Site icon ilakkiyainfo

உக்ரேனைக் கலங்கடிக்கும் ஈரானிய ஆளிலிகள் (Drones)

உலகெங்கும் படைக்கலன்களை விற்பனை செய்யும் இரசியா உக்ரேனுக்கு எதிரான போருக்கு ஈரானிடமிருந்து ஆளிலி விமானங்களை (Drones) வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரானியர்கள் கிறிமியா சென்று ஆளிலிகளை இயக்கும் பயிற்ச்சியை இரசியர்களுக்கு வழங்குகின்றனர்.

2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானிய ஆளிலிகளைப் பாவித்து உக்ரேனிடமுள்ள இரண்டு 122-mm self-propelled Howitzers ஏவுகணைச் செலுத்திகளையும் இரண்டு 152mm Howitzers ஏவுகணைச் செலுத்திகளையும் சில காலாட்படை வண்டிகளையும் இரசியா அழித்தது.

இது ஈரானின் ஆளிலிகளை இரசியா தேர்வுக்கு உட்படுத்திய நிகழ்வாகும். ஈரானிய ஆளிலிகளி சிறப்பாக தாக்குதல்கள் செய்தமையைத் தொடர்ந்து இரசியா ஈரானிடமிருந்து 2400 Shaheds-136 (Kamikaze) ஆளிலிகளை வாங்குவதாக 2022 ஒக்டோபர் 11-ம் திகதி செய்திகள் வெளிவந்தன.

Shaheds ஆளிலிகள் உக்ரேனிற்கு பல இழப்புக்களை 2022 ஒக்டோபர் மாதம் 17-ம் திகதி ஏற்படுத்தின. இரசியா ஏவிய 43 ஆளிலிகளில் 37 சுட்டு வீழ்த்தப்பட்ட்ன.

ஆறு பல குடிசார் நிலைகள் மீது தாக்குதல் செய்தன. உக்ரேன் போரில் தமது ஆளிலிகள் பாவிக்கப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.

ஆளிலிகள் இலக்கைத் தாக்கி தம்மையும் அழித்துக் கொள்வதால் அவை தற்கொலை ஆளிலிகள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது இது போன்ற வானூர்திகளை Kamikaze என அழைத்தனர்.

பறக்கும் புல் வெட்டிகள் – Flying Lawn Mowers

ஈரான் உற்பத்தி செய்த பதினொரு அடி நீளமான Shaheds-136 ஆளிலிகள் அதன் இரைச்சல் காரணமாக பறக்கும் புல்வெட்டிகள் (Lawn Mowers) என அழைக்கப்படுகின்றன.

இரசியர்கள் அவற்றை Mopeds என அழைக்கின்றனர். இவற்றின் இயந்திரம் double stroke engine என்பதால் இரைச்சல் அதிகம்.

இவை தன் இலக்கை நோக்கி புவியீர்ப்பு விசையுடன் தன் உந்து விசையையும் சேர்த்து அதிக வேகத்தில் மோதி தன்னையும் அழித்து இலக்கையும் அழிக்க வல்லது.

இது 88 இறாத்தல் வரையிலான குண்டுகளைத் தாங்கி சென்று வெடிக்க வைக்கும். இதன் இரைச்சலும் குறைந்த வேகத்தில் பறப்பதும் அதை இலகுவாக அழிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ஆனால் இருபதினாயிரம் டொலர்கள் பெறுமதியான Shaheds ஆளிலிகள் இரசியாவைப் பொறுத்த வரை மலிவானவையாகும்.

அதனால் இரசியா அளவில் அதிகமான Shaheds ஆளிலிகளை இரசியா உக்ரேன் இலக்குகள் மீது ஏவுகின்றது. அதில் 85% உக்ரேனியர்களால் அழிக்கப்படுகின்றன.

ஏனையவை தப்பிச் சென்று தம் இலக்குகளை அழிக்கின்றன. ஈரானின் Shaheds ஆளிலிகளின் இயந்திரம் double stroke engine என்பதால் சிறிய அளவு வெப்பத்தை மட்டும் உமிழ்கின்றது.

அத்துடன் மிகக் குறைந்த உயரத்தில் அவை பறக்கின்றன. அதனால் ரடார்களுக்கு புலப்படாமல் அவை பறக்கின்றன.

இரசியா Shahedஇன் ஆகப் பிந்திய வகையான Shahed-136ஐ பாவிக்கின்றது. இவற்றை இரசியா ஆக்கிரமித்த உக்ரேனிய நிலப்பரப்பில் இருந்து ஈரானியர்களே இயக்குகின்றனர் எனச் சொல்லப்படுகின்றது.

ஈரானிய ஆளிலிகள் பொதுமக்கள் பவிக்கும் பூகோள இடமறி முறைமையை (Global Positioning System – GPS) பாவிக்கின்றன. அதனால் அவற்றின் செயற்பாட்டை குழப்புவது (Jamming) இலகுவானதாகும்.

உக்ரேனுக்கு பின்னடைவு

அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கிய M-31 HIMARS M-142 HIMARS என்ற High Mobility Artillery Rocket System மிகவும் நகரக் கூடிய தொலைதூர பல் குழல் ஏவுகணைச் செலுத்திகள் ஆகும்.

இவற்றை உக்ரேன் பாவித்து உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்க்கீவ் பகுதியிலும் தென் பகுதியில் உள்ள கேர்சன் பகுதியிலும் இரசியப் படைகள் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

உக்ரேனியப் படைகள் 8500 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பை மீளக் கைப்பற்றிக் கொண்டன.

இரசியப் படைகள் இவ் ஏவுகணைச் செலுத்திகள் மீது ஈரானிய உற்பத்தி ஆளிலிகள் மூலம் தாக்குதல் செய்யத் தொடங்கியதில் இருந்து உக்ரேனியப் படைகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டது.

உக்ரேனியத் தலைநகர் கீவ்வில் அப்பாவிப் பொதுமக்களின் இலக்குகள் மீதும் உட்-கட்டுமானங்கள் மீதும் பெரும் சேதம் ஏற்படுத்தின என உக்ரேன் குற்றம் சாட்டுகின்றது.

குளிர் காலத்திற்கு முன்னர் உக்ரேனின் எரிபொருள் சேமிப்பு நிலைகள் மீது ஈரானிய ஆளிலிகளால் தாக்குதல் செய்து உக்ரேனியர்களுக்கு பெரும் பாதிப்பை இரசியா ஏற்படுத்தலாம்.

உக்ரேனின் எப்பாகத்தையும் தாக்கலாம்.

அண்மைக் காலங்களின் போர் முனையில் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ஆளிலிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

2020-ம் ஆண்டு நடந்த அஜர்பையான் – ஆர்மீனியப் போரிலும் உக்ரேன் போரின் ஆரம்பத்திலும் துருக்கிய தயாரிப்பு ஆளிலிகள் எதிரிக்கு கடும் சேதத்தை விளைவித்தன.

ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்ட உக்ரேனை ஈரானிய ஆளிலிகளிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமானதாக அமையும் என படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

Shahed-136

ஈரானின் Shahed-136 ஆளிலிகள் தாழமாகப் பறப்பதாலும் அவற்றை ரடார்களால் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கின்றது.

இரசியாவின் மொஸ்க்கோ நகரத்தில் இருந்து கொண்டே உக்ரேனின் எப்பாகத்தையும் Shahed-136 ஆலிலிகளால் தாக்க முடியும்.

தற்போது உக்ரேன் பாவிக்கும் சோவியத் ஒன்றியகால தயாரிப்பான S-300 வான் பாதுகாப்பு முறைமையால் தாழப்பறக்கும் ஆளிலிகளை இனம் கண்டு அழிக்க முடியாது.

உக்ரேனுக்கு உதவிகள் கிடைக்கும்

உக்ரேனில் ஈரானிய ஆளிலிகளும் இரசிய ஏவுகணைகளும் பெரும் சேதம் விளைவிப்பதால் அவற்றில் இருந்து தம்மைப் பாதுகாக்க SAMP-T System புதிய வான்பாதுகாப்பு முறைமைகளை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வழங்க வேண்டும் என உக்ரேன் அதிபர் செலென்ஸ்கி அறிவித்திருந்தார்.

SAMP-T System பிரான்சும் இத்தாலியும் இணைந்து உற்பத்தி செய்த வான் பாதுகாப்பு முறைமையாகும்.

பிரான்ஸ் தனது வான்படைத் தளங்களை எதிரிகளின் பல்வேறு ஏவுகணைகள், விமானங்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்கு SAMP-T Systemகளைப் பாவிக்கின்றது.

SAMP-T System தரையில் இருந்து பார ஊர்தி மூலம் நகர்த்தப்படும் 30 ஏவுகணைக் கொண்ட முறைமையாகும்.

அந்த ஏவுகணைகள் இரண்டரை செக்கண்ட்களில் ஒலியிலும் பார்க்க 4.5மடங்கு வேகத்தைப் பெறக் கூடியது.

பிரான்சும் இத்தாலியும் இவற்றை உக்ரேனுக்கு வழங்கவிருக்கின்றன. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிகாவின் Phalanx Weapon Systemஐ உக்ரேனுக்கு வழங்குவதைத் துரிதப்படுத்தும் படி அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

இரசியாவிடம் துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அது ஈரானிடமிருந்து படைக்கலன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் உக்ரேன் போரில் அதிகம் தலையிடுவதும் அதன் படைக்கலன்கள் சிறப்பாகச் செயற்படுவதையும் இஸ்ரேல் கவனித்துக் கொண்டிருக்கின்றது.

-வேல்தர்மா-

Exit mobile version