கனடா மார்க்கம் மாநகர முதல்வர் ஃபிராங்க் ஸ்கார்பிரிக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கனடா மார்க்கம் மாநகர சபையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இரண்டு மாநகர சபை முதல்வர்களும் தங்களுடைய மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.
இதன்போது, யாழ். மாநகர முதல்வர் இலங்கை அரசாங்கம் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை எங்களுடைய மக்கள் மிக நீண்ட காலமாக கோரி வருகின்றார்கள்.
அதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். எமக்கான நீண்டகால அரசியல் அபிலாசைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் ஒரு சமஸ்டி முறையிலான தீர்வினைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் நீங்கள் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்றார்.
அத்துடன், தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சனைகளான அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர்போராட்டங்கள், மற்றும் போரினால் பாதிக்கப்பட தமிழ்மக்களை தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் நலிவடையச்செய்துள்ளமை தொடர்பிலும், பெண் தலமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதா பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தெற்காசியாவின் சிறந்த பொதுநூலகம் எரியூட்டப்பட்டமை, யாழ்.மாநகர சபை கட்டடம் முற்றாக தகர்க்கப்படமை போன்ற விடயங்களைச் சுட்டிக்காட்டப்பட்டதோடு, நீண்ட போரினால் சிதைக்கப்பட்ட எங்களுடைய பிரதேசங்களைக் கட்டியெழுப்புதற்கு ஒத்துழைப்புக்களைச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் யாழ்.மாநகர சபையுடன் தங்களுடைய அனுபவ ரீதியான பகிர்வுகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பின் முடிவில் கனடா மார்க்கம் மாநகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறும் யாழ்.மாநகர முதல்வர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.