாபர் ஆஸம் 9 பந்துகளில் 10 ரன்களோடு வெளியேறினார்.
ஆறாவது ஓவரின் 5வது பந்தில், ஃபகார் ஜாமன் விக்கெட்டை ஆவேஷ் கான் வீழ்த்தினார். இதன் பிறகு பாகிஸ்தான் அணி நிதானமாக ரன்களைச் சேகரி்த்து வந்தது. எனினும் 12-ஆவது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் இஃப்திகர் அகமது 28 ரன்களுக்கு அவுட் ஆனார்.
தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான் 15-ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆவேஷ்கானின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் எடுத்த ரன்கள் 43. அதன் பிறகு வந்த வீரர்கள் குறைந்த ரன்களில் விக்கெட்டை இழந்தனர். எனினும் கடைசி நிலை ஆட்டக்காரரான ஷானவாஸ் தஹானி அதிரடியாக இரண்டு சிக்சர்களை அடித்து பாகிஸ்தானின் எண்ணிக்கை 147-ஆக உயருவதற்கு உதவினார்.
ஹாட்ரிக் சாம்பியன்ஷிப் எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்
இந்தியா கடைசி இரண்டு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. மூன்றாவது முறையாக இப்போதும் வென்று ஹாட்ரிக் அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
பாகிஸ்தான் விளையாடிய கடைசி ஐந்து டி20 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்றுள்ளது.
பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடிய 17 போட்டிகளில் 16 போட்டிகளில் வென்றுள்ளது. 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியபோது தோல்வியடைந்தது.

பட மூலாதாரம், Getty Images
டாஸ் வென்ற இந்திய அணி
இந்திய அணி டாஸ் வென்ற பிறகு, “டாஸ் அவ்வளவு முக்கியமானது என்று நான் நினைக்கவில்லை. சில ஆண்டுகளாக இங்கு விளையாடி வருவதால், எங்கள் முன்பாக ஒரு ஸ்கோரை வைத்துக்கொண்டு விளையாடுவது நல்ல தேர்வாக இருக்கும் என்று நினைத்தேன்.
துரதிர்ஷ்டவசமாக ரிஷப் பன்ட் வெளியேற வேண்டியிருந்தது. நாங்கள் கார்த்திக்கை களமிறக்குகிறோம்,” என்று ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
“நாங்கள் முதலில் பவுலிங் ஆட வேண்டுமென்று நினைத்தோம். ஆனால், அது எங்கள் கையில் இல்லை,” என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆஸம் தெரிவித்தார்.
கறுப்பு பேண்ட் அணிந்த பாகிஸ்தான் வீரர்கள்
பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் கையில் கறுப்பு பேண்ட் அணிந்துள்ளனர். தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களைக் குறிக்கும் விதமாக இதை அவர்கள் அணிந்துள்ளதாக இஎஸ்பிஎன் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் கடந்த 24 மணிநேரங்களில் 119 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் இவை மோதியிருக்கின்றன. கடந்த அக்டோபரில் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின்போது, பாகிஸ்தான், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
டி20 உலகத் தர வரிசையில் இந்தியா முதலிடத்திலும் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவும் பாகிஸ்தானும் 1984 முதல் இதுவரை 14 முறை ஆசிய கோப்பையில் மோதியுள்ளன. அதில் இந்தியா 8 முறையும் பாகிஸ்தான் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
1997ஆம் ஆண்டு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. அதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூன்றாவது முறையாக இரண்டு நாடுகளும் ஆசிய கோப்பையில் மோதியிருக்கின்றன.
விராட் கோலி, பாபர் ஆஸம் இருவரும் ஒருவரையொருவர் குறித்து நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இவர்கள் இருவருமே உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களாக கருதப்படுகின்றனர்.
சமீபகாலமாக விராட் கோலி தடுமாறிய நிலையில் அவருக்கு ஆதரவாக பாபர் ஆஸம் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோன்று, பாபர் ஆஸமும் சிறந்த பேட்ஸ்மேன் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் விராட் கோலி.