தந்தை கொடுத்த கடனை திரும்ப பெற கடன் வாங்கியவர் வீட்டு முன்பாக தாயின் பிணத்தை வைத்து பணம் வசூலித்த மகள்கள்
கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு பகுதியை சேர்ந்தவர் குலையப்பா. குசேனம்மாவின் மகள்கள் 3 பேரும் நேற்று காலை பெரிய குலையப்பா வீட்டிற்கு சென்று தந்தை கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு வற்புறுத்தினர்.
திருப்பதி: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ஜம்மலமடுகு பகுதியை சேர்ந்தவர் குலையப்பா.
இவரது மனைவி குசேனம்மா (வயது 60). தம்பதிக்கு தஸ்தகீரம்மா, காதரம்மா, சின்ன தஸ்தகீரம்மா என 3 மகள்கள் உள்ளனர்.
குலையப்பா தனது உறவினரான பெரிய குலைப்பாவுக்கு ரூ.50 லட்சம் கடன் கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு குலையப்பா உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார்.
கணவர் இறந்த பிறகு குசேனம்மா, பெரிய குலையப்பாவிடம் தனது கணவர் கொடுத்த ரூ.50 லட்சத்தை திரும்ப கேட்டு வந்தார்.
அவரும் பணத்தை தருவதாக நாட்களை கடத்தி வந்தார். இந்த நிலையில் குசேனம்மா நேற்று காலை இறந்து விட்டார்.
இதையடுத்து குசேனம்மாவின் மகள்கள் 3 பேரும் நேற்று காலை பெரிய குலையப்பா வீட்டிற்கு சென்று தந்தை கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு வற்புறுத்தினர்.
அதற்கு கடன் கொடுத்த உங்களுடைய தந்தை வந்தால் மட்டுமே பணத்தை திருப்பி தர முடியும் என பதிலளித்தார்.
அப்போது பெரிய குலையாப்பாவிடம் பணத்தை எப்படி பெறுவது என 3 பேரும் யோசனை செய்தனர்.
அதில் தனது தாயின் பிணத்தை பெரிய குலையப்பா வீட்டின் முன்பாக வைத்து போராட்டம் நடத்தினால் பணத்தை வாங்கி விடலாம் என முடிவு செய்தனர்.
இதையடுத்து தனது தாயின் பிணத்தை எடுத்துச் சென்று பெரிய குலையப்பா வீட்டு வாசலில் வைத்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெரிய குலையப்பா குடும்பத்தினர் பிணத்தை எடுத்துச் செல்லுமாறு கூறினர்.
வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்தால் தான் பிணத்தை எடுத்துச் செல்வோம் என பிடிவாதமாக இருந்தனர்.
இதனை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் கூடினர். இதையடுத்து ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி தற்சமயம் வாங்கிய கடனில் பாதியை இப்போது தருவதாகவும், மீதியை பின்னர் தருவதாகவும் ஒப்புக்கொண்டனர்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட மகள்கள் தாயின் பிணத்தை எடுத்துச் சென்றனர்.
தந்தை கொடுத்த பணத்தை பெற மகள்கள் நூதன முறையில் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பதையும் ஏற்படுத்தி உள்ளது.