இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கார்கே 7897 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகளைப் பெற்றார் என்று இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

24 ஆண்டுகளுக்கு பின் நேரு – காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகியுள்ளார். இதற்கு முன் நேரு – காந்தி குடும்பத்தைச் சேராத சீதாராம் கேசரி 1996-98 காலகட்டத்தில் இப்பதவியில் இருந்தார்.

தற்போது 80 வயதாகும் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநில அரசியலில் காங்கிரசின் முக்கியத் தலைவராக இருந்தவர். கர்நாடகாவிலும், தேசிய அளவிலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலித் முகமாக உள்ளவர் கார்கே.

 

மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர், ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவர் தலைவர் பதவிக்கான தேர்தலில் வென்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.1

மல்லிகார்ஜுன கார்கேவின் அரசியல் பயணம்

1972 முதல் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து ஒன்பது முறை வெற்றி பெற்ற அவர் 2009 மற்றும் 2014இல் குல்பர்கா மக்களவைத் தொகுதியில் வென்று இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வானார்.
அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டபோது 2019இல் அவர் தோல்வியடைந்தார். பின்னர் 2021இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார்.

கர்நாடகாவில் வெவ்வேறு காங்கிரஸ் அரசுகளில் அமைச்சர் பொறுப்பு வகித்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் வென்றபின் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தார்.

2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. 2014-2019 காலகட்டத்தில் காங்கிரஸ் மக்களவைக் குழுவின் தலைவராக இருந்தார்.


மல்லிகார்ஜுன கார்கே

 

2021இல் மாநிலங்களவைக்குத் தேர்வான பின் அந்த அவையின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முன், ஒருவர் இரண்டு பதவிகள் வகிக்கக் கூடாது என்ற கட்சி விதியின் அடிப்படையில் அவர் அப்பதவியில் இருந்து விலகினார்.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு அக்கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த ராகுல் காந்தி அப்பதவியில் இருந்து விலகினார்.

பின்னர் சோனியா காந்தி இடைக்கால தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். சுமார் மூன்று ஆண்டுகள் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக இருந்தபின் தலைவர் பதவிக்கு உள்கட்சித் தலைவர் தேர்தல் நடந்தது.

களத்தில் கடை நேரத்தில் நுழைந்த கார்கே


மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி

சசி தரூரை எதிர்த்து போட்டியிட்டு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோத் காங்கிரஸ் தலைவராக வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளதாக முதலில் கருதப்பட்டது.

எனினும், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்டதால் நேரு – காந்தி குடும்பத்தின் அதிருப்திக்கு உள்ளானார் என்று செய்து வெளியானது. பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகினார்.

பின்னர் எதிர்பாரா விதமாக மல்லிகார்ஜுன கார்கே களத்தில் கடை நேரத்தில் நுழைந்தார்.

நேரு – காந்தி குடும்பத்தின் ஆதரவைப் பெற்றவர் இவர்தான் என்று செய்திகள் வெளியானாலும், தங்கள் நடுநிலைமை வகிப்பதாகவே சோனியா காந்தி கூறினார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version