திருவாரூர் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் நெடுஞ்சாலைதுறை தங்கும் அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 75 லட்சத்தை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதில் திருவாரூர் மாவட்ட ஐந்து உட்கோட்ட எல்லைகளில் ஒப்பந்தம் எடுத்து பணி செய்பவர்களிடம் ஐந்து சதவீதம் கமிஷனாக அந்தந்த உட்கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் என அதிகாரிகளுக்கு தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது.

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏவுமான கலைவாணன்

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் கைப்பற்றப்பட்ட கமிஷன் பணம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான பூண்டி கலைவாணனுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது எனவும் ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் நெடுஞ்சாலை துறையினர்

தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக திருவாரூர் நெடுஞ்சாலை துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் உதவிகோட்ட பொறியாளராக பணிபுரியும் ஒருவரிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் ஸ்டேட்மென்ட் வாங்கியுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

மேலும் அந்த ஸ்டேட்மென்ட் வாட்ஸ்அப்பில் பரவியதால் இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்கிறார்கள். மேலும் அதிகாரிகள் சோதனையிட சென்றபோது கலைவாணனின் மூத்த மகன் கலை.அமுதனும் அலுவலகத்தில் இருந்துள்ளார்.

ரூ. 75 லட்சத்தை வாங்கவே அவர் சென்றதாகவும், அதிகாரிகள் சோதனை செய்வதை அறிந்து கொண்டு வேறு வேலைக்கு சென்றது போல் திரும்பி சென்று விட்டதாகவும் தகவல்கள் பரவியது.

இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். “சோதனையில் ரூ. 75 லட்சம் சிக்கியது உண்மை தான்.

அது தொடர்பான விசாரணை தொடர்ந்து வருகிறது” என்பதோடு மட்டும் முடித்துக் கொண்டனர். மேலும் சிலரோ, இந்த விவகாரத்தை வெளியே தெரியாமல் அமுக்குவதற்கான முயற்சிகள் நடக்கிறது எனத் தெரிவித்தனர்.

வாட்ஸ்அப்பில் வெளியானதாக சொல்லப்படும் ஸ்டேட்மென்ட்

இது குறித்து கலைவாணனிடம் பேசினோம், “அதிகாரிகள் சோதனைக்கு சென்ற நேரத்தில் என் மகன் கலை.அமுதன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்காக நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்தார்.

நீங்க கையெழுத்து போட்டுட்டு போங்கனு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உங்களை சோதனை செய்யலாமானும் கேட்டுள்ளனர்.

தாராளமாக செக் செஞ்சுக்க சொல்லி கார் கதவை எல்லாம் திறந்து காட்டி முழு ஒத்துழைப்பு கொடுத்து விட்டு வந்தார். சோதனையின் போது சில ஒப்பந்தகாரர்களும் அப்போது அங்கு இருந்துள்ளனர்.

பின்னர் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து நானும் கேள்விப்பட்டேன். அதிகாரிகள் கைப்பற்றிய பணம் எதற்கு வைத்திருந்தது என எனக்கு தெரியவில்லை” என்று முடித்துக் கொண்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version