தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மம் நீடித்து வரும் நிலையில், மரண விசாரணை அறிக்கையைச் சட்டசபையில் கொண்டு வருவோம்.

என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதாவின் மரணம் மீண்டும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

எதிரி என்றாலும் எதிரே நிற்பது சிங்கமல்லவா என்று தனது அரசியல் எதிரிகளாலேயே போற்றப்பட்டவர் தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதா. இவர் அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து முதல்வராக இருந்த போதே மர்மமாக மரணித்தவர்.

அரசியல் எந்தளவு உச்சத்தில் இருந்தாரோ அதே அளவு சினிமாவிலும் உச்சத்தை தொட்ட கதாநாயகி . ஜெயலலிதா… தமிழ் சினிமாவின் பொற்காலங்களில் ஒன்றான அறுபதுகளில்தான் நடிகையாக தமிழ் சினிமாவின் உள்ளே நுழைந்தார். எம்.ஜி.யாரும், சிவாஜியும் முழுவீச்சில் வெற்றிப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.

1965-ஆம் ஆண்டு, இயக்குநர் ஸ்ரீதர் புதுமுகங்களை வைத்து ‘வெண்ணிற ஆடை’ என்ற படத்தை தொடங்கினார். அதில் நிர்மலா, மூர்த்தி ஆகியோர் அறிமுகமானார்கள்.

இன்னொரு நாயகி வேடத்திற்கு ஹேமமாலினி வரவழைக்கப்பட்டு ஸ்க்ரீன் டெஸ்ட்டில் நிராகரிக்கப்பட்டார்.

பின்னர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். ‘வெண்ணிற ஆடை’ வெற்றி பெற்றது.

நிர்மலாவும், மூர்த்தியும் ‘வெண்ணிற ஆடை’ என்ற பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டார்கள்.

ஆனால் ஜெயலலிதா அந்த அடைமொழியைப் பெறவில்லை. அதையெல்லாம் தாண்டி அவர் பலப்பல அடைமொழிகளைப் பெற்றார். ஜெயலலிதாவிற்கு சில வருடங்கள் முன் அறிமுகமாயிருந்த சரோஜா தேவி, கே.ஆர் விஜயா ஆகியோர் உச்சத்தில் இருந்தனர்.

ஜெயலலிதாவிற்குப் பின் அறிமுகமான லதா, மஞ்சுளா போன்றோரும் கடும் போட்டியை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இத்தனை பேரையும் மீறி ஜெயலலிதா தனக்கான வெற்றிகளைக் குவித்தார்.

திரைப்படங்களில் கோலோச்சிய ஜெயலலிதா 1982-இல் அரசியலில் தடம் பதித்தார். இதையடுத்து, 1983-இல் அவரை அ.தி.மு.க.-வின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்து அழகுபார்த்தார் எம்.ஜி.ஆர். 1984-இல் மாநிலங்களவைக்கு தேர்வானதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.

பின்னர், 1989 சட்டப் பேரவை தேர்தலில் போடிநாயக்கர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறை எம்.எல்.ஏ- ஆனார்.

அத்துடன், தமிழக சட்டப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார்.

இதையடுத்து, 1991-இல் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கவே, முதல்முறை முதலமைச்சராக பதவியேற்றார்.

முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொந்து குவித்ததாக கூறி, 1996 ஜூன் 14-இல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதுவே, அவரின் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் சறுக்கலையும், சிக்கலையும் ஏற்படுத்தியது.

இருப்பினும், தொடர்ந்து தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக விளங்கினார்.

2014 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 38-இல் வெற்றிபெற்று, பாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக செயல்பட்டது.

2016ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வெற்றிபெற்று, தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியமைத்து சாதனை படைத்தது. அத்துடன், 6-ஆவது முறை முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார் ஜெயலலிதா.

உடல் நலக்குறைவால் 2016 செப்டம்பர் 23-ஆம் திகதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், 74 நாட்கள் தொடர்ந்து உயர் சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5-ஆம் திகதி தனது 68-வது வயதில் ஜெயலலிதா மரணமடைந்தா் என அறிவிக்கப்பட்டது.

முதல்வராக இருந்த ஜெயலிதா எப்போது இறந்தார் . எதனால் இறந்தார்?, அவரை பார்ப்பதற்கான அனுமதி ஏன் யாருக்கும் வழங்கவில்லை போன்ற பல கேள்விகள் எழுந்தன. ஜெயலலிதாவின் உயிர் தோழி என கூறப்படும் சசிகலாவும் அவரது குடும்பமே இவரது மரணத்துக்கு காரணம் என்ற ஒரு கதையும் பரவியது.

அவரது மரணம் பல்வேறு மர்மங்களுடனையே இன்றும்உள்ளது. இது தொடர்பான பல வழக்குகள் தொடர்ப்பட்டுள்ள போதிலும் இதுவரை அந்த வழக்குகளின் தீர்ப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அவரது மரணத்தில் உள்ள மர்ம மூச்சுகளும் அவிழ்கப்பட வில்லை.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையை முடித்த ஆறுமுகசாமி ஆணையம், கடந்த வாரம் இதுதொடர்பான 600 விசாரணை அறிக்கையை, தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தது.

அதைத்தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி, “இதை வெளியிடலாமா என்று அரசாங்கம்தான் முடிவுசெய்ய வேண்டும்.

அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது” எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை வெளியிடுவது குறித்து கோவையில் பேசியிருக்கிறார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது, “சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என உங்களை ஏமாற்ற மாட்டோம். தேர்தல் அறிக்கையில் கூறியவையில், 70% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

மீதமுள்ள 30% விரைவில் நிறைவேற்றுவோம். தேர்தலுக்கு முன்பு, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பயணத்தை நான் நடத்தினேன்.

அப்போது பெறப்பட்ட மனுக்களில் 70% தீர்வு காணப்பட்டுள்ளன. 234 சட்டமன்ற உறுப்பினர்களும், அவர்களின் பிரச்சினைகளை முதல்வர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்.

அதற்கு தீர்வு காணப்படும் என உறுதிமொழி அளித்துள்ளோம். எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இதுதான் திமுக. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக அவர்கள் கட்சியினரே கூறினர்.

அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து ஆவியோடு பேசுகிறேன் என்று அமர்ந்து தியானம் செய்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரே கூறினார்.

இதனால் அப்போது ஒப்புக்காக ஒரு விசாரணை கமிஷனை அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அந்த கமிஷனும் அப்போது ஒப்புக்காகவே செயல்பட்டு வந்தது. ‘திமுக ஆட்சிக்கு வந்தால் அந்த கமிஷனை முறையாக நடத்துவோம்.’ என்று வாக்குறுதி கொடுத்திருந்தோம்.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி அந்த அறிக்கையை அரசுக்கு சமர்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதைத் தற்போது சொல்ல மாட்டோம்.

அந்த பிரச்னையை சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைத்து, சட்டமன்றத்தின் மூலமாகவே முறையான நடவடிக்கையை எடுப்போம் என்று நான் உறுதியளிக்கிறேன். . நான் கலைஞரின் மகன். சொன்னதை செய்வேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொருத்திருந்து பார்ப்போம், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை அவிழ்குமா என்று.

-குமார் சுகுணா-

Share.
Leave A Reply

Exit mobile version