பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன்-6 அக்டோபர் 9ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

‘விக்ரம்’ திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

அக். 9 மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைக்கவுள்ளார் கமல்ஹாசன்.

பின்னர், வழக்கம்போல் பிக் பாஸ் இல்லத்தை பார்வையாளர்களுக்கு சுற்றி காண்பிப்பார்.

பிக்பாஸ் சீசன் 6 தொடங்குவதற்கு முன்பே, போட்டியாளர்கள் குறித்த யூகங்கள் இணைய உலகில் வெளிவரத் தொடங்கிவிட்டன.

நிச்சயமாக இவர்கள்தான் என சிலரின் பெயர்களை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள நிலையில், ஊகமாகவும் சிலரது பெயர்கள் வெளியாகி வருகின்றன.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ‘டிடி’ என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, சின்னத்திரை நடிகை ரக்ஷிதா, ‘மைனா’ நந்தினி, ‘குக் வித் கோமாளி’ மூலம் புகழ்பெற்ற ரோஷினி, ரக்ஷன், தர்ஷன், பாடகி ராஜலட்சுமி உள்ளிட்ட பலரின் பெயர்களும் இந்த பட்டியலில் இருப்பதாக யூகங்கள் வெளியாகி வந்தாலும், யார் கலந்துகொள்கிறார்கள் என்ற விவரம் ஞாயிற்றுக்கிழமைதான் தெரியவரும்.
Presentational grey line

 

பிக்பாஸ் சீசன் 6இல் பார்வையாளர்களிலிருந்தும் சிலர் கலந்துகொள்வதற்காக ஏற்கனவே ஆடிஷன் நடத்தப்பட்டுள்ளது. எனவே, பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் தரப்பிலிருந்தும் சிலர் இந்த சீசனில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பமாவதற்கு பல நாட்கள் முன்பே, அதுகுறித்த ப்ரொமோக்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

அதில், ஒரு ப்ரொமோவில் கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டை காட்டுடனும் போட்டியை வேட்டையுடனும் ஒப்பிட்டு பேசியிருந்தார்.

“காடுன்னு ஒன்னு இருந்தா ராஜான்னு ஒருவர்தானே இருக்க முடியும்… ஆனால், இந்த வீட்டில் கடைசியாக யார் மிஞ்சியிருக்கப் போறதுன்னு முடிவு பண்றது, அவங்க இல்ல…நீங்க” என பார்வையாளர்களை நோக்கி விரல் நீட்டுகிறார் கமல்.

பார்வையாளர்களிலிருந்தும் சிலர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ப்ரொமோவில், “உங்களில் இருந்தும் சிலர் விளையாட வராங்க… வரவேற்க தயாராகுங்க” என்கிறார் கமல்ஹாசன்.

பிரபலங்களும் பார்வையாளர்களின் பிரதிநிதிகளாக செல்பவர்களும் ஒருவருக்கொருவர் எப்படி ஒத்துப்போகின்றனர் அல்லது அவர்களுக்குள் போட்டி எப்படி இருக்கும் என்பதை பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

இணையத்தில் போட்டியாளர்கள் குறித்த ஊகங்கள் தவிர்த்து பிக்பாஸ் சீசன் 6 வீடு குறித்த புகைப்படங்களும் உலா வருகின்றன. எல்லா சீசன்களை போலவே இந்த சீசனிலும் நீச்சல் குளம், ஜெயில் போன்றவை இருக்கலாம்.

தினமும் இரவு 9.30 மணிக்கு ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சி, வார இறுதி நாட்களில் மட்டும் ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பாகும். இதுதவிர, 24 மணிநேரமும் பிக் பாஸ் நேரலை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும்.

மீண்டும் கமல்ஹாசன்

இதுவரை நடந்துமுடிந்த 5 சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 முடிவடைந்த பின், ஏற்கெனவே பிக் பாஸின் முந்தைய சீசன்களில் கலந்து கொண்டவர்களை வைத்து ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சியும் இடையே நடத்தப்பட்டது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிவந்த நிலையில், ‘விக்ரம்’ இறுதிகட்ட படப்பிடிப்பின் காரணமாக அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.

அவருக்கு பதிலாக, நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது சீசன் – 6ஐ கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.


‘விக்ரம்’ திரைப்பட வெற்றி, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பின்னணிக் குரல் இவை இரண்டுக்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அரசியல் ரீதியாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக, தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்குதல், சமீபத்தில் கோவையில் நடைபெற்ற குண்டுவீச்சு சம்பவங்களை சுட்டிக்காட்டி கலவரத்தைத் தூண்டுவோரை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அறிக்கைகள் வாயிலாக விடுத்து வருகிறார் கமல்ஹாசன்.

தவிர, சமீபத்தில் வெற்றிமாறன் ‘ராஜராஜ சோழனை இந்து மன்னனாக அடையாளப்படுத்தும் போக்கு’ குறித்த கேள்வி ஒன்றுக்கு ஊடகவியலாளர் சந்திப்பில் பதிலளித்திருந்த கமல்ஹாசன், “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற ஒன்றே இல்லை” என தெரிவித்து அவருக்கு ஆதரவாக பேசினார்

Share.
Leave A Reply

Exit mobile version