முட்டை கடைக்குள் சென்று முட்டையை ​கொள்வனவு செய்வதற்காக காத்திருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 30, ஆயிரம் ரூபாவை களவெடுத்துச் சென்ற மற்றுமொரு பெண் தொடர்பிலான தகவல்களை தந்து உதவுமாறு, பொதுமக்களிடம் ஹட்டன் பொலிஸார் உதவிக் கோரியுள்ளனர்.

ஹட்டன் நகரில் ஞாயிறு சந்தை வீதியிலுள்ள முட்டைக்கடைக்கு, முட்டைகளை வாங்குவதற்காக கடந்த 4ஆம் திகதியன்று சென்றிருந்த ஹட்டன் பிரதேசத்தைச் ​சேர்ந்த பெண்ணின் பின்பாக, முட்டைகளை வாங்கும் வகையில் நின்றுக்கொண்டிருந்த மற்றுமொரு பெண்ணே, முன்னால் நின்றிருந்த பெண்ணின் கைப்பையில் இருந்த பணத்தை ​களவாடி செல்லும் காட்சிகள். அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராக்களில் பதிவாகியுள்ளன.

பணத்துக்குச் சொந்தமான பெண், ஹட்டனில் உள்ள தனியார் வங்கியொன்றில் 35 ஆயிரம் ரூபாயை மீளப்பெற்றுக்கொண்டு முதலில் சதொச கிளைக்குச் சென்றுள்ளார்.

அங்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்துக்கொண்டு, முட்டைக்கடைக்கு வந்துள்ளார்.

அதன்போதே கைப்பையில் இருந்த பணத்தை மற்றுமொரு பெண் களவெடுத்துள்ளார்.

பணத்துக்குச் சொந்தகாரரான அந்தப் பெண், வீட்டுக்குச் சென்று செலவு கணக்குகளைப் பார்த்துவிட்டு மீகுதியை தனது பணப்பையில் தேடியபோதே, பணம் காணாமல் போனமை தெரியவந்தது.

அதுதொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து, முட்டைக்கடைக்குச் சென்ற பொலிஸார், அங்கு பாதுகாப்பு கமெராக்களின் தொகுதியை சோதித்துப் பார்த்தபோது, பணத்தை மற்றுமொரு பெண் களவெடுக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

பணத்தை களவெடுத்த அந்தப் பெண் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால், தங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version