திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய சிறுவனை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் குறித்த சிறுவனை முன்னிலைப்படுத்திய போதே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுவன் கிண்ணியா – மாஞ்சோலைசேனை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

14 வயதுடைய தனது மகளை காணவில்லை என தந்தை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் இதனையடுத்து கிண்ணியா பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி மாணிக்க ராசா நளினி உட்பட அவரது குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் குறித்த சிறுமி சட்ட வைத்திய நிபுணர் அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரான சிறுவனை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version