யுக்ரேனில் ஆக்கிரமித்த இடங்களை ரஷ்யாவோடு இணைக்கும் நிகழ்வு ரஷ்யாவில் நடந்து வருகிறது.

யுக்ரேனின் கிழக்கிலுள்ள லுஹான்ஸ்க், டோனியெட்ஸ்க் மற்றும் தெற்கிலுள்ள ஸப்போரீஷியா, கெர்சோனில் மக்கள் கருத்தறிதல் என கூறப்படும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு பின்பு இது வருகிறது.

இந்த வாக்கெடுப்பை கேலிக்கூத்து என்று யுக்ரேனும், சட்டவிரோதமானது என்று மேற்குலக நாடுகளும், சட்ட வல்லுநர்களும் நிராகரித்துள்ளன.

இந்த நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்தந்த பகுதி மக்களே, ரஷ்யாவோடு தங்களை இணைத்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இந்த நிலத்தை பெற்றுகொள்ள பல தலைமுறைகளாக ரஷ்யர்கள் போராடியிருப்பதாக புதின் குறிப்பிட்டார்.

ரஷ்ய ஆக்கிரமிப்பு இடங்கள்

இந்த மோதல்களில் கொல்லப்பட்ட வீரமிக்க சிப்பாய்களை நினைவுகூரும் விதமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த அனைவரையும் புத்தின் கேட்டுக்கொண்டார். நமது நிலத்திற்காக போராடி அவர்கள் இறந்ததாக அவர் தெரிவித்தார்.

டோன்பாஸ் பிராந்தியத்திலுள்ளவர்கள் ரஷ்யாவின் குடிமக்களாக என்னென்றும் இருப்பர் என்று யுக்ரேன் மற்றும் மேற்குலக நாடுகளில் உள்ள அனைவரும் கேட்க வேண்டுமென்று விரும்புவதாக அதிபர் புதின் பேசினார்.

 

மக்களின் இந்த தெரிவை யுக்ரேனிய அதிகாரிகள் மிகுந்த மரியாதையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆவணங்களில் கையெழுத்திடும் ரஷ்ய அதிபர் புதின்

தங்கள் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கும் வகையில் இயன்ற எல்லாவற்றையும் பயன்படுத்தி நிலத்தை ரஷ்யா பாதுகாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நகரங்கள் மற்றும் கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிகளையும், சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி மேம்பாட்டையும் ரஷ்யா மீண்டும் கட்டியெழுப்பும் என்று அவர் தெரிவித்தார்.

யுக்ரேனின் இந்த நான்கு பகுதிகளும் ரஷ்யாவோடு இப்போது இணைக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளை மீட்க யுக்ரேன் மேற்கொள்ளும் முயற்சிகள், ரஷ்ய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நேரடி தாக்குதலாக கருதப்படும்.

இதனால், யுக்ரேன் மீதான போர் மேலும் சிக்கலாக மாறும் என்று எதிா்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version