கோவையில் 2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஆண் கை; குப்பையில் கிடந்ததால் பரபரப்பு
கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து கையை மீட்டு துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை துடியலூர் அடுத்துள்ள வெள்ளக்கிணர் பிரிவு வி.கே.எல் நகர் பகுதியில் இன்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்துள்னர்.
இதையும் படியுங்கள்: சரியான நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவேன் – சசிகலா பேட்டி
அப்போது பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இரண்டு துண்டுகளான ஆணின் கை கிடந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாத், பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து இரண்டு துண்டுகளாகக் கிடந்த அந்தக் கையை ஆய்வு செய்த போது, அது 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை என தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் உடலின் மற்ற பாகங்கள் அருகில் ஏதேனும் வீசப்பட்டுள்ளனவா என அருகிலுள்ள குப்பைத்தொட்டிகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் தேடி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.