முல்லைத்தீவில் மீனவர்கள் இரு தரப்பாக போராட்டம்!அமைதியின்மை மை அடுத்து இரண்டு தரப்புக்கும் மீதும் பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை 03 ஆம் திகதி காலை முற்றுகையிட்ட மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்திருந்தனர்.
இவர்களது போராட்டம் இன்று (05) மூன்றாவது நாளாக தொடர்ந்து இடம்பெறுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்றனர். கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு செல்லும் மீனவர்களான தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ளதாகவும் இவ்வாறான அதிகாரிகள் எமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி போராடி வருகின்றனர்
கடந்த 3ஆம் திகதியன்று காலை கடல் தொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காத போதிலும் பின்னர் அனுமதித்தனர் . தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தேசிய கடற்றொழில் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் தமக்கான தீர்வுகள் வரும் வரையில் குறித்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என அறிவித்த மீனவர்கள் கடற்தொழில் நீரில்வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தில் மீனவர்கள் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 24 சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்
இந்நிலையில் குறித்த மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை வைத்த கொக்கிளாய் சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகைதந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் மற்றும் மாத்தளன் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் முஸ்லிம் மீனவர்கள் என சுமார் 300 பேர் முல்லைத்தீவு பேருந்து நிலையம் அருகே காலை பதினொரு மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என கோரி போராட்டத்தை ஆரம்பித்தனர்
இந்நிலையில் குறித்த மீனவர்கள் மற்றும் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் இடையே முரண்பாடுகள் ஏற்படலாம் என்ற நிலையில் பொலிஸார் போராட்டக்காரர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நோக்கி செல்லாத வகையில் முல்லைத்தீவு இலங்கை வங்கிக்கு முன்பாக ஒரு வீதித்தடையும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி வரமுடியாத வகையில் மற்றுமொரு வீதித் தடையையும் ஏற்ப்படுத்தியிருந்தனர் .
இந்நிலையில், அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என கோரிய போராட்டக்காரர்கள் இலங்கை வங்கி முன்பாக பொலிஸார் அமைத்திருந்த வீதித்தடையை உடைத்து கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நோக்கி செல்ல முற்ப்பட்டபோது போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.
இதனையடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற மீனவர்கள் வீதித்தடையை உடைத்து செல்ல முற்பட்ட போது அவர்கள் மீதும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர் இதன்போது பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்கள் காரணமாக அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.
இதன் பின்னர் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலக வாயிலில் அமைக்கப்பட்ட கொட்டகையில் போராடி வரும் அதேவேளை அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என்று கேட்டு போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மாவட்ட செயலக முன்றலில் போராடி வருகின்றனர்.