தெற்காசியாவின் உயரமான கட்டடமாகவும் உலகில் உள்ள உயரமான கட்டடங்களுள் 19ஆவது இடத்தையும் பிடித்துள்ள கொழும்பு தாமரைக் கோபுரத்தை கண்டும் பயனடையும் வாய்ப்பு பொதுமக்களுக்கு இன்று (15) தொடக்கம் கிடைக்கவுள்ளது.
வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், வார இறுதி நாட்களில் மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரையும் தாமரை கோபுரம் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.
இதனைப் பார்வையிட 500 ரூபாய், 2000 ரூபாய் கட்டணங்களுக்கான அனுமதிச் சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் .
2,000 ரூபாய் டிக்கெட் பெறுபவர்கள் வரிசையில் நிற்காமல் வளாகத்திற்குள் நுழையலாம் மற்றும் கோபுரத்தில் உள்ள உணவகங்கள், கடைகள் போன்றவற்றில் தேவைப்படும் வரை தங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் 500 டிக்கெட் பெறுபவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் குழுவாகவே அழைத்துச் செல்லப்படுவர்.
மேலும் இதனைப் பார்வையிட வரும் வெளிநாட்டவர்கள் 20 அமெரிக்க டொலர்களை செலுத்தி அனுமதிச் சீட்டைப் பெறும் அதேவேளை, இன்னும் ஓரிரண்டு மாதங்களில் கி.ஆர் முறையும் அனுமதிச் சீட்டுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு 200 ரூபாய் அனுமதிச்சீட்டு வழங்கப்படும் என்பதுடன், அவர்கள் வருகைத் தரும் முன்னர், முன்கூட்டியே அதிபர் ஊடாக அறிவித்தால் அவர்களுக்கான பிரத்தியேக நேரம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வார நாட்களில் இரவு 8 மணி தொடக்கம் 11 மணி வரையும் வார இறுதி நாட்களில் இரவு 7 மணி தொடக்கம் 11 மணிவரையும் இதன் மின் விளக்குகள் ஒளிரவிடப்படும்.
356 அடி மீற்றர் உயரமான தாமரைக் கோபுரத்தை அமைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதும் 2012ஆம் ஆண்டே இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
2017ஆம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் இடைநடுவில் நிறுத்தபட்டாலும் 2019ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதன் கட்டுமாணப் பணிகள் நிறைவடைவதற்கு முன்னரே இதனைத் திறந்து வைத்தார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் பராமரிக்கப்பட்ட தாமரைக் கோபுரம் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அரசாங்கத்தின் தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது என, கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவர்ஆர்.எம்.பி ரத்னபிரிய தெரிவித்தார்.
தற்போது இதன் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து, அதனை பொதுமக்கள் பார்வையிடும் வாய்ப்பு இன்று (15) முதல் கிடைப்பதாக கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவட் லிமிட்டட்டின் தலைவர் ஆர்.எம்.பி ரத்னாயக்க தெரிவித்தார்.
12ஆம் திகதி தாமரைக் கோபுரத்தின் கேட்போர் கூடத்தில் அதன் பணிகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.3 கட்டங்களாக இதன் பணிகளை ஆரம்பிக்கின்றோம். அதில் முதலாவது கட்டமாகவே 15ஆம் திகதி பொதுமக்கள் பார்வைக்காக திறக்கின்றோம். இதன்போது food festival, musical show, சித்திர கண்காட்சி என்பவற்றை பார்வையிடலாம்.
அதேப்போல் 3ம் கட்டமாக 9டி சினிமா வசதிகள், சுழலும் சிற்றுண்டிச்சாலை , ஸ்கை டைவிங், பங்கி ஜம்பிங், சாகச விளையாட்டுகள் என்வற்றை அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் அனுபவிக்கலாம்.
இதற்கமைய தாமரைக் கோபுரம் மார்ச் மாதம் பூரணத்துவம் பெறும் என்றார்.
வெளிநாட்டு கடன் திட்டத்தின் கீழ், லோட்டஸ் டவர் பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பணிகளின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கணக்காளர் நாயகத்தால் கணக்காய்வு செய்யப்படுவதுடன் இதன் முழுமையான உரிமம் தற்போது இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவுக்கே உள்ளது.
அத்துடன், இது பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறும் நிறுவனமாகவும் செயற்படவுள்ளது.
இதன் மின்னுயர்த்தி ஆனது கோபுரத்தின் 29ஆவது மாடி வரை பயணிக்க முடியும்.
இதில் முதலீடு செய்ய பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதில் உள்ள சிறப்பு அம்சம் சுழலும் சிற்றுண்டிச்சாலையாகும்.
ஒவ்வொரு பார்வையாளர்களும் கோபுரத்தின் 29வது தளத்தில் உள்ள கண்காணிப்பு இடத்தில் 30 நிமிடங்கள் தங்கும் வாய்ப்பு உள்ளது.
அடுத்த சில மாதங்களில் பயணச்சீட்டுக்குப் பதிலாக QR குறியீட்டை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் சுமார் 150 பேர் தங்கக்கூடிய காட்சிப் பகுதிக்குள் நுழைந்ததும், பார்வையாளர்களுக்கு கீழே உள்ள கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளையும் மற்ற தொலைதூரப் பகுதிகளையும் பைனாகுலர் மூலம் பார்க்கும் வாய்ப்பு உள்ளது.
தாமரை கோபுர நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டத்தில், சிவனொளிபாதமலை, சிகிரியா, நக்கிள்ஸ் மலைத்தொடர் போன்ற இடங்களைக் காண கண்காணிப்புப் பகுதியில் இருந்து தொலைநோக்கிகள் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கே, பார்வையாளர்கள் 27 வது மாடியில் சுழலும் உணவகம், 26 வது மாடியில் 500 இருக்கைகள் கொண்ட விருந்து மண்டபம், தரை தளத்தில் பிரபலமான உணவகங்கள் மற்றும் நினைவு பரிசு கடைகள் ஆகியவற்றை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த வளாகத்தில் இசைக் கச்சேரிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் போன்றவற்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் பல சாகச விளையாட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.