யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 11 வாள்களுடன் 22 வயதான இளைஞன் ஒருவனை பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துணைவி பகுதியில் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

துணைவி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பல விதமான வடிவங்களில் செய்யப்பட்ட வாள்கள் காணப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனை அடுத்து அங்கு விரைந்த அதிரடி படையினர் ஆலயத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தினார்கள்.

அதன் போது அங்கிருந்து பல வடிவங்களில் செய்யப்பட்ட 11 வாள்களை மீட்டனர். அத்துடன் 22 வயதான இளைஞனையும் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட வாள்களையும் , கைது செய்யப்பட்ட இளைஞனையும் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த இளைஞனின் தந்தை குறித்த கோயிலின் பூசகர்கள் எனவும், வாள்களுடன் கலையடி, குறி சொல்பவர் எனவும், அதற்காக பயன்படுத்தும் வாள்களே அவை என இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version