நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக தான் ஏன் தண்டிக்கப்படக் கூடாது என்ற காரணத்தை விளக்குவதற்காக எதிர்வரும் 13ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு, நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (05) அழைப்பாணை பிறப்பித்தது.

நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான இலங்கை நீதிச் சேவை சங்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்தது.

இதேவேளை, சட்டத்தரணி பிரியலால் சிறிசேன மற்றும் பொலன்னறுவை சட்டத்தரணிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி விஜித குமார ஆகியோரால் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலும், ஒக்டோபர் 13ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு, அவருக்கு கடந்த 29ஆம் திகதி அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவதற்கு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட எம்.பியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில்,  பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய சனத் நிஷாந்த, இலங்கையின் நீதித்துறை தொடர்பாக, குறிப்பாக நீதித்துறை அதிகாரிகள் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 105(3) சரத்தின் பிரகாரம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக சனத் நிஷாந்த எம்.பியை தண்டிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

20222ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்தில் போராட்டக்காரர்களைத் தாக்கியமைக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சனத் நிஷாந்த சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version