இலவசமாகப் பயணம் செய்ய முடியாது என்று ஒரு மூதாட்டி கூறும் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அதை அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவே திட்டமிட்டுச் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“எதிர்க்கட்சிகள் அவியலா செய்யும்?” என அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. “திட்டமிட்டே செய்திருந்தாலும் தவறில்லை” என்று கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கி வரும் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த திட்டம் தொடர்பாக பேசுகையில், `பெண்கள் பேருந்துகளில் ஓசியாக பயணிக்க முடிகிறது` என்று கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது.

இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டம் மதுக்கரையில் துளசியம்மாள் என்கிற மூதாட்டி பேருந்தில் பயணித்தபோது நடத்துனரிடம் ஓசியில் பயணிக்க முடியாது எனக்கூறி பயணச்சீட்டிற்கு பணம் செலுத்தும் காணொளி இணையத்தில் வைரலானது. அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கு எதிர்வினையாக இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது.

இந்த காணொளியை ட்விட்டரில் பகிர்ந்திருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, `இதுதான் “தமிழ் மாடல்”! சுயமரியாதை சுயமரியாதை என்று நொடிக்கு நூறு முறை கூச்சலிடும் “திராவிட மாடல்” அரசுக்கு சுயமரியாதை என்றால் என்ன என்று பாடம் புகட்டும் மூதாட்டி.` என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் மூதாட்டி பேசியதாக பரவும் காணொளி அதிமுகவினர் ஏற்பாடு செய்து எடுத்தது என திமுகவினர் குற்றம்சாட்டத் தொடங்கினர்.

திமுகவின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கோவை அதிமுக ஐ.டி. விங்கை சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்சனை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார்!” என்று பதிவிட்டிருந்தார்.


இதற்கு எதிர்வினையாற்றியுள்ள அதிமுகவின் பிரித்திவிராஜ், “ஆமாம் நான் தான். எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்.???” என்று பதிவிட்டுள்ளார்.
Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebook
வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

 

இந்த நிலையில் பேருந்தில் வீடியோ பதிவு செய்த மூதாட்டி மற்றும் அதிமுக பிரமுகர்கள் மீது கோவை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

ஆனால் காவல்துறையினர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மதுக்கரை காவல்நிலைய ஆய்வாளர் வைரம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இந்த செய்தி தவறானது. இந்த விவகாரம் தொடர்பாக புகார் மட்டும் தான் கொடுத்துள்ளனர். ஆனால் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை” என்றார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனும் இந்த செய்தியை மறுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுக்கரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன்.

அப்படி எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த போலி செய்தி மூலம் பரபரப்பு ஏற்படுத்தப்படுவது தொடர்பாக விசாரித்து வருகிறோம்` என்றார்.
எஸ்.பி.

இது தொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் சத்யன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “அமைச்சர் பொன்முடி பேசிய தவறான கருத்து மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. பல ஊடகங்களும் மக்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்டனர்.

அதில் பேசிய பலரும் இப்படி அவமானப்படுத்தி செயல்படுத்தும் திட்டம் வேண்டாம் எனப் பேசியிருந்தனர்.

அந்த ஊடகங்கள் மீது, அதில் பேசியவர்கள் மீதும் புகார் கொடுப்பார்களா?” என்று கேட்டார்.

“அதிமுக ஐடி விங்கே அதை செய்திருந்தாலும் அதில் என்ன தவறு உள்ளது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது.

நாளை வேறு யாராவது அரசாங்கம் வழங்கிய 4,000 ரூபாயை திருப்பி தருவதாக கூறினால் அவர்கள் மீதும் புகார் கொடுத்து வழக்குப் பதிவீர்களா.

இதற்கெல்லாம் வழக்கு பதிவு செய்யவே முடியாது. அதை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரே தெளிவுபடுத்திவிட்டார்.

திமுகவினர் சட்டம் தெரியாமல் எதிர்க் கருத்து தெரிவிப்பவர்களை மிரட்டி வருகின்றனர்.” என்றார்.

இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், “அமைச்சர் பொன்முடி வட்டார வழக்கில் பேசிய கருத்தை திரித்து எதிர்க்கட்சிகள் தவறான கருத்தை பரப்பி வருகின்றனர்.

அமைச்சரும் அது தொடர்பாக விளக்கம் தந்திருக்கிறார். இலவசங்களை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் அவரவர் உரிமை.

ஆனால் இந்த சம்பவத்தில் அதிமுகவினர் துளசியம்மாள் என்கிற மூதாட்டியை வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றியுள்ளனர்.

அதை அவர்களே ஒத்துக் கொண்டுள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் இடையூறு செய்துள்ளனர்.

தவறான சித்தரிக்கப்பட்ட ஒரு கருத்துக்கு வேண்டுமென்றே அரசு திட்டத்தைப் பற்றி அவதூறு பரப்ப வேண்டும் என அதிமுகவினர் இந்த செயலை செய்துள்ளனர்.

மூதாட்டி எந்தப் புகாரும் இல்லை. அதிமுகவினர் மீது தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version