இலங்கையில் சீனாவின் பிரசண்ணம் அதிகம் பேசப்படும் ஒன்று. சர்வதேசளவில் இலங்கையின் நெருக்கடிகள் சீன-சிறிலங்கா உறவின் வழியாகவே நோக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணமாகவும் சீனாவே நோக்கப்படுகின்றது.

அண்மையில் அமெரிக்க வெளியக உளவுத் துறையான சி.ஜ.ஏயின் தலைவர் கூட, ஒரு கலந்துரையாடலின் போது, சீனாவுடன் தூரநோக்கின்றி பொருளாதார தொடர்புகளை பேணிக் கொள்ளும் நாடுகள் இலங்கையிலிருந்து கற்றுகொள்ள வேண்டுமென்று கூறியிருந்தார்.

இலங்கை தூரநோக்கின்றி சீனாவின் திட்டங்களை அனுமதித்ததன் விளைவாகவே, இன்று பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சி.ஜ.ஏயின் தலைவர் இவ்வாறு கூறுவதிலிருந்து எந்தளவிற்கு, சீன விவகாரம் மேற்குலகால் நோக்கப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

சீனாவிற்கும் சிறிலங்காவிற்குமான இருதரப்பு உறவு 1957களிலிருந்து நீடிக்கின்றது.

ஆனாலும் நாடுகளுக்கிடையிலான சாதாரண உறவாகவே அது இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போதுதான், சீன-இலங்கை உறவில் சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டன.

இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி யுத்தத்தின் போது, ஆயுதளபாட உதவிகளை செய்வதற்கு மறுத்திருந்த நிலையில்தான், சீனா அந்த இடத்தை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டது.

இந்த பின்னணியில் நோக்கினால், மகிந்த ராஜபக்ச காலம்தான் சீனாவிற்கும் சிறிலங்காவிற்குமான தேனிலவுக் காலமாக இருந்தது. 1978இலிருந்து இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளில் முதன்மையான இடத்தை ஜப்பானே பெற்றிருந்தது. மகிந்த காலத்தில் ஜப்பானின் இடத்தை சீனா எடுத்துக் கொண்டது.

இலங்கையில் சீனாவின் பிரசண்ணம் முதல் பார்வையில் இந்தியாவிற்கே சிக்கலானது.

ஏனெனில் இலங்கை ஒரு உடனடி அயல்நாடு. இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றிற்குள், சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பது நீண்டகால நோக்கில் இந்தியாவிற்கு சிக்கலானதாகும்.

அடுத்தது அமெரிக்காவின் நோக்கிலும் சீனாவின் பிரசண்ணம் சிக்கலானது.

ஆனால் அமெரிக்காவின் அவதானம் உலகளாவியது. சீனாவின் செல்வாக்கு இந்து சமூத்திர பிராந்தியத்தில் அதிகரித்துச் செல்லுதல் என்னும் நோக்கில்தான் இந்த விடயத்தை அமெரிக்கா நோக்கும்.

இந்த பின்னணியில்தான், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர், மைக் பொம்பியோ, இலங்கையின் இறைமையை சீனா, கடலிலும் நிலத்திலும் மோசமாக மீறிவருவதாக குற்றம்; சாட்டிருந்தார்.

சீனாவின் பிரசண்ணம் சிக்கலானது என்னுமடிப்படையில்தான் இவ்வாறானதொரு கடுமையான அறிக்கையை பொம்பியோ வெளியிட்டிருந்தார்.

பொம்பியோவின் கூற்றுக்கள், சீனாவின் பிடிக்குள் அகப்பட்டிருக்கும் ஒரு நாடாக இலங்கையை நோக்குவதற்கான பார்வையை முன்வைத்தது.

இன்று இலங்கை தொடர்பில் வெளிவரும் உலகளாவிய அவதானம் இந்த பின்புலத்தில்தான் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால் சீனா இவ்வாறான கடுமையான குற்றச்சாட்டுக்களால் பின்வாங்கும் நிலையிலில்லை.

கிடைத்த சந்தர்பத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது.

தெற்கில் வலுவாக காலூன்றிருக்கும் சீனா, தற்போது தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் காலூன்றுவதற்கான வாய்ப்புக்களை தேடுவது போல் தெரிகின்றது.

சீனத் தூதுவர், வடக்கு கிழக்கிற்கு விஜயங்களை மேற்கொள்வதில் அதிக ஆர்வத்தை காண்பிக்கின்றார்.

இவ்வாறானதொரு ஆர்வத்தை முன்னர் சீனா ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை.

வடக்கிற்கு விஜயத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்களில் தூதுவர் ஈடுபடுகின்றார். அதே போன்றுதான் கிழக்கிலும்.

சமூக நலத்திட்டங்களுக்கு நிதியளிப்பதில் ஆர்வம் காண்பிக்கின்றார். இதன் மூலம் முழு இலங்கையிலும் தங்களின் பிரசண்ணத்தை வைத்திருக்க வேண்டுமென்று சீனா விரும்புவது போல் தெரிகின்றது.

கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் நலிவுற்றவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான சிறியளவிலான உதவிகளை சீனா செய்திருக்கின்றது. அதே போன்று விவசாய திட்டமொன்றையும் பரீசிலிக்கவுள்ளது.

சீனாவிற்கும் தமிழர்களுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகளுண்டு. இந்த தொடர்புகளை ஆராயும் முயற்சியிலும் சீனா முன்னர் ஈடுபட்டிருந்தது.

இந்த நிலையில்தான் அண்மைக்காலமாக தமிழ் பகுதிகளுடானான தொர்புகளை அதிகரிக்க முயற்சிக்கின்றது.

இதுவும் இந்தியாவிற்கு சிக்கலான ஒன்றுதான். ஏனெனில் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், எவர் ஆதரவளித்தாலும், அதனை பெற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருக்கின்றனர்.

இந்த நிலைமையானது மறுபுறமாக, தமிழர்களுடனான சீனாவின் ஊடாட்டங்களை அதிகரிப்பதற்கு மிகவும் சாதகமானது.

குறிப்பாக கிழக்கிலங்கையிலுள்ள மாவட்டங்களில் வாழும் வறுமைநிலையிலுள்ள தமிழ் மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிளை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிழக்கிலங்கை தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பின்தங்கியிருப்பதாகவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதான பார்வையொன்றும் கிழக்கிலங்கையின் படித்த தமிழர்கள் மத்தியிலுண்டு.

இந்த பின்புலத்தில்தான் சீனத் தூதரகத்தை நாடும் போக்கு உருவாகியது. வடக்கு கிழக்கில் வாழும் பின்தங்கிய மக்கள் தொடர்பில் சீனத் தூதரகம் பிரத்தியேக மதிப்பீடுகளையும் செய்திருக்கலாம்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் மட்டுமே, உணர்வு ரீதியாக பிணைந்திருக்கின்றனர்.

இதற்கு தமிழ் நாடு ஒரு பிரதான காரணமாகும். இரண்டாவது காரணம் இந்து மதமாகும்.

வடக்கு கிழக்கு இந்து தமிழர்களை பெரும்பாண்மையாக கொண்டிருக்கும் ஒரு தமிழ் பகுதி.

இவ்வாறானதொரு ச10ழலில்தான் பொருளாதார தேவைகளை ஒரு விடயமாகக் கொண்டு, சீனா அதன் நகர்வுகளை மேற்கொள்கின்றது.

நிலைமை சீனாவிற்கு சாதகமாகவே இருக்கின்றது. சீனா கொஞ்சம் கொஞ்சமாக முன்னெடுக்கும் திட்டங்கள் காலப் போக்கில், தமிழ் பகுதிகளில் சீன ஆதரவு பிரிவுகளை ஏற்படுத்தினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் முஸ்லிம்கள் ஒரு அரசியல் பிரிவாக வளர்ச்சியுற்றிருக்கின்றனர்.

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு நெருக்கமானதொரு மக்கள் பிரிவாக ஒரு போதுமே இருக்கப் போவதில்லை.

இந்த பின்புலத்தில் கிழக்கு மாகாணத்தில் இந்தியாவிற்கு நெருக்கமான மக்கள் கூட்டமென்றால், அது இந்து தமிழ் மக்கள் மட்டும்தான்.

அந்த மக்கள் மத்தியிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தால் அது இந்தியாவிற்கு நல்லதல்ல.

இந்தியா பல்வேறு உதவிகளை செய்திருக்கின்றது. ஆனால் சமூகத்தோடு ஊடாடக் கூடிய திட்டங்களில் இந்திய தூதரகம் அதிகம் நாட்டம் கொள்வதில்லை.

இனியும் அப்படி இருக்க முடியுமா? சர்வதேச அரசுசாரா நிறுவனங்கள் உள்ளுர் நிறுவனங்களின் திட்டங்களுக்கு நிதியளித்தாலும் கூட, அவைகள் எந்தளவிற்கு சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதில் கேள்விகளுண்டு. நிபுனத்தும் வாய்ந்த உள்ளுர் நிறுவனங்கள் மூலம் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதிலும் சந்தேகங்கள் உண்டு.

சீனா ஒவ்வொரு அடியையும் அவசரப்படாமல் எடுத்துவைப்பதாகவே தெரிகின்றது. அதே வேளை சீனாவின் நகர்வுகள் நீண்டகால நோக்கம் கொண்டது.

இந்தியாவின் ஆர்வங்களை நன்கு கணித்தே சீனா ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றது.

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் மீது இந்தியா செல்வாக்குச் செலுத்த முடியும் ஆனால் கிழக்கு அப்படியல்ல.

ஏனெனில் கிழக்கிலங்கை தமிழ் மக்கள், தாங்கள் பல்வேறு விடயங்களில் பின்தங்கியிருப்பதாக கருதுகின்றனர்.

வடக்கிற்கு இருப்பது போன்று புலம்பெயர் ஆதரவு கிழக்கிலங்கை தமிழர்களுக்கில்லை. இந்த இடைவெளி சீனாவிற்கு மிகவும் சாதகமானது.

சீனா என்ன நோக்கில் இலங்கையை பயன்படுத்த விளைகின்றது என்னும் கேள்விகளுடன்தான் அனைத்தும் தொடர்புபட்டிருக்கின்றது.

தன்னை நோக்கி மேற்கொள்ளப்படும் மேற்குலக நகர்வுகளை எதிர்கொள்ளுவதற்கான ஒரு தடுப்பரனாக இலங்கையை பயன்படுத்த முயற்சிக்கின்றதா? இந்தியாவுடன் எல்லைப்புறங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதற்கான ஒரு துப்புச் சீட்டாக இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றதா?

இவைகள் ஊகங்கள் மட்டுமே ஏனெனில் புவிசார் அரசியல் மோதல்கள் தொடர்பில் துல்லியமான கணிப்புக்களை எவருமே செய்ய முடியாது.

சில அவதானங்களை மட்டுமே முன்வைக்கலாம். புவிசார் அரசியல் போட்டிகளில் எதுவும் நடக்கலாம்.

ஆனால் சீனா அண்மைக்காலமாக, தமிழ் பகுதிகள் மீது ஆர்வம் காண்பித்துவருகின்றது என்பது மட்டும் உண்மை.

உதவித் திட்டங்கள் மூலம், சீனா தமிழ் மக்களுடன் நெருங்க முயற்சிக்கின்றது – நெருங்கும் என்பதும் உண்மை.

 

Share.
Leave A Reply

Exit mobile version